தமிழ்நாடு அரசியல்: அதிமுக சட்டமன்ற துணைத் தலைவர், கொறடா யார்? முடிவு எட்டப்படாத பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
`அ.தி.மு.கவில் சட்டமன்ற துணைத் தலைவர் மற்றும் கொறடா பதவி யாருக்கு?' என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. `இவ்விரு பதவிகளும் ஓ.பி.எஸ் சொல்லும் நபர்களுக்கே வழங்க வேண்டும்' எனவும் பேசப்பட்டு வருகிறது. என்ன நடக்கிறது அ.தி.மு.கவில்?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், அ.தி.மு.க 65 இடங்களில் வெற்றி பெற்றதால், சட்டமன்றத்தில் வலுவான எதிர்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது. இதையடுத்து, `அ.தி.மு.கவில் எதிர்கட்சித் தலைவர் யார்?' என்ற கேள்வி எழுந்தது.
`வேட்பாளர் தேர்வில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் என இருவருமே இணைந்துதான் கையொப்பமிட்டனர். முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவதற்கு ஓ.பி.எஸ் இசைவு தெரிவித்தார். எனவே, எதிர்கட்சித் தலைவர் பதவியை பன்னீர்செல்வத்துக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்' என்ற குரல்கள் எழுந்தன. இதற்கு கொங்கு மண்டல நிர்வாகிகள் சம்மதம் தெரிவிக்கவில்லை.
அதிர்ச்சியில் உறைந்த ஓ.பி.எஸ்

பட மூலாதாரம், Getty Images
`தேர்தல் செலவீனங்கள், பிரசாரம் என மாநிலம் முழுக்க வலம் வந்தது எடப்பாடிதான். அவருக்கே எதிர்கட்சித் தலைவர் பதவி வந்திருக்க வேண்டும்' என்ற கருத்தையும் முன்வைத்தனர்.
இதுதொடர்பான மோதல் வலுத்த நிலையில், 51 எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அதேநேரம், கொரோனா உள்பட பல்வேறு விவகாரங்களில் ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டு வந்தனர்.
இதில், `முன்னாள் முதலமைச்சர், கழக ஒருங்கிணைப்பாளர்' என்ற பெயரில் ஓ.பி.எஸ் அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். இ.பி.எஸ்ஸும், எதிர்கட்சித் தலைவர் என்ற பெயரில் அறிக்கைகளை வெளியிட்டார்.
இந்தக் குழப்பங்களுக்கு நடுவில், அ.தி.மு.க தொண்டர்களுடன் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. `இவ்வாறு பேசுவதற்கு சசிகலாவுக்கு உரிமை உள்ளது' என ஓ.பி.எஸ் தரப்பு நிர்வாகிகள் பேசி வந்தனர்.
இதனை எதிர்த்து அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். தொடர்ந்து கடந்த ஜூன் 4 ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு எடப்பாடி பழனிசாமி வந்தார். அங்கே ஒன்பது மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துவதாக ஊடகங்களிடம் செய்தி வெளியானது.
இதனைக் கவனித்த ஓ.பி.எஸ் ஆதரவாளர் ஒருவர், `அண்ணே, தலைமைக் கழகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி கூட்டம் நடத்துகிறார். நீங்கள் ஏன் வரவில்லை?' எனக் கேட்க, ` அப்படியா.. எனக்குத் தகவல் வரவில்லையே?' என ஓ.பி.எஸ் பதில் கொடுத்துள்ளார்.
குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியா?
இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, `அ.தி.மு.கவில் சசிகலா இல்லை. தான் அரசியலில் இருந்து விலகிவிட்டதாக அந்த அம்மையார் ஊடகங்களுக்கு செய்தியும் கொடுத்துவிட்டார். அவர் தற்போது அ.ம.மு.க தொண்டர்களுடன்தான் பேசி வருகிறார். அ.தி.மு.க பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக உள்ளது. இதில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர்' என்றார்.

பட மூலாதாரம், Getty Images
அதேநேரம், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓ.பி.எஸ் பங்கேற்காதது குறித்துக் கேள்வியெழுப்பியபோது, `இன்று நல்ல நாள் என்பதால் அவர் புது வீட்டுக்கு பால் காய்ச்ச உள்ளார். வேறு எதுவும் காரணமில்லை' என்றார்.
எடப்பாடி தனியாக நடத்திய கூட்டத்தால் ஓ.பி.எஸ் கடும் அதிருப்தியில் இருந்தார். இதையடுத்து, மறுநாள் (ஜூன் 5) எழும்பூரில் ஓ.பி.எஸ் தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு சென்று இ.பி.எஸ் சந்தித்தார். ஓ.பி.எஸ் சகோதரர் பாலமுருகன் இறப்பு தொடர்பாக துக்கம் விசாரிக்க இ.பி.எஸ் வந்ததாக கூறப்பட்டாலும், `சட்டமன்றத் துணைத் தலைவர், கொறடா பதவிகளை யாருக்குக் கொடுப்பது?' என்பது தொடர்பாகவே அங்கு விவாதம் நடைபெற்றது.
``எழும்பூரில் உள்ள தனியார் விடுதிக்கு இ.பி.எஸ் வருவதாகக் கூறியபோது, `இல்லை, வர வேண்டாம்' என ஓ.பி.எஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வலியுறுத்தவே ஓட்டலுக்கு வருமாறு கூறியுள்ளார்.
அங்கே நடந்த பேச்சுவார்த்தையில், `துணைத் தலைவர் பதவிக்கு நீங்கள் வர வேண்டும்' என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதற்குப் பதில் கூறாமல் ஓ.பி.எஸ் அமைதியாக இருந்துள்ளார். `எந்தப் பொறுப்பும் இல்லாமல் ஓ.பி.எஸ்ஸை விட்டுவிட்டால் நமக்கு ஆபத்து' என எடப்பாடி நினைக்கிறார்.
அதனால்தான், இந்தச் சந்திப்பில் துணைத் தலைவர் பதவியை ஏற்குமாறு வலியுறுத்தினார். அதேநேரம், கொங்கு மண்டலத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி சென்றுவிட்டதால், துணைத் தலைவர் பதவியும் கொறடா பதவியும் ஓ.பி.எஸ்ஸின் விருப்பத்துக்கேற்ப இருக்க வேண்டும் எனவும் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, தென் மண்டலத்துக்கும் டெல்டாவுக்கும் இந்தப் பதவிகள் செல்ல வேண்டும் என ஓ.பி.எஸ் நினைக்கிறார்" என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர்.
துணைத் தலைவர், கொறடா யார்?
தொடர்ந்து பிபிசி தமிழுக்காக சில விவரங்களைப் பட்டியலிட்டனர். ``சட்டமன்றத் துணைத் தலைவர் பதவியை ஓ.பி.எஸ் ஏற்றுக் கொண்டால், கொறடா பதவியை பொள்ளாச்சி ஜெயராமன் அல்லது எஸ்.பி.வேலுமணிக்குக் கொடுக்க வேண்டும் என இ.பி.எஸ் நினைக்கிறார்.
ஆனால், கொறடா பதவியை தனது ஆதரவாளரான மனோஜ் பாண்டியனுக்குக் கொடுக்க வேண்டும் என ஓ.பி.எஸ் நினைக்கிறார். அதேநேரம், வைத்திலிங்கமும் கே.பி.முனுசாமியும் இந்தப் பதவிகளை எதிர்பார்த்து காய்களை நகர்த்தி வருகின்றனர்.
கூடவே, சசிகலா தொடர்பான பேச்சுக்களும் கட்சிக்குள் எழுந்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்தும் வழிகளையும் இ.பி.எஸ் ஆராய்ந்து வருகிறார். இதற்காக டெல்டா மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளை கொங்கு மண்டலத்துக்கு ஆதரவாக திசைதிருப்பும் வேலைகளும் நடக்கின்றன. `என்ன நடந்தாலும் நீங்கள் இ.பி.எஸ் பக்கம் இருக்க வேண்டும்' என பேசப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், உள்கட்சி குழப்பங்கள் அதிகரித்து வருவதால் தேர்தல் தோல்வி தொடர்பாக ஆராயாமல் அமைதியாக உள்ளனர். தேர்தலில் குற்றச்சாட்டுக்கு ஆளான நிர்வாகிகளையும் தலைமை நீக்கவில்லை.
`யாரை நீக்கினாலும் சிக்கல் வரும்' என்பதால் அமைதி காக்கின்றனர். தற்போது நான்கு நாள் பயணமாக போடி நாயக்கனூருக்கு ஓ.பி.எஸ் சென்றுள்ளார். அவர் வந்த பிறகு துணைத் தலைவர், கொறடா பதவிகள் யாருக்கு என்பதில் முடிவு தெரியவரும்" என்கின்றனர்.
தி.நகர் ரகசியம்
சென்னையில் அரசு பங்களாவை காலி செய்துவிட்டு தியாகராய நகரில் உள்ள வாடகை வீட்டில் ஓ.பி.எஸ் வசிக்க உள்ளார். இதே தியாகராய நகரில் உள்ள ஹபிபுல்லா தெருவில் உள்ள கிருஷ்ணபிரியாவின் வீட்டில் சசிகலா வசித்து வருகிறார். ஓ.பி.எஸ்ஸின் புதிய வசிப்பிடத்தை இதனோடு பொருத்திப் பார்த்தும் அ.தி.மு.க நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
`கொங்கு மண்டலத்தின் ஆதிக்கத்தைக் குறைக்க சசிகலாவின் வருகை அவசியம்' என ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் நினைக்கின்றனர். அதற்கு முட்டுக்கட்டை போடும்விதமாக, `ஆயிரம் சசிகலா வந்தாலும் அ.தி.மு.கவை அசைக்க முடியாது' என எடப்பாடியின் ஆதரவாளரான சி.வி.சண்முகம் பேட்டி கொடுத்தார். சசிகலா ஆதரவு, எதிர்ப்பு என இரு பிரிவாக அ.தி.மு.க பிரிந்துள்ளதையும் தொண்டர்கள் கவலையோடு உற்று நோக்குகின்றனர். `இருவருக்கும் இடையே உள்ள மறைமுக பனிப்போர் எப்போது முடிவுக்கு வரும்?' என்ற கேள்வியும் அக்கட்சியின் நிர்வாகிகளிடையே எழுந்துள்ளது.
விரைவில் முடிவு எட்டப்படுமா?
`சட்டமன்றத்தில் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடர் விரைவில் நடைபெற உள்ளதால், அ.தி.மு.கவில் துணைத் தலைவர், கொறடா பதவிகள் எப்போது முடிவு செய்யப்படும்?' என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
``இந்தப் பதவிகளை யாருக்கு ஒதுக்குவது என்பதை கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து பேசி முடிவு செய்வார்கள். தற்போது போடி தொகுதியில் ஓ.பி.எஸ் இருக்கிறார். அவர் வந்த பிறகே முடிவு எட்டப்படும். மற்றபடி, வேறு எந்த பிரச்னைகளும் இல்லை," என்கிறார்.
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசி: ஜி7 நாடுகளை எச்சரிக்கும் யூனிசெஃப் - புதிய ஆபத்து
- இந்தியாவில் கருப்பு பூஞ்சை தொற்று அதிகம் ஏற்படுவதற்கு நீரிழிவு காரணமா?
- 400 கால்பந்து திடல்களின் அளவில் 8 கோடி டன் மண் கொண்டு செயற்கை தீவு: டென்மார்கில் நிறைவேறிய சட்டம்
- இந்தியாவில் யுரேனியம் விற்க கள்ளச்சந்தை? - கவலை எழுப்பும் பாகிஸ்தான்
- கொரோனா தடுப்பூசியால் சில ஆண்டுகளுக்கு பிறகு பாதிப்பு வருமா? – சந்தேகங்களும் விடைகளும்
- ஒலியைவிட வேகமாக செல்லும் பயணிகள் விமானம்: அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் திட்டம்
- கொரோனா தடுப்பூசியால் சில ஆண்டுகளுக்கு பிறகு பாதிப்பு வருமா? – சந்தேகங்களும் விடைகளும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












