தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து - மதிப்பெண் எந்த அடிப்படையில் வழங்கப்படும்?

தமிழக முதல்வர் ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவிருந்த மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு நடத்தப்படாது என அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மாணவர்களின் உடல் நலம் மற்றும் மன நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அரசின் செய்தியறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

கொரோனா இரண்டாம் அலை மாநிலத்தின் பல பகுதிகளில் இன்னும் தீவிரமாகவே இருந்து வருவதாலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த இயலும் என்பதாலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மாணவர்களை தேர்வு எழுத அழைப்பது தொற்றினை அதிகரிக்கச் செய்யலாம் என்பதை கருத்தில் கொண்டும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதாக அவ்வறிக்கையில் குறிபிடப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் தான் மத்திய அரசு சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்துக்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்தது. அதனைத் தொடர்ந்து தற்போது பல்வேறு மாநில அரசுகளும், தங்கள் மாநில பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யத் தொடங்கின.

மாணவர்களுக்கான மதிப்பெண் எப்படி வழங்கப்படும்?

மாணவர்கள்

பட மூலாதாரம், Getty Images

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டுதான் கல்லூரிகளில் சேர்க்கைகள் நடைபெறுகின்றன. அதை தமிழக அரசும் ஆமோதித்திருக்கிறது.

இந்நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதை ஆராய, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில், உயர்கல்வித் துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும்.

இக்குழு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆய்வு செய்து, விரைவில் அரசுக்கு ஓர் அறிக்கையைச் சமர்பிக்கும். அதன் அடிப்படையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் வழங்கப்படும் என தமிழக அரசு குறிப்பிட்டிருக்கிறது.

அந்த மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே தமிழக உயர்கல்வி நிறுவனங்களில் சேர்கை நடைபெறும் எனவும் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது தமிழக அரசு.

உயர்கல்விக்காக நடத்தப்படும் பல்வேறு நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வை நடத்துவது உகந்தது அல்ல என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :