நரேந்திர மோதி பாராட்டிய நீலகிரி 'ஆட்டோ ஆம்புலன்ஸ்' - மலையில் மலர்ந்த மனித நேயம்

3. Auto Ambulance in the remote villages on Nilgiris
படக்குறிப்பு, 'ஆட்டோ ஆம்புலன்ஸ்' சேவையின் ஒருங்கிணைப்பாளர் ராதிகா
    • எழுதியவர், மு. ஹரிஹரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டத்தின் குன்னூரில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை வழங்கி வரும் ராதிகா சாஸ்திரியின் பணியை பாராட்டி வாழ்த்தியிருக்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைதோறும் மன் கி பாத் எனும் மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றுது பிரதமர் மோதியின் வழக்கம். அந்த வகையில் இன்று அவர் ஆற்றிய உரையின்போது நீலகிரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை வழங்கி வரும் ராதிகா சாஸ்திரி என்பவர் பற்றிக் குறிப்பிட்டு, அவரது சேவைக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

பிரதமரின் பாராட்டுதலைப் பெறும் அளவுக்கு ராதிகா சாஸ்திரி என்ன செய்து வருகிறார்?

தன்னார்வத்துடன் தொடங்கிய சேவை

குன்னூர் அரசு மருத்துவமனை வாசலில் மூதாட்டியையும், அவரது உறவினரையும் ஆட்டோவில் இருந்து மெதுவாக இறங்க வைத்தார் ஓட்டுநர் இஸ்மாயில். அடுத்த சிலநிமிடங்களில் சிடி ஸ்கேன் எடுக்கக் கூட்டிச் செல்லுமாறு நோயாளி ஒருவர் கேட்க, அவரை ஆட்டோவில் அமரவைத்து கிளம்பினார் அவர்.

பயணிகளை ஏற்றிச் செல்லும் சாதாரண ஆட்டோ அல்ல அது. சாலை வசதிகளின்றி மலை முகடுகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ள 'ஆம்புரிக்‌ஷ்' எனப்படும் ஆட்டோ ஆம்புலன்ஸ் அவை.

Auto Ambulance in the remote villages on Nilgiris
படக்குறிப்பு, தமிழ்நாடு முழுவதும் இந்த சேவை தொடங்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார் ஆட்டோ ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இஸ்மாயில்.

ஸ்கேன் எடுப்பதற்காக சென்ற நோயாளியின் வருகைக்காக மருத்துவமனை வாசலில் காத்திருந்த அவரின் உறவினரிடம் பேசியபோது, ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை அவர் வெகுவாக பாராட்டினார்.

''எடப்பள்ளி பகுதியில் இருந்து சிகிச்சைக்காக எனது உறவினரை அழைத்து வந்தோம். இங்கிருந்து ஸ்கேன் எடுக்கும் மையத்திற்கு செல்ல வேண்டும். கொரோனா பயத்தால் தனியார் வாகனங்கள் மருத்துவமனைக்கு வருவதில்லை. ஆம்புலன்ஸ் வாகனத்தை பயன்படுத்தும் அளவிற்கு பணமில்லை.

இந்த நிலையில்தான் ஆட்டோ ஆம்புலன்ஸ் குறித்து தெரியவந்தது. சிகிச்சை முடிந்ததும் அதே வாகனத்தில் வீட்டிற்கு அழைத்துச் செல்லவும் இஸ்மாயில் உறுதியளித்துள்ளார். எங்களைப் போன்ற மலைப்பகுதி மக்கள் இந்த சேவையால் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்,'' என்றார் அவர்.

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் சார்பில் மலைவாழ் கிராம மக்களுக்கு உதவுவதற்காக 'ஆட்டோ ஆம்புலன்ஸ்' எனும் இலவச மருத்துவ வாகன சேவை இம்மாத தொடக்கத்தில் துவங்கப்பட்டுள்ளது.

பழங்குடியினர், தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களை வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து வருவதும், சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் வீட்டிற்கு கூட்டிச்செல்வதும், 'ஆம்புரிக்‌ஷ்' எனப் பெயரிடப்பட்டுள்ள ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கிறார் இச்சேவையின் ஒருங்கிணைப்பாளர் ராதிகா.

'நான் குன்னூரில் வசித்து வருகிறேன். இங்கு சொந்தமாக காபி ஷாப் நடத்தி வருகிறேன். சென்ற மாதம் வரை, கொரோனா பரவல் காரணமாக இங்கு அனைத்து தொழில்களும், மக்கள் இயக்கமும் முற்றிலுமாக ஸ்தம்பித்தது.

அந்த நேரத்தில் மருத்துவ சேவைகளை பெறுவதற்கும், அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்வதற்கும் மலை கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு பெரும் சிரமங்கள் ஏற்பட்டது. இதை சரிசெய்ய எதாவது முயற்சி செய்ய வேண்டும் என யோசித்ததில் உருவானது தான் 'ஆம்புரிக்‌ஷ்' திட்டம்.'

'மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவல்களை அங்குள்ள எனது நண்பர்கள் மூலம் திரட்டினேன். முதற்கட்டமாக, 6 ஆட்டோக்களை உருவாக்க திட்டமிட்டு நிதி உதவிகளை திரட்ட ஆரம்பித்தேன்.

ஒரு மாதத்தில் ஆட்டோ ஆம்புலன்ஸ் வாங்குவதற்கான நிதி கிடைத்தது. முதலுதவி சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் இருக்கும் வகையில், ஆம்புலன்ஸ் போல ஆட்டோக்களை மறுவடிவமைப்பு செய்ய வலியுறுத்தினோம். ஜபல்பூரிலிருந்து ஐந்து நாட்கள் பயணித்து, ஆட்டோ ஆம்புலன்ஸ்கள் நீலகிரிக்கு கொண்டு வரப்பட்டன' என கூறுகிறார் ராதிகா.

ஒரு ஆட்டோவிற்கு ரூ. 3.5 லட்சம் என ஆறு ஆட்டோக்களை உருவாக்க மொத்தம் 21 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் இவர்.

இதில், நோயாளி படுக்கும் ஸ்ட்ரெச்சர், உதவியாளர் அமர இருக்கை, ஆக்சிஜன் சிலிண்டர், முதலுதவிப் பெட்டி, மின் விளக்கு மற்றும் மின் விசிறி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

நீலகிரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை, அவசர காலங்களில் இங்குள்ள மக்களின் உயிரைக் காப்பாற்றுவதில் முக்கியப்பங்கு வகிக்கும் என்கிறார் ஆட்டோ ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இஸ்மாயில்.

3. Auto Ambulance in the remote villages on Nilgiris

"நீலகிரியை பொருத்தவரை முக்கிய நகரப் பகுதிகளில் மட்டுமே சாலைகள் சீராக இருக்கின்றன. மற்ற பகுதிகளில் சாலைகள் மிகவும் குறுகலாகவும், பெரும்பாலான மலை கிராமப் பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாகவே இருக்கும். அந்த சாலைகளில், பெரிய அளவிலான ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்க முடியாது."

"அங்கு வசிக்கும் மக்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும் போது சிலமீட்டர் தொலைவில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்படும். வீட்டிலிருந்து தொட்டில் கட்டி அவர்களை தூக்கி வந்து ஆம்புலன்ஸில் ஏற்றி, பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்வோம். இதனால் நேர விரயம் ஏற்படுவதோடு, பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது."

"அவசரமாக மருத்துவ உதவி தேவைப்படுபவர்களை முதலுதவி செய்து, உடனடியாக மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றால் கண்டிப்பாக அவர்களது உயிர்களை காப்பாற்ற முடியும். அந்தவகையில் எப்படிப்பட்ட குறுகலான சாலையிலும், கற்கள் நிறைந்த குண்டும் குழியுமான சாலைகளிலும் இந்த ஆட்டோக்கள் சென்றுவிடும். நோயாளிகளை வீட்டிலிருந்தே அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்க்கிறோம். சிகிச்சையின்போது மற்ற இடங்களுக்கு செல்வதற்கும், சிகிச்சை முடிந்து வீடு செல்வதற்கும் ஆட்டோ ஆம்புலன்ஸ்களை பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்."

"இந்த சேவையை நீலகிரி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைத்து மலை கிராம பகுதிகளிலும் விரிவுபடுத்த வேண்டும்," என கோரிக்கை வைக்கிறார் இவர்.

தற்சமயம், குன்னூரில் மூன்று ஆட்டோ ஆம்புலன்ஸ்கள், கோத்தகிரி, ஊட்டி மற்றும் கேட்டி ஆகிய பகுதிகளில் தலா ஒன்று என மொத்தம் 6 ஆட்டோ ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :