கொரோனா தாக்கியவர்களுக்கு காசநோய் பரிசோதனை: மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரை

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு காச நோய் சோதனையும், காச நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யுமாறு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காச நோய் தொற்று ஏற்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. கடந்த ஆகஸ்ட் 2020-லேயே காச நோய் மற்றும் கொரோனா வைரஸ் நோய் தொற்றை கண்காணிக்கவும், பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கவும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களிடம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது என சனிக்கிழமை வெளியிடப்பட்ட மத்திய சுகாதார அமைச்சகத்தின் செய்தி அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

"கடந்த 2020ஆம் ஆண்டில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளால் காச நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சுமார் 25 சதவீதம் சரிந்தது. இதைக் கடந்து நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க பிரத்யேக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என அதில் கூறப்பட்டு இருக்கிறது.

பரிசோதனை

பட மூலாதாரம், Getty Images

காச நோய் மற்றும் கொரோனா வைரஸ் ஆகிய இரண்டுமே எளிதில் பரவக் கூடியது. இரு நோய்களுமே மனிதர்களின் நுரையீரலை பாதிக்கக் கூடியது. இருமல், காய்ச்சல், சுவாசிப்பதில் சிக்கல் போன்ற அறிகுறிகள் இரு நோய்களுக்குமே பொதுவானது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட கூடுதல் காலத்துக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டி இருக்கும் என்கிறது மத்திய சுகாதார அமைச்சகம்.

மேலும் "காச நோய் ஒருவர் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகும் வரை காத்திருந்து, பிறகு பரவத் தொடங்கலாம். இது கொரோனா சிகிச்சைக்குப் பிறகான காலத்திலும் ஏற்படலாம். கொரோனா வைரஸாலோ, ஸ்டீராய்டு மருந்துகளாலோ ஒருவர் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகலாம்" என்கிறது அவ்வறிக்கை.

"கொரோனா நோய் தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு, காச நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. காச நோயும் கருப்புப் பூஞ்சையைப் போல சமயம் பார்த்து பரவும் தொற்று" என அவ்வறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :