கொரோனா அச்சத்தால் அனைவரும் ஒதுங்கிய போது, மயங்கிய மூதாட்டிக்கு உதவிய இளையராணியின் போலீஸ் கனவு

இளையராணி

சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியோடு கூடிய 500 படுக்கை வசதி கொண்ட புதிய கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்த பின்னர் தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார்.

சேலம் கமலாபுரம் விமான நிலையத்தில் காத்திருந்த முதல்வரிடம் சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன் ஒரு தகவலை கூறினார்.

சேலம் சீலிநாயக்கன்பட்டி காட்டூர் அழகு நகரை சேர்ந்தவர் இளையராணி. டிப்ளமோ படித்துள்ள இவர் சிலநாட்களுக்கு முன்பு சீலிநாயக்கன்பட்டியில் சாலையில் வந்து கொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில் மகனுடன் வந்த மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். ஆனால் கொரோனா அச்சத்தால் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை.

அதைப் பார்த்த உடனே இளையராணி வயதான மூதாட்டியை பைக்கில் அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்தார். இந்த தகவல் பல பத்திரிக்கைகளில் வந்தன என்று முதல்வர் ஸ்டாலினிடம் கூறியுள்ளார்.

உடனே முதல்வர், அப்படியா அந்தப் பெண்ணை உடனே அழைத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டார். அதைத் தொடர்ந்து அழைத்துவரப்பட்ட இளையராணியை பாராட்டி இரண்டு புத்தகங்களையும் பரிசாக வழங்கினார் முதல்வர்.

தமிழக முதல்வரிடம் பரிசு பெறும் இளையராணி

என்ன நடந்தது என நாம் பிபிசி தமிழுக்காக இளைய ராணியிடம் பேசினோம். "போலீஸ் வேலையில் சேரவேண்டும் என்பது இலட்சியம், அதற்காக உடற்பயிற்சி செய்து வருகிறேன். அன்று உடற்பயிற்சி செய்துவிட்டு வரும் போது வழியில் ஒரு மகனும் மூதாட்டியும் பைக்கில் வந்தனர்.

திடீரென அந்த வயதான அம்மா மயங்கி விழுந்தார். கொரோனா அச்சத்தில் உதவிக்கு யாரும் வரவில்லை. நான் துணிந்து அவர் மகனை பைக்கை எடுக்கச் சொல்லி பின்னால் அமர்ந்து அந்த மூதாட்டியை மருத்துவமனையில் சேர்த்தேன்.

இந்த தகவல் கேள்விப்பட்டு முதல்வர் என்னை அழைத்து பாராட்டினார் இரண்டு புத்தகங்களையும் பரிசாகக் கொடுத்தார் என்னுடைய பயிற்சியாளர் உதவும் மனப்பான்மை உடையவர் அதனால் அவர் எல்லோருக்கும் சேவை செய்ய வேண்டும் என்று கூறுவார். எனக்கு அந்த நேரத்தில் அவர் கூறியது தான் ஞாபகத்தில் வந்தது.

நம் வீட்டில் உறவினர்கள் யாருக்காவது இப்படி ஆகி இருந்தால் நாம் பார்த்துக்கொண்டு இருப்போமா? உடனே காப்பாற்றுவோம் அல்லவா அது போலத்தான் நானும் உடனே காப்பாற்ற நினைத்தேன்.

எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் என்னை திட்டுவார்கள் என்று பயந்து கொண்டே வீட்டிற்கு வந்தேன். அவர்கள் என்னை மிகவும் பாராட்டினார்கள்.

முதல்வரை டிவியில் போஸ்டரில் தான் பாத்து இருக்கிறேன். அவரை நேரில் பார்த்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் எனக்கு காலப்பேழையும் கவிதைச் சாவியும் ,உணவு யுத்தம் என இரு புத்தகங்களை பரிசாக அளித்தார். அந்த புத்தகங்கள் என் பொக்கிஷம் . எதிர் காலத்தில் நான் ஒரு போலீசாக வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன். கடைசிவரை இத போன்ற சமூக சேவைகளை நான் செய்து கொண்டேதான் இருப்பேன்" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :