தமிழ்நாடு அரசியல்: 'தாயுள்ளத்தோடு அரவணைக்கிறார் ஸ்டாலின்' - தி.மு.கவில் இணையும் தோப்பு வெங்கடாச்சலம்

பட மூலாதாரம், Thoppu venkadachalam facebook
- எழுதியவர், ஆ விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைய உள்ளார். ` மாற்றுக் கட்சியினரை அரவணைக்கும் முதல்வரின் தாயுள்ளத்தைப் பார்த்த பிறகுதான் அக்கட்சியில் இணையும் எண்ணம் ஏற்பட்டது' என்கிறார் தோப்பு வெங்கடாச்சலம்.
பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் இருந்து 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க எம்.எல்.ஏவாக தோப்பு வெங்கடாச்சலம் தேர்வு செய்யப்பட்டார். இதன்பிறகு வருவாய்த்துறை, சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்தார்.
அடுத்து, 2016 சட்டமன்றத் தேர்தலிலும் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார். ஆனால், அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியோடு பல வகையிலும் தோப்பு வெங்கடாச்சலம் முரண்பட்டார். பெருந்துறை தொகுதியில் தோப்புவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் செயல்படுவதாகவும் தகவல் வெளியானது.
இதன் தொடர்ச்சியாக, 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட கட்சித் தலைமையிடம் மனு அளித்தும் தோப்பு வெங்கடாச்சலத்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் சுயேச்சையாகக் களமிறங்கினார். தேர்தல் முடிவில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் ஜெயக்குமார் வெற்றி பெற்றார். கட்சித் தலைமையை மீறி சுயேச்சையாகப் போட்டியிட்டதால் அ.தி.மு.கவில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்நிலையில், தனது ஆதரவாளர்களுடன் 11 ஆம் தேதி தி.மு.கவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

``தி.மு.கவில் இணைய வேண்டிய நிர்பந்தம் ஏன் ஏற்பட்டது?" என தோப்பு வெங்கடாச்சலத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இல்லை. இது என்னுடைய விருப்பம்தான். என்னை சேர்த்த பிறகுதான் இங்கு தி.மு.கவை வளர்த்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. தி.மு.க என்பது ஆலமரம். ஆனால், சிறு துரும்பும் உதவும் என என்னை ஏற்றுக் கொள்கிறார்கள். பத்து வருடங்களாக எம்.எல்.ஏ, அமைச்சர் என தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமாகியுள்ளேன். மக்கள் என்னிடம் நிறைய எதிர்பார்த்தார்கள். அதற்கேற்ப நிறைய பணிகளை முன்னெடுத்தேன்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டம், கொடிவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகியவற்றை அரசு செய்தாலும் அதற்காக அதிகப்படியான முயற்சிகளை மேற்கொண்டவர்களில் நானும் ஒருவன். என்னால்தான் அத்திக்கடவு திட்டம் வந்தது எனக் கூற வரவில்லை. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். அதேபோல், கொடிவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் 70 சதவிகிதம் பணிகள் மட்டும் முடிவடைந்துள்ளன. இன்னும் முடிய வேண்டிய பணிகள் உள்ளன.
இதையெல்லாம் செய்து முடிக்கக் கூடிய இடத்தில் முதலமைச்சர் இருக்கிறார். இவற்றையெல்லாம் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று முடிப்பதற்காக தி.மு.கவில் இணைய உள்ளேன். தவிர, அரசியல்ரீதியாக முதலமைச்சரின் செயல்பாடுகள் எனக்குத் திருப்தியளிக்கின்றன. அனைவரும் அரவணைத்துச் செல்வது, மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, எதிர்க்கட்சிக்காரர்களிடம் கருத்துக் கேட்பது, மாற்றுக் கட்சியினரை அரவணைப்பதில் தாயுள்ளம் காட்டுவது போன்றவை எனக்குப் பிடித்துவிட்டன. அரசியல் சார்ந்த என்னுடைய தொடர் பயணத்துக்காகவும் தி.மு.கவில் இணைகிறேன்".கொங்கு மண்டல அ.தி.மு.க பிரமுகர்களை தி.மு.க பக்கம் கொண்டு வரும் வேலையை செந்தில் பாலாஜி செய்வதாகச் சொல்கிறார்களே?

``நான் தி.மு.கவில் இணைகிறேன். மற்ற விவரங்களை பிறகு பேசுகிறேன்".
அ.தி.மு.கவில் இருந்து நிர்வாகிகள் யாராவது பேசினார்களா?
``முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசினார். என்ன காரணம் என விசாரித்தார். தி.மு.கவுக்குப் போக வேண்டாம் என அவர் கூறவில்லை. இன்னும் சிலர் பேசினார்கள். அவர்கள் பெயரை எல்லாம் குறிப்பிட விரும்பவில்லை."
கொங்கு மண்டலத்தில் தி.மு.க பலவீனமாக இருப்பதால்தான் உங்களைப் போன்றவர்கள் அக்கட்சிக்கு செல்வதாகப் பார்க்கலாமா?
``நான் படிப்படியாக வளர்ந்தவன். மக்களை அரவணைத்துச் செல்வது தொடர்பாக அ.தி.மு.கவில் ஏராளமான பயிற்சிகளை பெற்றுள்ளேன். அதனை தி.மு.கவின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்த உள்ளேன். தெளிவான பாதையில் ஊழலற்ற அரசாக தி.மு.க செயல்பட்டு வருகிறது. அதற்கேற்ப அதிகாரிகளை நியமித்துள்ளனர். அம்மா உணவகத்தில் இருந்து அம்மா படத்தை எடுக்கக் கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதை பெருந்தன்மையாக பார்க்கிறோம். இதனால் எங்களுக்கு அவர் மேல் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது"
அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை முழக்கம் எழுந்துள்ளதே?
``அதைப் பற்றியெல்லாம் நான் பேச விரும்பவில்லை"
பிற செய்திகள்:
- கேரளாவை அடுத்து தமிழ்நாட்டிலும் ஜிகா வைரஸ் எச்சரிக்கை: அறிகுறிகள், பாதிப்பு என்ன?
- தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு - மு.க. ஸ்டாலின்
- Sulli Deals: முஸ்லிம் பெண்களை விற்க உருவாக்கப்பட்ட செயலியால் அதிர்ச்சி
- பக்க விளைவுகள் வரவில்லை என்றால் தடுப்பூசி வேலை செய்யவில்லை என்று பொருளா?
- ஆஃப்கனில் இறுகும் தாலிபன் பிடி: இரான், துர்க்மெனிஸ்தான் எல்லைகளை கைப்பற்றினர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












