பிளஸ் டூ பொதுத் தேர்வு ரத்து: ஒரே நாடு...ஒரே தேர்வு முறைக்குள் வர மாநிலங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறதா மத்திய அரசு?

பட மூலாதாரம், NARINDER NANU
- எழுதியவர், ஞா. சக்திவேல் முருகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கொரோனா பரவல் காரணமாக, சிபிஎஸ்இ பிளஸ் டூ பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, தமிழகம் உள்பட பல மாநிலங்களிலும் பிளஸ் டூ பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரே நாடு, ஒரே தேர்வு என்ற முறைக்குள் கொண்டு வர மாநிலங்களுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
டெக்னோகிராப்ட் நிறுவனத்தின் தலைவரும், கல்வியாளருமான நெடுஞ்செழியன் பிபிசி தமிழுக்காக நம்மிடம் பல தகவல்களைப் பகிர்ந்துக்கொண்டார்.
"மத்திய அரசு, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு ரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. சி.பி.எஸ்.இ என்றழைக்கப்படும் மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் பிளஸ் டூ படிப்பவர்களின் எண்ணிக்கை 12 லட்சம் மாணவர்கள் மட்டுமே. ஆனால், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் டூ தேர்வு எழுதுபவர்கள். இவர்களையும் கருத்தில் கொண்டு மத்திய கல்வித்துறை அமைச்சகம் முடிவெடுக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
பொதுத்தேர்வை ரத்து செய்தபோது மாணவர்களின் நலன்தான் முக்கியம் என்று சொல்லப்பட்டது. அதே நேரத்தில் நீட், ஜே.இ.இ தேர்வுகள் குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதுவும் உயர் கல்வித்துறையின் கீழ் வரும் பிரிவுகள் தான். கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாகச் சொல்லும் மத்திய அரசு, நுழைவுத்தேர்வை ஏன் ரத்து செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது.
`தனியார் கல்லூரிகளுக்கு சாதகம்'
சி.பி.எஸ்.இ தேர்வு ரத்து என்று அறிவிப்பு வெளியான உடனே தனியார் கல்லூரிகளில் சேர்க்கை ஆரம்பித்துவிட்டனர். பொதுவாக, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலேயே அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்க்கை நடத்துவார்கள். இதனால் அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்குமா, கிடைக்காதா என்ற மனநிலையில் பெற்றோர்கள் தனியார் கல்லூரியை நாடவே வாய்ப்புகள் அதிகம். இதனால், தனியார் கல்லூரிகளில் எவ்வளவு கட்டணம் செலுத்தச் சொல்கிறார்களோ அந்த கட்டணத்தை செலுத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Hindustan Times
இந்த ஆண்டு தேர்வு ரத்து என்ற திடீர் அறிவிப்பால் நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளவர்களே அதிகளவில் பாதிக்க வாய்ப்புள்ளது. இவர்கள் ஏற்கெனவே கொரோனா நோய்த் தொற்று காலத்தில் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா தொற்றுக்காலத்தில் பெற்றோர்கள் குடும்பத்தில் யாரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகி பொருளாதார இழப்பைச் சந்தித்திருக்கலாம் அல்லது வேலை வாய்ப்பை இழந்திருக்கலாம் அல்லது சம்பளத்தைக் குறைவாகப் பெற்று வரலாம். இதுபோன்ற சூழலில் பெற்றோர்களின் பொருளாதார நிலையைக் கணக்கில் கொண்டு கல்லூரி சேர்க்கை விஷயத்திலும் மத்திய அரசும், மாநில அரசுகளும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். அரசு கல்லூரிகளில் சேர்க்கை முடித்த பின்பே தனியார் கல்லூரிகளில் சேர்க்கை என அறிவிக்க வேண்டும்.
இப்போது தேர்வுகள் ரத்து செய்திருப்பதன் மூலம் கல்லூரியில் நேரிடையான வகுப்புக்குச் செல்லப்போவதில்லை. மீண்டும் ஆன்லைன் வழியான வகுப்புக்குத்தான் செல்லப்போகிறார்கள். இந்த நிலையில் மத்திய அரசும், மாநில அரசுகளும் அவசரமாக முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த அவசர முடிவு தனியார் கல்வி நிறுவனங்களுக்கே உதவும். எதையும் திட்டமிடாமல் தேர்வை ரத்து செய்துள்ளனர்.
தேர்தலை நடத்தும்போது தேர்வு நடத்துவதில் என்ன பிரச்னை?
பல கோடி பேர் வாக்களிக்கும் தேர்தலுக்கு மட்டும் இவ்வளவு நாள் பிரசாரம் செய்ய வேண்டும், இவ்வளவு செலவு செய்ய வேண்டும், பல கட்டங்களாகத் தேர்தல் நடத்துவது என்பது எல்லாம் தெளிவாக வரையறுத்து செயல்படும் நிலையில் மாணவர்களுக்கான தேர்வு விஷயத்திலும் இதுபோல் காலத்தை நிர்ணயித்து நடத்தி இருக்கலாம். இனியாவது மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு ஒரு தெளிவான வரைமுறையைக் கொண்டு வர வேண்டியது அவசியம்.

பட மூலாதாரம், Hindustan Times
கடந்த ஆண்டு நோய் தொற்றுக்காலமாக இருந்திருக்கிறது. அடுத்த ஆண்டு நோய்த் தொற்று இருந்தால் இப்படி மதிப்பீடு செய்வோம் என்று கடந்த ஆண்டே முடிவெடுத்திருக்க வேண்டும். இந்த ஆண்டு திடீரென்று பொதுத்தேர்வு ரத்து என முடிவெடுத்து உள்ளனர். அடுத்த ஆண்டும் இதுபோன்ற நிலை இருந்தால் இப்படிதான் மதிப்பீடு செய்வோம் என்பதை இந்த ஆண்டாவது முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் முழுமையாகத் தயாராவார்கள்.
சி.பி.எஸ்.இ பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என முடிவெடுத்திருப்பதன் மூலம் மற்ற மாநிலங்களும் இதற்குச் சாதகமாக அந்தந்த மாநிலத்திலும் பிளஸ் டூ தேர்வுகளை ரத்து செய்ய முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதன்மூலம் உயர்கல்வி செல்ல நுழைவுத்தேர்வை நடத்துவதற்கான வாய்ப்பை நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்வு என்ற நிலைக்குக் கொண்டு செல்ல மத்திய அரசு திட்டமிட்டிருப்பதுபோல தோன்றுகிறது.

பட மூலாதாரம், Hindustan Times
`நுழைவுத் தேர்வு பயிற்சியே போதும்'
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆன்லைன் வழி கற்றல் முறை அதிகரித்து விட்டது. பிள்ளைகள் பள்ளியை மறந்து விட்டு ஆன்லைனிலேயே பொழுதை கழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் முழுமை பெறாத கல்விக்குத் தேவையில்லாமல் ஏன் கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் எனப் பெற்றோர்கள் யோசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு இந்தியாவிலேயே சிறந்த 100 ஆசிரியர்களைக் கொண்டு பாடத்திட்டங்களைக் கற்பிக்கும் வீடியோக்களை வெளியிடலாம். பிள்ளைகள் அந்த காணொளிகளைப் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம். பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதால் இனி மாணவர்கள் பள்ளிக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் நுழைவுத்தேர்வு பயிற்சிக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். இது இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்கும், மாணவர்களுக்குச் சாத்தியமானதா என்பதை மத்திய அரசு யோசித்து முடிவெடுக்க வேண்டும்" என்கிறார் நெடுஞ்செழியன்.
`மத்திய அரசின் உள்நோக்கம்'
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சுரேஷ் "மத்திய அரசு சி.பி.எஸ்.இ பள்ளிகளின் பிளஸ் டூ தேர்வை ரத்து செய்திருப்பது உள்நோக்கம் கொண்டதாக இருக்கும் என நம்புகிறோம். புதிய கல்விக்கொள்கையை முழுமையாக அமல்படுத்திடவும், நீட் தேர்வை தங்கு தடையின்றி நடத்திடவும், அனைத்து படிப்புகளுக்குமே நுழைவுத்தேர்வைக் கொண்டு வரவும் வாய்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது'' என்கிறார்.
``மாணவனுக்குத் தேர்வு ரத்து செய்வது மகிழ்ச்சியான விஷயமாக இருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் மதிப்பெண் சான்றிதழ் இல்லாமல் உயர்கல்வியில் சேர வாய்ப்பில்லாமல் போகலாம். தேர்வு நடத்தும்போதும் எந்த ஒரு மாணவனும் பாதிப்பில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் பொறுப்பு.
நோய்த் தொற்று குறைந்து வருகிறது. நோய்த் தொற்று குறைந்தவுடன் தேர்வு நடத்திடலாம். ஏற்கெனவே செய்முறைத் தேர்வுகளை நடத்தி விட்டோம். அதாவது 100 மதிப்பெண்ணில் 30 மதிப்பெண்ணுக்குத் தேர்வை நடத்தி விட்டோம். மீதமுள்ள 70 மதிப்பெண்ணுக்குத் தான் தேர்வை நடத்திட வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்களாகிய நாங்கள் தேர்வு நடத்த முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளோம்" என்றார்.
சியோன் பள்ளியின் முதன்மை முதல்வரும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட தனியார்ப் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைமை ஆலோசகருமான விஜயன் "எல்.கே.ஜி, யு.கே.ஜி என ஆரம்பித்து பதினான்கு வருடம் படித்த மாணவர்கள் பிளஸ் டூ தேர்வுக்காகக் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் திடீரென தேர்வை ரத்து செய்வது என்பது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் செயலாகும். இன்டெர்னல் மதிப்பெண்ணைப் பார்த்து அளவீடு செய்வது அறிவியல் பூர்வமான முறையாக இல்லை. நோய் தொற்றுக்காலத்தில் மாணவர்களின் உடல் நலம் மிக முக்கியமானது. ஆனால், தற்போது நோய்த் தொற்று குறைந்து வரும் வேளையில்ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் திட்டமிட்டு நடத்தலாம்.
ஏற்கெனவே பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்புக்குத் தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கும் வேளையில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இல்லாமல் உயர்கல்விக்குச் செல்லும்போது அல்லது வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்லும்போது மாணவர்கள் நிச்சயம் பிரச்னையை சந்திப்பார்கள். அவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆகையால், பிளஸ் டூ தேர்வை நடத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.
பிரதமர் நடத்திய காணொளி ஆலோசனைக்கூட்டத்தில் மூன்று மாநிலங்களைத் தவிர அனைத்து மாநிலங்களுமே தேர்வு நடத்த வேண்டும் என்றே சொன்னார்கள். ஆனால், தற்போது தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர்.
தமிழக அரசு, அனைத்து பள்ளி ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசு, 18-44 வயதுள்ளவர்கள் தடுப்பூசி போட்டு வரும் வேளையில், 18 வயது என்பதை 16 வயது என்றுகூட நிர்ணயிக்கலாம். இதன்மூலம் பிளஸ் டூ மாணவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள்.

பட மூலாதாரம், ARUN SANKAR
தேர்வு மையம் என்பது அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு நடத்திடலாம் அல்லது அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கூட தேர்வு நடத்திடலாம். மேலும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் உயர்கல்வியில் சேர்வதற்கான சேர்க்கையை நடத்துவதன் மூலம் மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படும்" என்றார்.
`எல்லா படிப்புக்கும் நுழைவுத்தேர்வு?'
கடந்த முப்பது ஆண்டுகளாகக் கல்வித் துறையில் செய்தியாளராக விளங்கி வரும் பொன். தனசேகரன், " வசதி படைத்தவர்களும், நகரப்பகுதியில் இருப்பவர்களுமே சி.பி.எஸ்.இ பள்ளியில் அதிகளவில் படித்து வருகின்றனர். இவர்களுக்குத் தேர்வு ரத்து செய்திருப்பது பெரிய அளவில் பாதிப்பில்லை. இவர்களில் பெரும்பாலானவர்கள் நுழைவுத்தேர்வுக்குத் தயாராகி வருபவர்கள். ஆனால், மாநில பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் பிளஸ் டூ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் உயர்கல்விக்குச் செல்பவர்களே அதிகம். பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களைப் பொறுத்தே பொறியியல், வேளாண்மை, கால்நடை அறிவியல், சட்டம், அறிவியல், கலை பிரிவுகளுக்கான படிப்புகளுக்குச் செல்கின்றனர்.
மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு, பொறியியல் படிப்புக்கு ஜே இ இ தேர்வு, சட்டப்படிப்புக்குத் தேசிய நுழைவுத்தேர்வு, மத்திய பல்கலைக்கழகங்களில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு என மத்திய கல்வி நிறுவனங்களில் சேர மட்டும் 20 முதல் 30 நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகள் எல்லாம் எப்படி நடத்தப்போகிறார்கள் என்பதற்கான விளக்கம் இல்லை. பொதுத்தேர்வை ரத்து செய்து நுழைவுத்தேர்வு நடத்துவது எந்தவகையில் நியாயம் என்று தெரியவில்லை. மத்திய அரசின் இந்த முடிவால், இனி எல்லா படிப்புக்கும் நுழைவுத் தேர்வு என்பது அவசியமாகிறது. இதை மறைமுகமாகக் கொண்டு வருகிறதோ என்ற எண்ணமும் இருக்கிறது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை எல்லாம் சேர்த்து ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு என்பதை மத்திய அரசு கொண்டு வருவதற்கு வாய்ப்பு உருவாகி உள்ளது" என்றார்.
இரண்டு வார காலத்தில் எப்படி மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு, 'மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதனை முடிவு செய்ய, பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் அவர்கள் தலைமையில், உயர்கல்வித் துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் கொண்ட ஒரு குழு அமைத்துள்ளது.
இக்குழு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். இக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்களைக் கொண்டு மட்டுமே, தமிழகத்திலுள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை நடைபெறும்' என்று தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












