கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பெண்கள் பின்தங்கியிருப்பது ஏன்?

பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சுஷீலா சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

டெல்லியின் சுந்தர்நகரில் வசிக்கும் நிஷா, அழகு நிலையத்தில் பணிபுரிகிறார். கொரோனா ஊரடங்கால், கணவருக்கு வேலை பறிபோய் விட்டதால், இவர் அழகு நிலையத்தில் வேலை செய்து எப்படியோ குடும்பத்தை நடத்தி வருகிறார்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பிய நிஷா, தெரிந்த ஒரு பெண்மணியின் உதவியைக் கோரினார். அந்தப் பெண்மணி ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். தடுப்பூசிக்கான நேரமும் மருத்துவமனையில் ஒதுக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் வீட்டில் ஒரு திருமண நிகழ்ச்சி இருந்தது.

"குடும்பத்தை நடத்த வேண்டுமானால், அழகு நிலைய வேலை அவசியம். ஊரடங்கின் காரணமாகப் அழகு நிலையம் வரும் பெண்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே இருக்கிறது. இந்த சூழலில் வேலைக்கு வரவில்லையென்றால் உரிமையாளரும் கோபப்படுவார். வீட்டில் வேறு திருமணம் இருந்தது. தடுப்பூசி போட்டுகொள்வதால், பலவீனம், வலி மற்றும் காய்ச்சல் வருகிறது என கேள்விப்பட்டதால் நான் பயந்தேன்." என நிஷா கூறுகிறார்.

"தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் தான். ஆனால் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் என்னால் அழகு நிலைய வேலையையோ அல்லது திருமண வேலையையோ வீட்டில் செய்ய முடியாமல் போகும். வீட்டில் ஒரு திருமணம் இருக்கும்போது, தடுப்பூசி எதற்கு என குடும்ப உறுப்பினர்கள் கூட கேலி செய்வார்கள். அதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் எண்ணத்தைக் கைவிட்டேன். ஆனால், என் கணவர் தடுப்பூசி போட்டுக்கொண்டுவிட்டார்."

ஆனால் கமலேஷ், தடுப்பூசி போட்டுக்கொள்ளாததற்கு வேறு ஒரு காரணம் கூறுகிறார்.

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜைச் சேர்ந்த கமலேஷ், வீடுகளில் சமையல் செய்யும் வேலை செய்கிறார். அவரிடம் தடுப்பூசி போட்டுக்கொண்டீர்களா என நான் கேட்டபோது தடுப்பூசி வேண்டாம் என அவர் கூறினார். ஏன் என்று கேட்டதற்கு, தடுப்பூசி போட்டுக்கொண்டால் இறந்து விடுவார்கள் என்றார்.

தடுப்பூசி தொடர்பாக அவரது மனதில் வினோதமான குழப்பம் இருந்தது. இருப்பினும், இது எனக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் படித்த குடும்பங்களில் சமையல் வேலை செய்பவர்களின் சிந்தனை கூட ஏன் இப்படி இருக்கிறது என்பது தான் எனக்கு வியப்பாக இருந்தது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பெண்

பட மூலாதாரம், Getty Images

அவர்களின் கிராமத்தில் ஒரு கணவன் - மனைவி தம்பதிகளாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளச் சென்றார்களாம். திரும்பி வந்து இரண்டு நாட்களில் இருவரும் இறந்தனராம். இப்போது கிராமம் முழுவதும் அச்சத்தில் உள்ளது. தடுப்பூசி என்ற பெயரையே யாரும் எடுப்பதில்லையாம். அப்படி எல்லாம் எதுவுமில்லை, எல்லாம் வதந்தி என நான் கூறினேன். கணவரும் குடும்பத்தாரும் மறுப்பு சொல்லும் போது நான் என்ன செய்ய முடியும் என்கிறார்.

ஆண் பெண் வேறுபாடு

தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பெண்

பட மூலாதாரம், Getty Images

தடுப்பூசி குறித்துப் பல வகையான அச்சங்களும் தவறான எண்ணங்களும் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் மக்கள் போட்டுக்கொள்வதில்லை எனக் கூறமுடியாது.

அரசாங்கத்தின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட சமீபத்திய தகவல்களின்படி, 23,27,86,482 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாம் புள்ளிவிவரங்களை உள்ளார்ந்து பார்த்தால், ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் பின் தங்கியுள்ளனர் என்பது தெரிகிறது.

ஜூன் 6 ஆம் தேதி வரை அரசு வலைத்தளமான www.cowin.gov.in இல் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 9,92,92,063 ஆண்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் பெண்களின் எண்ணிக்கை 8,51,85,763 ஆக இருக்கிறது. அதாவது, பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான இடைவெளி சுமார் ஒரு கோடி.

Please wait...

இதற்கு என்ன காரணம்?

ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள பட்காவில் உள்ள பொது சுகாதார மையத்தின் மூத்த மருத்துவ அதிகாரி மருத்துவர் அசோக் சர்மா இதற்கு பல காரணங்களைப் பட்டியலிடுகிறார். ஆண்களைச் சார்ந்தே பெண்களின் வாழ்வு பெரும்பாலும் இருப்பது முக்கியக் காரணம் என்கிறார்.

தடுப்பூசி மையத்திற்கு ஒரு பெண்ணை யார் அழைத்துக் கொண்டு வருவார்கள்? அவரது கணவர் தான் அழைத்து வர முடியும். அத்தகைய சூழ்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பெண்கள் தனியாக வருவது என்பது அசாத்தியம் என்பது இவர் கருத்து.

மேலும் அவர், "இரண்டு மூன்று நாட்களுக்கு காய்ச்சல் வரலாம் என்று மருத்துவர்கள் கூறும்போது, காய்ச்சல் வந்தால், வீட்டில் யார் உணவு சமைப்பார்கள், யார் கால்நடைகளைக் கவனிப்பார்கள் என பெண்கள் நினைக்கிறார்கள்" என்று கூறுகிறார்.

"கோவிட் பரிசோதனைக்கான வசதியும் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. ஆனால், பெண்கள் முன் வரவில்லை, ஏனென்றால் கொரோனா உறுதியானால், அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அஞ்சுகிறார்கள்."

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பெண்

பட மூலாதாரம், Getty Images

"இப்படிப்பட்ட சூழலில், தடுப்பூசி செலுத்திக்கொள்வது என்பது பெண்களுக்கு சிரமமாகிறது. கணவனும், தன் மனைவிக்குக் காய்ச்சல் வந்தால், வீட்டு வேலைகளை யார் கவனிப்பார்கள் என நினைக்கிறான். கோவிட் -19 தாக்கினால் வீட்டை யார் பார்த்துக் கொள்வார்கள் என்றும் 14 நாட்களில் நிலைமை இன்னும் மோசமடையும் என அவர்களுக்கு விளக்கப்படுகிறது."

"தடுப்பூசிக்குப் பிறகு காய்ச்சல் இருந்தால், மருந்து சாப்பிட்டு விட்டு வேலை செய்யமுடியும். மேலும், ஆஷா தொழிலாளர்கள் போன்ற பெண்கள் சுகாதாரப் பணியாளர்களும், ஏ.என்.எம் (துணை செவிலியர்) இவர்களையும் உதாரணமாகக் காட்டுகிறோம். இவர்களுக்கெல்லாம் தடுப்பூசி போடப்பட்டு விட்டது ஆனால் அவர்கள் எளிதாகத் தங்கள் வேலைகளையும் செய்கிறார்கள் என கூறுகிறோம்."

கிராம மக்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்க அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா என்ற கேள்வியை அவர் எழுப்புகிறார்.

"பெண்களைத் தடுப்பூசி போட அழைத்து வர வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். ஏ.என்.எம் களும் இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஆண்களுடன் ஒப்பிடும்போது இந்தப் பகுதியில் கால்வாசி பெண்கள் மட்டுமே தடுப்பூசி போட முன்வந்துள்ளனர்."

ஆனால் நகரங்களில் நிலைமை வேறாக இருக்கிறது என அவர் கூறுகிறார், "தடுப்பூசி பெற நகரங்களில் இருந்து பெண்கள் என் மையத்திற்கு வந்துள்ளனர், ஆனால் கிராமத்துப் பெண்கள் இன்னும் விழிப்புணர்வு அடையவில்லை"

ஆண்கள் மீதான பெண்களின் சார்பு

பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

பீகாரில் பொது சுகாதார பிரச்சாரத்துக்காகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காகவும் பணியாற்றும் சார்ம் என்ற அமைப்பின் இயக்குனர் மருத்துவர் ஷகீல், பெண்களுக்குத் தடுப்பூசி அதிகம் போடப்படாததற்குப் பல காரணங்களைக் கூறுகிறார்.

முக்கிய காரணம் தடுப்பூசி குறித்த அவர்களின் தயக்கமே என்கிறார் இவர்.

போலியோ தடுப்பூசியால் ஆண்மைக் குறைவு ஏற்படும் என வதந்தி பரப்பப்பட்டதை நாம் பார்த்திருக்கிறோம். அதேபோல் இந்தத் தடுப்பூசி விஷயத்திலும் மக்களிடையே ஒரு சந்தேகம் உள்ளது என அவர் கூறுகிறார்.

"தடுப்பூசி போட்டுக்கொண்டால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்ற அச்சம் பெண்களிடையே உள்ளது. கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண்கள் தடுப்பூசி பெறலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளனர். முதல் டோஸ் எடுத்த பிறகு கர்ப்பமாகிவிட்டவர்கள், இரண்டாவது டோஸ் எடுக்க வேண்டுமா, வேண்டாமா என்று கவலைப்படுகிறார்கள்.

"அதே நேரத்தில், குடும்பத்தில் முடிவுகளை எடுக்கும் உரிமை என்று வரும்போது, பெண்களிடம் அது இல்லை, அதுவும் ஆரோக்கியத்தைப் பற்றிய விஷயம் என்றால், கேட்கவே வேண்டாம். இத்தகைய சூழ்நிலையில், அவர்களே தடுப்பூசி போட்டுக்கொள்ள வருவது என்பது நடக்காத காரியம். அப்படியே விரும்பினாலும், தடுப்பூசி மையத்திற்கு அழைத்துச் செல்ல அவர்கள் ஆண்களைச் சார்ந்திருக்கிறார்கள்."

"அவர்கள் உயிரிழப்பு பற்றியும் கூட அஞ்சுகிறார்கள். பெண்கள் மத்தியில் எழும் கேள்விகள் குறித்து ஆஷா தொழிலாளர்கள் மற்றும் ஏ.என்.எம். களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியிருக்க வேண்டும், இதனால் அவர்கள் பெண்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியும், மேலும் அவர்கள் மத்தியில் பரவி வரும் தவறான கருத்துக்களை தீர்த்து வைக்கவும் முடியும்."

கொரோனா தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

பீகாரில், கொரோனா தடுப்பூசி பதிவு செய்வதற்கும் உடனடியாக தடுப்பூசி போடுவதற்கும் மொபைல் வேன்களின் சேவைகளை அரசாங்கம் தொடங்கியுள்ளது, ஆனால் இந்த வேன்கள் கிராமங்களில் விரட்டப்பட்டதாக தகவல்கள் வந்தன.

கடந்த ஒன்றரை இரண்டு மாதங்களில், தொழிலாளர்கள் நகரங்களிலிருந்து கிராமப்புறங்களுக்குத் திரும்பியுள்ளனர், இதனால் தடுப்பூசி பற்றிய புரிதல் மக்களிடையே அதிகரித்திருக்கக்கூடும் என மருத்துவர் ஷகீல் நம்புகிறார்.

இந்தப் பாலின இடைவெளி தடுப்பூசியில் மட்டுமல்ல, சமூகத்தின் ஒவ்வொரு திட்டத்திலும் இருக்கிறது என இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் உதவி பேராசிரியர் மருத்துவர் சுரேஷ் கே ராட்டி கூறுகிறார்.

"தடுப்பூசி மலட்டுத் தன்மையை உருவாக்குகிறது என்ற வதந்தியும் பரவி வருகிறது. பெண்கள் மக்கள்தொகையின் விகிதத்தில் குறைவாக உள்ளனர், தடுப்பூசியின் பக்க விளைவுகள் குறித்து மக்களிடையே ஒரு பயமும் இருக்கிறது."

"பின்னர் கோவிட்டின் இரண்டாவது அலையின் போது, தடுப்பூசி மையங்களில் கூட்டம் இருப்பதால் அங்கு செல்ல பயமாக இருந்ததும் ஒரு காரணம். அதேசமயம், ஆண், வேலைக்குச் செல்ல வேண்டியிருப்பதால், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியிருந்தது. பெண்கள் அந்த அளவுக்கு வெளியே செல்லவில்லை."

"ஆனால் எத்தனை பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர். அதில் எத்தனை பேர் ஆண்கள், எத்தனை பேர் பெண்கள் என்றும் பார்க்க வேண்டியது அவசியம். ஏனென்றால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தான் அரசாங்கம் கூறிவருகிறது. இந்த வேறுபாட்டுக்கு வேறு என்ன காரணம் என்று மதிப்பிட வேண்டும்."

"இதை வேறொரு கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டும். ஏனென்றால் ஒரு மாநிலத்தை இன்னொரு மாநிலத்துடன் ஒப்பிட முடியாது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நிலைமைகள் உள்ளன. இப்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லும் இடத்தில், அவர்கள் தடுப்பூசி பெற்றனர். ஆனால், அவர்களது குடும்பங்கள் கிராமத்தில் இருந்தன. எனவே இந்தப் புள்ளிவிவரங்களை இந்தக் கோணத்திலும் பார்க்க வேண்டும். "

காஷ்மீரில் சமூக ஊடகங்களின் உதவியை நாடிய மருத்துவர்கள்

கொரோனா தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

ஆரம்பத்தில் தடுப்பூசி தொடர்பாக மக்களிடையே நிறைய தயக்கங்களும் சந்தேகங்களும் இருந்தன என்று ஜம்மு-காஷ்மீரில் உள்ள மருத்துவர்கள் சங்கத்தின் (காஷ்மீர்) தலைவர் டாக்டர் நிசார் உல் ஹசன் கூறுகிறார். இங்கு 12,07,888 பெண்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ள வித்தியாசம் 4,93,845.

டாக்டர் நிசார்-உல்-ஹசன் கூறுகையில், "தடுப்பூசி மலட்டுத்தன்மையை உருவாக்கும் எனவும், இந்தத் தடுப்பூசி அவசரத்தில் தயாரிக்கப்பட்டதால் அது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என தெரியவில்லை என்றும், இது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ஆண்கள் மற்றும் பெண்களிடையே தவறான தகவல்கள் பரப்பப்பட்டிருந்தன.

ஆனால் படிப்படியாக மக்களின் எல்லா சந்தேகங்களையும் நீக்கிவிட்டோம். இப்போது கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள பெண்களுக்கும் தடுப்பூசி கிடைக்கிறது. " என உற்சாகமாகத் தெரிவிக்கிறார்.

"தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுமாறு அனைத்து சுகாதார ஊழியர்களையும் நாங்கள் கேட்டுக்கொண்டோம். இதில் ஆண்களும் பெண்களும் அடங்குவர். நாங்கள் நன்றாக இருக்கிறோம், வதந்திகளுக்கு ஆளாகாதீர்கள் என அவர்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்."

"அதே நேரத்தில், அரசாங்கமும் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்து மக்களுக்குத் தடுப்பூசி வழங்கியது. எனவே ஆரம்பத்தில் இருந்த தடுப்பூசி குறித்த அக்கறையின்மை இப்போது நிறைய குறைந்துள்ளது."

அதே நேரத்தில், சத்தீஸ்கர் மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் ஆண்களைப் பின்னுக்குத் தள்ளிப் பெண்கள் அதிகம் தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையே சுமார் 24 லட்சம் இடைவெளி உள்ளது.

திங்கட்கிழமை முதல் செயல்பட்டு வரும் பெண்களுக்கான பிரத்யேகமான 75 இளஞ்சிவப்பு மையங்களை அமைத்து மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார். இங்கே, பெண்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும், பெண் ஊழியர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நகரங்களில் தடுப்பூசிக்கு மக்கள் பதிவு செய்கிறார்கள், பெருமளவில் பெண்களும் முன் வருகிறார்கள். பல மாநிலங்களில், பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான வேறுபாடு குறைவாகவே காணப்படுகிறது, ஆனால் இன்னும் பல கிராமங்களில் தடுப்பூசி குறித்து அக்கறையின்மை உள்ளது, அத்துடன் மக்கள் பயம் மற்றும் வதந்திகளால் பாதிக்கப்படுகின்றனர்.

கமலேஷ் போன்ற குடும்பத்தினரும் இதில் அடங்குவர். தடுப்பூசி குறித்த அச்சத்தை நீக்குவது அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்க வேண்டும், அப்போது தான் அரசாங்கம் 100% இலக்கை அடைய முடியும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :