இந்தியாவில் தடுப்பூசி விநியோகம் தொடங்கி 6 மாதங்கள்: இப்போதைய நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி வழங்கும் திட்டம் என்று இந்திய அரசு கூறும் முயற்சிகள் தொடங்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இதுவரை ஐந்து சதவிகிதத்துக்கும் சற்று அதிகமானவர்களுக்கே முழுமையாக (இரண்டு டோஸ்களும்) தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி நாளொன்றுக்கு சுமார் 40 லட்சம் பேருக்கு இந்தியாவில் தடுப்பூசி வழங்கப்படுகிறது. தடுப்பூசி பெறுவதற்கான தகுதி உடைய அனைவருக்கும் இந்த ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசி வழங்க வேண்டுமானால் தினசரி 80 லட்சம் முதல் 90 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்க வேண்டும்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் தடுப்பூசி வழங்கல் தொடங்கப்பட்ட நேரத்தில், இந்த முயற்சி நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்தாலும் பின்னர் ஏற்பட்ட தடுப்பூசி தட்டுப்பாடு, புதிய தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்ட தாமதம் ஆகியவை தடுப்பூசி விநியோகத்தின் வேகத்தைக் குறைத்தன.
பெரும்பாலான உலக நாடுகள், குறிப்பாக வளரும் நாடுகள், தடுப்பூசி பெற போராடுகின்றன. ஆனால், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடான இந்தியா இத்தகைய சோதனையை எதிர்கொள்ள நேரிடும் என்று எதிர்பார்க்கவில்லை.
நரேந்திர மோதி தலைமையிலான அரசு முன்கூட்டியே தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் ஆர்டர் கொடுக்கவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் உண்டான மிக மோசமான கொரோனா இரண்டாம் அலையால் தடுப்பூசி விநியோகத்தைத் துரிதப்படுத்த வேண்டிய சூழல் உண்டானது. தடுப்பூசி பெறத் தகுதியுடைய வயதில் இங்கு சுமார் 100 கோடி பேர் உள்ளனர்.
இந்தியா எவ்வாறு தடுப்பூசி வழங்குகிறது?
ஜனவரி மாதம் 16ஆம் தேதி தடுப்பூசி வழங்கல் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 39 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

சுமார் 31.5 கோடி பேருக்கு முதல் தவணை தடுப்பூசி மட்டும் கிடைத்துள்ளது. 7.9 கோடி பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளும் கிடைத்துள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவில் 38,949 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த மே மாத தொடக்கத்தில் இருந்த எண்ணிக்கையில் இது பத்தில் ஒரு பங்கை விட குறைவு.
கொரோனாவின் புதிய திரிபுகளின் அச்சுறுத்தல் அதிகரித்துக் கொண்டே போனாலும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் தொழில் மற்றும் அலுவல் நடவடிக்கைகள் முழுவீச்சில் நடக்கும் இந்தச் சூழலில் மூன்றாம் அலை வருவதைத் தடுக்க இயலாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நாள் தோறும் வழங்கப்படும் தடுப்பூசிகளின் சராசரி எண்ணிக்கை குறைந்து வருவதும் துறைசார் வல்லுநர்களை கவலைக்கு உள்ளாகியுள்ளது.
இதுமட்டுமல்லாமல் தடுப்பூசி வழங்கலில் பாலின ஏற்றத்தாழ்வும் உள்ளது. ஆண்களைவிட பெண்கள் 14% குறைவாக தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பதாக இந்திய அரசின் தரவுகள் காட்டுகின்றன.
இணையதள வசதிகள் குறைவாகவும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு அச்சம் அல்லது தயக்கம் நிலவும் சூழலவும் உள்ள கிராமப் பகுதிகளில் பாலின ஏற்றத்தாழ்வு அதிகமாக உள்ளது.
இந்தியாவின் கிராமப்புறங்களில் தடுப்பூசி வழங்கும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் நாள்தோறும் ஒட்டுமொத்தமாக வழங்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையில் விகிதத்தில் நகர்புறங்கள் கிராமப்புறங்களை விட அதிகமாக உள்ளன.

இத்தனை நாள் கழிந்த பின்னும் நமது நாட்டின் தடுப்பூசி வழங்கல் திட்டம் ஏன் இவ்வளவு மோசமாக உள்ளது என்று கேட்கிறார் டெல்லி மாநிலத்தின் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோதியா.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று டெல்லியில் தடுப்பூசிகள் முற்றிலும் தீர்ந்து போய் விட்டதால் தடுப்பூசி வழங்கும் மையங்கள் பலவும் மூடப்பட்டன என்று அவர் கூறுகிறார்.
ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் இடைப்பட்ட காலத்தில் 135 கோடி தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும் என்று இந்திய அரசு கடந்த ஜூன் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
தடுப்பூசி பெறும் தகுதியுடைய வயதினர் அனைவருக்கும் இரண்டு தடுப்பூசி வழங்க வேண்டுமானால் இந்தியாவில் சுமார் 180 கோடி தடுப்பூசி டோஸ்கள் தேவை.

இந்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் 5 தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் என்று ஒரு பட்டியலை அளித்தது.
- 50 கோடி டோஸ் கோவிஷீல்டு
- 40 கோடி டோஸ் கோவேக்சின்
- பயாலஜிக்கல்-இ நிறுவனத்தின் தடுப்பூசி 30 கோடி டோஸ்
- 10 கோடி டோஸ் ஸ்புட்னிக் வி
- சைடஸ் கேடில்லா நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்டு வரும் சைகோவ்-டி 5 கோடி டோஸ்
ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கிறது. இந்திய அரசு நிர்ணயித்துள்ள ஜூலை மாதத்திற்கான இலக்கை அடைய முடியாது என்று செய்திகள் கூறுகின்றன.
இந்தியாவில் வழங்கப்படும் தடுப்பூசிகள் எவை?

பட மூலாதாரம், Getty Images
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராசெனீகா மருந்து நிறுவனம் ஆகியவை தயாரித்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு எனும் பெயரில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் தயாரித்த கோவேக்சின் மற்றும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி ஆகிய தடுப்பூசிகளும் இந்தியாவில் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்திய மருந்து நிறுவனமான சிப்லாவுக்கு, அமெரிக்காவின் மாடர்னா தடுப்பு மருந்தை இறக்குமதி செய்வதற்கான ஒப்புதலை இந்திய அரசு வழங்கியுள்ளது.
இந்தத் தடுப்பூசி கோவிட்-19 தொற்றுக்கு எதிராக 95 சதவிகித செயல் திறன் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்தியாவில் எத்தனை கோடி டோஸ்கள் இந்த தடுப்பூசி கிடைக்கும் என்று இதுவரை தெரியவில்லை.
பிற சில தடுப்பூசிகளும், ஒப்புதலுக்காக பல கட்ட நிலையில் உள்ளன.
இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமல்ல. விரும்புபவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். அரசு நடத்தும் தடுப்பூசி மையங்கள் மற்றும் மருத்துவமனை ஆகியவற்றில் இலவசமாக தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் விரும்புபவர்கள் 250 ரூபாய் செலுத்தி தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் இலவசமாக தடுப்பூசிகளை வழங்குவதற்காக இந்திய அரசு சுமார் 35,000 கோடி ரூபாய் செலவு செய்கிறது.
இந்தியாவில் எத்தனை பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டது?

பட மூலாதாரம், EPA
கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படலாம்.
தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின்பு உண்டாகும் பக்க விளைவுகள் குறித்து கண்காணிப்பதற்காக இந்தியாவில் 34 ஆண்டுகளாக கண்காணிப்பு திட்டம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இத்தகைய பின்விளைவு களை வெளிப்படையாக தெரிவிக்காவிட்டால் தடுப்பூசிகள் குதித்து அச்சமூட்டும் தகவல்கள் பரவ வாய்ப்புள்ளது என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
மே 17-ஆம் தேதி தரவுகள் படி தடுப்பூசிக்கு பிந்தைய விளைவுகளாக சுமார் 23 ஆயிரத்துக்கும் அதிகமானவை நிகழ்ந்துள்ளன என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் இவற்றில் பெரும்பாலானவை காய்ச்சல், உடல்வலி, தலைசுற்றல், கிறுகிறுப்பு போன்ற சிறு பாதிப்புகளே.
ஜூன் மாத மத்தி வரை உண்டான 700 தடுப்பூசிக்கு பிந்தைய தீவிர பாதிப்புகளையும், 488 மரணங்களையும் இந்திய அரசு ஆராய்ந்தது.
ஆனால், இவை தடுப்பூசி காரணமாக உண்டாகவில்லை என்று இந்திய அரசு கூறுகிறது. தடுப்பூசி செலுத்தாமல் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி இறக்கும் அபாயத்தைவிட, தடுப்பூசி மூலம் உண்டாகும் பாதிப்பு, புறக்கணித்தக்க வகையில் மிக மிகக் குறைவு என்று இந்திய அரசு கூறுகிறது.
தரவுப் படங்கள்: ஷதாப் நஸ்மி, பிபிசி
பிற செய்திகள்:
- பழிக்குப் பழி: கணவரைக் கொன்றவரை திருமணம் செய்தபின் சுட்டுக் கொன்ற பெண்
- சீக்கியர்கள் ஏன் உலகெங்கும் அன்பைக் கொண்டாடுகிறார்கள்?
- டேனிஷ் சித்திகி: ஆஃப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட இந்திய புகைப்பட செய்தியாளர் - என்ன நடந்தது?
- ஐரோப்பாவை புரட்டிப் போட்ட பெருவெள்ளம்; முற்றிலும் அழிந்த கிராமங்கள்
- செல்போன் இல்லாமலே பிறருக்கு வாட்சாப் செய்தி அனுப்பும் வசதி பரிசோதனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












