"பெரிய மார்பகம் இல்லை": பிரிட்டன் ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனைகள் எதிர்கொள்ளும் விமர்சனம்

கேட் & இஸ்ஸி

பட மூலாதாரம், BLUEBELLA.COM

படக்குறிப்பு, கேட் & இஸ்ஸி - குறிப்பிட்டபடி தோன்றுவதற்கல்ல விளையாட்டு.
    • எழுதியவர், டாம்ஸ்யன் கென்ட்
    • பதவி, நியூஸ்பீட் செய்தியாளர்

நம்மில் பலரும் நல்ல தடகள வீரர்களைப் போல உடல்வாகு இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறோம்.

ஆனால் அப்படிப்பட்ட உடல்வாகு கொண்ட நீச்சல் விளையாட்டு வீராங்கணைகளான கேட் ஷார்ட்மென் மற்றும் இஸ்ஸி தோர்ப் ஆகியோர் தங்கள் உடல்வாகு சார்ந்து மோசமான விமர்சனங்களை எதிர்கொள்கின்றனர்.

19 வயதான கேட் மற்றும் 20 வயதான இஸ்ஸி டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் ஆர்ட்டிஸ்டிக் ஸ்விம்மிங் என்கிற விளையாட்டில் பிரிட்டன் சார்பாக கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

"பெரிய தோள்பட்டைகள், சிறிய மார்பகங்கள், சிறிய புட்டங்கள்" என்று தங்கள் உடல் குறித்து விமர்சிக்கப்படுவதாக கேட் மற்றும் இஸ்ஸி இருவரும் கூறுகின்றனர்.

கடந்த பத்து ஆண்டுகளாக கடுமையான உடற்பயிற்சிகள், அதிவேக நீச்சல், பளு தூக்குதல், நடனம், ஜிம்னாஸ்டிக் என பல்வேறு பயிற்சிகளால் அவர்களின் உடல்கள் விளையாட்டுக்கு பக்குவப்பட்டிருக்கின்றன.

"ஆண் தன்மையோடு தோற்றமளிக்கிறீர்கள்" என தங்களைப் பார்த்து பலமுறை கூறியிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள் இந்த ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனைகள்.

"பொதுவாகவே நீச்சல் வீரர்களுக்கு தோள்பட்டைகள் மிகப் பெரிதாக இருக்கும். நான் சிறுவயதிலேயே என் தோள்பட்டையை மறைக்கும் விதத்தில் ஆடைகளை அணிந்து கொள்வேன். தளர்வான ஆடைகளை அணிந்து கொண்டால் என் பெரிய தோள்பட்டைகள் அதிக கவனம் ஈர்க்காது" என்கிறார் இஸ்ஸி.

"நான் சமூக வலைதளங்களில் படங்களைப் பகிர்கிறேன் என்றால், எதிர்மறையான கருத்துக்கள் வராத அளவுக்கு படத்தை சரி செய்து பதிவிடுவேன்."

உடல்வாகு சார்ந்த விமர்சனங்கள் பள்ளி மற்றும் பயிற்சி அரங்கிலும் எழுந்தன.

Instagram பதிவை கடந்து செல்ல
Instagram பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

Instagram பதிவின் முடிவு

"பொது நீச்சல் குளங்களுக்கு வரும் மக்கள் 'உங்கள் ஆடையை சரி செய்து கொள்ள முடியுமா' என கூறுவார்கள்" என்கிறார் கேட்..

"நாங்களும் எல்லோரைப் போலதான் ஆடை உடுத்துவோம். எங்கள் உடல் வாகு காரணமாக, அணியும் ஆடை இடுப்புப் பகுதியில் சற்று உயரமாக பொருந்திக் கொள்ளும்"

"ஆண்கள் ஸ்பீடோஸ் என்றழைக்கப்படும் உள்ளாடையோடு நடந்து வந்தால் பரவாயில்லை, ஆனால் பெண்கள் தங்கள் உடலை வெளிக்காட்டும் விதத்தில் ஆடை அணிந்தால் அது தவறாகப் பார்க்கப்படுகிறது. இது கேலிக்குரியது" என்கிறார் கேட்.

ஒலிம்பிக் வீராங்கணையான இவர்கள், இந்த விமர்சனங்களோடு வாழவும், தங்கள் உடல்வாகை பெருமையாக ஏற்றுக்கொள்ளவும் பழகிக் கொண்டார்கள்.

"ஒரு வாரத்தில் 40 மணி நேரம் நீங்கள் பயிற்சி மேற்கொள்ளும் போது இயற்கையாகவே உங்கள் உடல்வாகு மாறிவிடும்" என்கிறார் இஸ்ஸி.

"நீங்கள் ஒரு விளையாட்டை விளையாடுகிறீர்கள். நீங்கள் ஒரு குறிப்பிட்ட வகையில் காணப்பட வேண்டும் என்பதற்காக விளையாடவில்லை" என்கிறார் இஸ்ஸி.

பிரிஸ்டலைச் சேர்ந்த இருவரும் பிரிட்டனைச் சேர்ந்த ப்ளூபெல்லா என்கிற உள்ளாடை நிறுவனத்தின் அழகுசாதன பிரசாரம் ஒன்றில் ஈடுபட்டடார்கள்.

கேட் & இஸ்ஸி

பட மூலாதாரம், KAREN THORPE

பெண்கள் மேம்பாட்டுக்கு உள்ளாடை ஃபோட்டோ ஷூட் உதவுமா என கேள்வி எழுப்பலாம். அதற்கு, தங்கள் உடல்வாகு குறித்து எந்த பெண்ணும் வெட்கப்படவோ வேதனைப்படவோ கூடாது என்கிறார்கள் அப்பெண்கள்.

"எங்களை பலரும் விமர்சித்தார்கள், ஆனால் இப்போது கொஞ்சம் உடல் தெரியும் ஆடைகளோடு புகைப்படங்கள் எடுக்க முடியும் என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்" என்கிறார் கேட்.

"மெலிந்த தேகம் கொண்டவர்களுக்கு மட்டுமே உடல் வாகு குறித்த பிரச்சனைகள் இல்லை. விளையாட்டு வீரர்கள் போன்ற உடல் வாகு கொண்டவர்கள், பெரிய உருவம் கொண்டவர்கள், சிறிய உருவம் கொண்டவர்கள் என பலருக்கும் இருக்கிறது".

"இன்று நாங்கள் இருக்கும் நிலை குறித்து பெருமைப்படுகிறோம். எங்கள் உடல் வாகு குறித்தும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்."

தங்கள் உடல் குறித்த நம்பிக்கையின்மையால், விளையாட்டைவிட்டு வெளியேறும் பெண்களுக்கு உதவ விரும்புகிறார்கள் இந்த வீராங்கனைகள்.

கேட் & இஸ்ஸி

பட மூலாதாரம், KAREN THORPE

எல்லா வயது வரம்பைச் சேர்ந்த ஆண்களும், பெண்களை விட அதிக அளவில் உடற்பயிற்சி செய்கிறார்கள் என சமீபத்தைய ஆய்வு ஒன்று கூறுகிறது.

14 - 16 வயதுக்கு உட்பட்ட பெண்களில், சுமார் 35 சதவீதத்தினர் நம்பிக்கையின்மையால் விளையாட்டுகளில் பங்கெடுப்பதில்லை என்கிறார்கள்.

பிரிட்டனில் தேசிய அளவில் இந்த பிரச்சனையை எதிர்கொள்ள பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக ஸ்போர்ட் இங்கிலாந்தின் #thisgirlcan என்கிற முன்னெடுப்பு, வலிமையாகவும் வியர்வையோடும் இருக்கும் தோற்றம் குறித்த பொது விழுமியங்களை உடைத்தெறிய முயல்கிறது.

இஸ்ஸி மற்றும் கேட் இருவரையும் தற்போது விமர்சனங்களால் தடுத்து நிறுத்த முடியாது. இந்த இருவரும் தற்போது ஜப்பானில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் முனைப்பில் இருக்கிறார்கள்.

"நாங்கள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளவிருப்பதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறோம். இது எங்கள் கனவு, எந்த ஒரு விஷயத்தாலும் அதை தடுக்க முடியாது" என்கிறார் இஸ்ஸி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :