என்.ரங்கசாமி: புதுச்சேரி முதல்வராக நான்காவது முறை பதவியேற்கும் ஒரே தலைவர்

முதல்வர் பெயர் பலகை

புதுச்சேரியில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், தேசிய கட்சியான பாஜக, மாநில கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியின் ஆளுமையை நம்பியே இந்த தேர்தலை சந்தித்தது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக புதுச்சேரி மக்களிடையே அதிகம் பரிச்சயமான அரசியல் தலைவராக ரங்கசாமி இருக்கிறார். இவரது எளிமையான வாழ்க்கை முறை மக்களை அதீதமாக ஈர்த்தது.

இவருடைய ஆளுமை மேல் மக்கள் கொண்ட ஈர்ப்பின் விளைவாக, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அவர் 2011 பிப்ரவரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். கட்சித் தொடங்கிய இரண்டு மாதங்களுக்குள் தேர்தலைச் சந்தித்து, ஆட்சியையும் பிடித்தார்.

ரங்கசாமி கடந்து வந்த பாதை

புதுச்சேரி திலாஸ்பேட்டையை சேர்ந்த இவர், 1950, ஆகஸ்ட் 4 ஆம் தேதி பிறந்தார். அரசு கல்லூரிகளில் படித்து வணிகவியல் மற்றும் சட்டப்படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். மறைந்த தமிழக முதல்வர் காமராஜரைப் பின்பற்றிய இவர், இளம் வயதில் காமராஜருக்கு மன்றம் நிறுவியுள்ளார். ஆன்மீகத்தின்‌ மீது அதிக நாட்டம் கொண்டவர்.

ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த புதுச்சேரி முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள் என்பவருக்கு உதவியாளராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் பெத்தபெருமாளை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் 1990ல் நடைபெற்ற தேர்தலின் போது தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்டு 982 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

இதனைத் தொடர்ந்து 1991ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 7,260 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதன் முதலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வேளாண்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் அடுத்தடுத்து நடைபெற்ற 1996, 2001, 2006 தேர்தல்களில் தட்டாஞ்சாவடி தொகுதியில் ரங்கசாமி தொடர்ந்து வெற்றி பெற்றார். 1991 மற்றும் 1996 தேர்தல்களில் அமைச்சராகவும், 2001 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த போது முதல்வராகவும் பதவி வகித்தார்.

என் ரங்கசாமி, புதுச்சேரி முதல்வர்

இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி குழப்பத்தினால் 2008ஆம் ஆண்டு அவரிடம் இருந்த முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய ரங்கசாமி, 2011ஆம் ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை நிறுவினார். கட்சி தொடங்கிய இரண்டு மாதங்களுக்குள் 2011 சட்டமன்ற தேர்தலில் 15 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தார்.

அந்த தேர்தலில் புதுச்சேரியில் இந்திரா நகர், கதிர்காமம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். இதையடுத்து 2011 முதல் 2016 வரை புதுச்சேரி முதல்வராக இருந்தார்.

பின்னர் 2016ல் தேர்தலில் இந்திரா நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் 8 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 18 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தன. 2016 - 2021 காலகட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.

இந்த நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ரங்கசாமியை தலைவராக கொண்டு தேர்தலைச் சந்திந்து 16 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 10, பாஜக 6 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றின.

கூட்டணிக்குத் தலைவராக இருந்த ரங்கசாமி சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் புதுச்சேரியில் நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்கும் முதல் நபர் என்ற தனிச் சிறப்பை ரங்கசாமி பெற்றுள்ளார்.

கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ரங்கசாமி, தமது கடந்த ஆட்சிக் காலத்தில் மாணவர்களுக்குக் மடிக்கணினி மற்றும் காலை நேரத்தில் ரொட்டி பால் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தினார். மகளிருக்கு முக்கியத்துவம் கொடுத்தும் திட்டங்களையும் இவர் செயல்படுத்தினார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :