அங்கீகரிக்கப்படாத கொரோனா தடுப்பூசிகளை வாங்கும் இந்திய அரசு - 30 கோடி டோஸ்கள் ஆர்டர்

தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரசின் இரண்டாம் அலையில் சிக்கித் தவிக்கும் இந்தியா, இன்னும் அங்கீகரிக்கப்படாத கொரோனா தடுப்பூசியை 30 கோடி டோஸ்கள் வாங்க ஆர்டர் செய்துள்ளது.

கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பயாலஜிகல் இ (Biological E) என்ற இந்திய நிறுவனத்தின் தடுப்பூசி, இன்னும் மூன்றாம் நிலை பரிசோதனையில் உள்ளது. முதல் இரண்டு நிலை பரிசோதனைகளில் நல்ல முடிவுகள் இருந்ததாக இந்திய அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அவசர பயன்பாட்டுக்கான அங்கீகாரம் பெறாத இந்த தடுப்பூசிகளை 206 மில்லியன் டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 14 பில்லியன் ரூபாய்) வாங்க அரசு முடிவு செய்துள்ளது.

தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த ஏற்கனவே இந்தியா போராடி வருகிறது.

இந்தியாவில் 140 கோடி மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்களாக இருந்தாலும் இதுவரை, 22 கோடி பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பெரும்பாலும் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நாட்டின் 15 சதவீத மக்களே இதுவரை முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தாலும், இன்றும் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை 3,40,000 இறப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால், இந்த எண்ணிக்கை மிகவும் குறைத்துக் காட்டப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்திய அல்லது வெளிநாட்டு தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து முன்கூட்டியே தடுப்பூசி ஆர்டர் செய்ய தவறியதாக பிரதமர் மோதி தலைமையிலான மத்திய அரசு கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

இந்தியாவில் தற்போது மூன்று தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. ஒன்று சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா தயாரித்த கோவிஷீல்ட், இந்தியாவின் பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இணைந்து தயாரித்த கோவேக்சின் மற்றும் ரஷ்யாவின் கமாலெயா நிறுவனம் தயாரித்த ஸ்புட்னிக் வி.

தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

தற்போது பயாலஜிகல் இ என்ற நிறுவனத்திடம் இருந்து 300 மில்லியன் தடுப்பூசி டோஸ்களை இந்தியா பெறும். முன்னதாக ஜனவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையே 350 மில்லியன் டோஸ்கள் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளை இந்தியா வாங்கியது.

பரிசோதனை நிலை முடியும் முன்பே இந்திய மருந்து கழகம் கோவேக்சின் தடுப்பூசிக்கு கடந்த ஜனவரி மாதத்திலேயே அனுமதி வழங்கியது. இதன் செயல்திறன் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

பயாலஜிக்கல் இ நிறுவனத்தின் இந்த புதிய தடுப்பூசி "அடுத்த சில மாதங்களில் கிடைக்கும்" என்று அரசு கூறுகிறது.

வல்லுநர்கள் எச்சரிக்கும் மூன்றாம் அலைக்கு தயாராவதற்காக, மோதி தலைமையிலான அரசாங்கம், கொரோனா எண்ணிக்கை குறைந்தாலும், தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்திருக்க நினைக்கிறது.

அதனை தொடர்ந்து அதிகமாக கொரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காத நிலையும், சுடுகாடுகள் நிரம்பி வழியும் சூழலும் ஏற்பட்டது.

அதிகரித்த கொரோனா தொற்றை சமாளிக்க, 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு மே மாதம் அறிவித்தது. ஆனால், இந்தியாவின் இரண்டு தடுப்பூசி நிறுவனங்களாலும் அவ்வளவு அதிக தடுப்பூசி விநியோகத்திற்கு உறுதி அளிக்க முடியவில்லை.

அதனால் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் கிராமப்புற பகுதிகள் மற்றும் ஏழைகள், பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் பெரும் பின்னடைவும் காணப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :