பாஜக நகரமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்த மூன்றாவது குழந்தை: இந்த சட்ட சிக்கல் பெண்ணுரிமைக்கு ஆபத்தா?

பட மூலாதாரம், Shahbaz Anwar/BBC
- எழுதியவர், ஷாபாஸ் அன்வர்
- பதவி, பி பி சி ஹிந்திக்காக
"நகராட்சி கவுன்சிலர் பதவியை விட எனக்கு என் குழந்தை தான் முக்கியம் என்று முடிவெடுத்தேன். உண்மையைச் சொன்னேன். பதவி ஆசையில் என் கர்ப்பத்தைக் கலைக்கத் துணியவில்லை. எனக்கு மூன்றாவது குழந்தை பிறந்ததால் ஜூலை 13 அன்று எனது நகராட்சி உறுப்பினர் பதவி பறிபோனது. நான் அரசியலில் முன்னேற விரும்புகிறேன், ஆனால் இப்போது என்னால் தேர்தலில் போட்டியிட முடியாது. இது தான் பெண்களுக்கு அதிகாரமளிப்பதா?"
இந்தக் கேள்வியைக் கேட்பவரின் பெயர் நீதா பாஞ்சால். உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வார், லக்சர் நகரமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலக நேர்ந்தவர் இவர். ஷிவ்புரி நான்காவது வார்டில் இருந்து இரண்டாவது முறையாக பாஜக சார்பில் நகரமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதா தொடர்பாக உ.பி. உள்ளிட்ட சில மாநிலங்களில் சர்ச்சை தொடங்கியுள்ள இந்த நேரத்தில், மூன்றாவது குழந்தையைப் பெற்றதால், நீதா பாஞ்சாலின் உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. ஆனால் உத்தராகண்டில், உள்ளாட்சி அமைப்பில் அதிகபட்சம் இரண்டு குழந்தைகள் என்ற நிபந்தனை கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உத்தராகண்ட் உயர்நீதிமன்றத்தின் வழக்குரைஞரும், நைனிடால் பார் அசோசியேஷனின் பொதுச் செயலாளருமான தீபக் ரூவாலி, "உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சிப் பிரதிநிதிகளுக்கு அதிகபட்சம் இரண்டு குழந்தைகள் தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை ஜூலை 2002 முதல் நடைமுறையில் உள்ளது." என்று தெரிவிக்கிறார்.
இந்த சட்டத்தால் ஒரு பெண் பாதிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று அவர் கூறுகிறார்.
நீதா மீதான நடவடிக்கை
உத்தரகண்ட் மாநிலத்தில் 2002 முதல் இச்சட்டம் நடைமுறையில் இருந்திருக்கலாம், ஆனால், அவர் மீது புகார் அளிக்கப்படும் வரை நீதா பாஞ்சாலின் உறுப்பினர் பதவி பறிக்கப்படவில்லை.
அவரது உறுப்பினர் பதவி பறிக்கப்பட வேண்டும் என்று கோரும் ரிட் மனு 2020 ஆகஸ்ட் மாதம் நைனிடால் உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ரிட் மனுவை லக்சரின் ஷிவ்புரியில் வசிக்கும் பங்கஜ் குமார் பன்சல் என்பவர் தாக்கல் செய்தார்.
பங்கஜ் குமார் பன்சல் ஷிவ்புரியில் ஒரு மளிகைக் கடை வைத்திருந்தார். நீதா பாஞ்சால் புகார் தந்ததால் அந்தக் கடை முடக்கப்பட்டது என்று ஆகஸ்ட் 2020-ல் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
நீதா பாஞ்சாலின் கணவர் விஜேந்திர பாஞ்சால், "என் மனைவி அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வைத்தார். அதன் பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால்தான் அவர் எங்கள் மீது புகார் செய்திருக்கிறார்," என்று தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், Shahbaz Anwar/BBC
இதையடுத்து நடந்த விசாரணையின் அடிப்படையில், 2021 ஜூலை 13 ஆம் தேதி நகர்ப்புற மேம்பாட்டு இயக்குநரகம் நீதா பாஞ்சாலைப் பதவி விலகுமாறு அறிவுறுத்தியது.
லக்சரின் உட்கோட்ட மாஜிஸ்திரேட் (சார் ஆட்சியர்) ஷைலேந்திர சிங் நேகி, "இந்த விஷயத்தை எனக்கு முன்பு இங்கு இருந்த எஸ்.டி.எம் விசாரித்தார். நீதா பாஞ்சால் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக ஊடகங்கள் மூலம்தான் எனக்கும் தகவல் கிடைத்துள்ளது." என்று கூறுகிறார்.
நீதா பாஞ்சலின் உறுப்பினர் பதவி பறிப்பு குறித்து கூறிய லக்சர் நகராட்சித் தலைவர் அம்ப்ரிஷ் கர்க், "நீதா வேட்பு மனு தாக்கல் செய்த போதும் அவர் பதவியேற்கும் போதும் அவருக்கு இரண்டு குழந்தைகள்தான் இருந்தன," என்று குறிப்பிடுகிறார்.
"லக்சரில் உள்ளாட்சி தேர்தல்கள் நவம்பர் 2018 இல் நடைபெற்றன. வேட்பு மனு தாக்கல் செய்த நாளிலிருந்து அவர் பதவியேற்கும் வரை நீதாவுக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமே இருந்தன. ஆனால் அவரது மூன்றாவது குழந்தை பிறந்த பிறகு அவரது உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. அவரது பதவிக்காலத்தில் பாதி மீதமிருந்தது." என்றும் அவர் தெரிவிக்கிறார்.
சட்டம் என்ன சொல்கிறது?
பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கு எதிரானதாக இந்த முடிவை நீதா பாஞ்சால் கருதுகிறார்.
"எதிர்காலத்தில் அரசியலில் முன்னேறி, பொது சேவை செய்ய வேண்டும் என்பதே எனது கனவு. நகராட்சி கவுன்சிலராக நானும் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டேன், ஆனால் மூன்றாவது கர்ப்பம் பற்றி அப்போது எனக்கே தெரியாது. நான் என்ன செய்வேன், நான் கருக்கலைப்பா செய்ய முடியும்? நான் பேராசை கொள்ளவில்லை. மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்தேன். இப்போது எனது உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டு விட்டது," என்கிறார் அவர்.
நீதா பாஞ்சாலின் உறுப்பினர் பதவி பறிப்பு குறித்து அவர் கணவர் விஜேந்திர பாஞ்சாலும் வருத்தம் தெரிவிக்கிறார்.
"எனது மனைவி ஆரம்பத்தில் இருந்தே பொதுச் சேவையைச் செய்து வருகிறார். ஒரு புகாரையடுத்து, நீதாவின் உறுப்பினர் பதை ரத்து செய்யப்பட்டது. ஒரு பக்கம் கர்ப்பத்தில் குழந்தை, இன்னொரு பக்கம், உறுப்பினர் பதவி பறிபோகுமா என்ற அச்சம். ஆனாலும் நாங்கள் குழந்தையைப் பெற்றெடுத்தோம். " என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
விஜேந்திர பாஞ்சால் மேலும், "எனது மனைவியின் உறுப்பினர் பதவி எந்தச் சட்டத்தின் கீழ் பறிக்கப்பட்டதோ, அதே சட்டத்தின் ஒரு உட்பிரிவின் படி, ஒரு எச்சரிக்கை விடுத்தும் விட்டிருக்கலாம். உள்ளாட்சித் தேர்தல்கள் 2018 நவம்பரில் நடைபெற்றது. டிசம்பர் 2 ஆம் தேதி, என் மனைவி உறுப்பினராகப் பதவியேற்றார், அதன் பிறகு 2019 நவம்பர் 15 ஆம் தேதி, மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்தார். இதன் அடிப்படையில், நீதிக்காக நாங்கள் போராடுவோம். நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவோம்," என்று கூறுகிறார்.
உத்தரகண்ட் மாநிலத்தில், உள்ளாட்சி அமைப்பு மற்றும் கிராம பஞ்சாயத்து தேர்தல்களில் பிரதிநிதிகளுக்கு அதிகபட்சம் இரண்டு குழந்தைகள் தாம் என்ற சட்டம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்ட ஆலோசனை பெற அறிவுறுத்தல்
உத்தராகண்ட் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் விஜயா பர்த்வால், இது குறித்துக் கருத்து தெரிவித்தார். அவர், "ஒரு விதி இருக்கிறதென்றால், உதாரணமாக, இடஒதுக்கீடு குறித்த விதியை நாம் எப்படி ஏற்றுக்கொள்கிறோமோ அப்படியே இதையும் பின்பற்றத்தான் வேண்டும். இது அனைவருக்கும் பொருந்தும். இந்த விஷயத்தைப் பொறுத்தவரை அவர்கள் சட்டபூர்வமான ஆலோசனையைப் பெறவே நான் பரிந்துரைப்பேன், " என்கிறார்.
அரசியல் மூலம் சமூக சேவை செய்ய விரும்பும் நீதா போன்ற பல பெண்கள் இந்தச் சட்டத்தால் பாதிக்கப்படலாம் என்று உத்தராகண்ட் மாநில பெண்கள் ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் அமிதா லோகானி கருதுகிறார்.
நீதா பாஞ்சால் பற்றி குறிப்பிடுகையில், அமிதா லோகானி, "ஒருபுறம் நாம் பெண்கள் அதிகாரம் பற்றிப் பேசுகிறோம், மறுபுறம் நீதா போன்ற ஒரு பெண்ணின் உறுப்பினர் தகுதியை ரத்து செய்கிறோம். இது தவறு. நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஒரு நியாயமான முடிவை எடுக்க வேண்டும். " என்று கூறுகிறார்.
மக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட்டம் பற்றிய விவாதம் குறித்து கேட்டபோது, "இந்தச் சட்டம் சிறந்தது, ஆனால் அது சூழ்நிலைகளின் அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டும்" என்கிறார் அவர்.
அதே நேரம், ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
நீதா பாஞ்சால் கர்ப்பமான போதே அவருக்கு இந்த மூன்றாவது குழந்தை பிறாந்தால், பதவிக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதை அறிந்திருப்பார். பதவிக்குப் பதிலாகத் தனது குழந்தையைத் தேர்ந்தெடுத்ததாகவும் அவரே கூறினார். ஆனால் ஒவ்வொரு விஷயத்திலும் ஆண்கள் மற்றும் பெண்களின் சிந்தனை இப்படியே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்பது உத்தராகண்ட் குழந்தைகள் மேம்பாட்டுக் குழுவின் முன்னாள் தலைவர் கவிதா சர்மாவின் கருத்து.

பட மூலாதாரம், Shahbaz Anwar/BBC
மேலும் கவிதா சர்மா கூறுகையில், "பல பெண்களும் ஆண்களும் மிகவும் லட்சியவாதிகளாக இருக்கிறார்கள். அதுபோன்ற சூழ்நிலைகளில், மூன்றாவது குழந்தை பிறக்குமோ என்ற அச்சத்தில் அவர்கள் தங்கள் ஆசைகளுக்கும் முன்னேற்றத்திற்கும் இடையூறு ஏற்படுமோ என்ற அச்சத்தில் தவறான பாதைகளைத் தேர்வு செய்யலாம், ஆனால் மக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட்டமும் தற்காலத்தின் கட்டாயமாகவே இருக்கிறது. ஆனால், பெண்களின் உரிமைகளைக் கருத்தில் கொண்டு சில நிபந்தனைகளும் இதில் சேர்க்கப்பட்டால் நல்லது," என்று கருத்து தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- எஸ்.பி.வேலுமணிக்கு சிக்கலா? ரத்தாகும் மாநகராட்சி ஒப்பந்தங்கள்
- கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலகினார் எடியூரப்பா - அடுத்தது என்ன?
- இந்தியாவின் பல தளங்களில் சீர்திருத்தம் அவசியம்: ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் ரங்கராஜன்
- ஆதிச்சநல்லூரை முக்கிய சின்னமாக எப்போது அறிவிக்கும் இந்திய அரசு?
- ஐபிஎல் 2021: சிஎஸ்கே Vs மும்பை அணி மோதலுடன் செப்டம்பரில் போட்டி - அட்டவணை இதோ
- எடியூரப்பா பதவியில் இருந்து விலக கேட்டுக் கொள்ளப்படுவாரா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












