தேனி எம்.பி ரவீந்திரநாத் கார் மீது தாக்குதல் - என்ன நடந்தது?

போடி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிகளை பார்வையிட்ட தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவிந்திரநாத் குமாரின் வாகனம் தாக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.
தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் வேளையில் துணை முதல்வரின் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி. ரவிந்திரநாத் குமார் பெரியகுளத்தில் தனது வாக்கை பதிவு செய்துவிட்டு போடி சட்டமன்ற பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார்.
இந்நிலையில் போடி அருகே உள்ள பெருமாள் கவுண்டர் பட்டியில் வாகனம் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் குடிபோதையில் வாகனத்தை வழிமறித்து கற்களால் வாகனத்தை தாக்கி உள்ளனர்.

தாக்கிய நபர்கள் தலையில் திமுகவின் கட்சி துண்டை அணிந்தவாறு தாக்கியதாக ரவிந்திரநாத் குமார் தெரிவித்தார்.
அவருடன் பயணித்த மற்றொரு வாகனமும் தாக்கப்பட்டுள்ளது இதனால் அதிமுகவினர், வாகனத்தை தாக்கிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜா ஸ்ரீ சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார்.
இதனை அறிந்த அதிமுகவின் ஆதரவாளர்கள் தற்போது பெருமாள் கவுண்டன் பட்டியில் குவிந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

மேலும் திமுகவினர்தான் கார் கண்ணாடியை உடைத்தனர் என்று அதிமுகவினர் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக சார்பில் போடி தொகுதியில் போட்டியிடும் தங்கத் தமிழ்செல்வன் கார் கண்ணாடி உடைப்பு சம்பவத்திற்கும் திமுகவினருக்கு எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேனி நாடாளுமன்ற உறுப்பினர் வாகனத்தின் கார் கண்ணாடி உடைப்பு சம்பவத்திற்கும் திமுகவினருக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை. அவர்கள் காழ்ப்புணர்ச்சியில் தான் எங்கள் மீது பழி சுமத்தி வருகிறார்கள் ஆனால் திமுகவினர் தான் செய்தனர் என்பதற்கு எந்த ஒரு சாட்சியும் இல்லை," என்று செய்தியாளரிடம் தெரிவித்தார் தங்க தமிழ்செல்வன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












