உச்சம் தொடும் கொரோனா: என்ன செய்யப் போகிறது இரண்டாவது அலை?

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், எம். மணிகண்டன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் சுமார் 25 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமையன்று 1.03 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், திங்கள்கிழமை 1.26 லட்சம் பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து டெல்லியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊடரங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை வரும் 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று டெல்லி அரசு அறிவித்திருக்கிறது.

ஏற்கெனவே மகாராஷ்டிரா அரசு இரவு நேர கட்டுப்பாடுகளை அம்மாநிலத்தின் பல நகரங்களில் விதித்திருக்கிறது. ஐபிஎல் போட்டிகள் வரும் 9-ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், மும்பை வான்கடே மைதானத்தின் பணியாற்றும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை இண்டியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் இடையிலான போட்டி வரும் 10-ஆம் தேதி இந்த மைதானத்தில் நடக்க இருக்கிறது.

நாடு முழுவதும் பாதிப்பு அதிகரித்து வருவதால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோதிக்கு இந்திய மருத்துவர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

உலகின் பல நாடுகள் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் தீவிரத்தை உணரத் தொடங்கியிருக்கும் நிலையில், இரண்டாவது அலையின் உச்சத்தை நோக்கி விரைந்து கொண்டிருப்பதையே புள்ளிவிவரங்கள் காட்டுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

முதல் அலையை விட இரண்டாவது அலை தீவிரமாக இருக்கும் என்பது நிச்சயம் என்றாலும், ஏற்கெனவே கற்றுக்கொண்டிருக்கும் படிப்பினைகளும், பயன்பாட்டுக்கு வந்திருக்கும் தடுப்பூசிகளும் நம்பிக்கை தருவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். பிற நாடுகளிடம் இருந்தே கொரோனா வைரஸின் தாக்கத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்கிறார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் மூத்த அறிவியலாளர் டி.வி. வெங்கடேஸ்வரன்.

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

ஐரோப்பாவில் இது மூன்றாவது அலையின் காலம். பிரான்ஸ் நாட்டில் மூன்றாவது பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்திருக்கின்றன. இரவு நேரத்தில் வெளியே நடமாட அனுமதி இல்லை. மேற்கு நாடுகளில் கொரோனாவில் முதன்முதலாகப் பாதிக்கப்பட்ட இத்தாலியும் மூன்றாவது அலையால் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஸ்பெயினில் ஆறு பேருக்கு மேல் கூடுவதற்கு அனுமதியில்லை. நெதர்லாந்து, போர்ச்சுகல் என பல நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவில் மூன்றாவது அலையின்போது ஒரே நாளில் 3 லட்சம் பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.

பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பது, முன்னெச்சரிக்கை வழக்கங்கள் குறைந்திருப்பது போன்றவை கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பதற்கு அடிப்படையான காரணங்கள். இவை தவிர கொரோனா எதிர்ப்பு ஆற்றல் குறைந்திருப்பதும், வேற்றுருவத் தொற்று உருவாகியிருப்பதும் காரணங்களாக இருக்கலாமா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் வெங்கடேஸ்வரன் கூறுகிறார்.

இந்தியாவைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கவலைக்குரிய வகையில் அதிகரித்து வருவதாக அண்மையில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான உயர்நிலைக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் முதல் அலை உச்சத்தைத் தொட்டது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி. அன்று 97,894 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு வேகம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. பின்னர் மார்ச் மாதத்தில் மிக வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது.

"மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை இரட்டை உருமாற்றக் (Double Mutant) கொரோனா பரவுவதே பாதிப்பு அதிகரிக்கக் காரணம். பிரிட்டனில் உருமாறிய கொரோனா பஞ்சாபில் பரவுகிறது. இது குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருவது கவலைதரக்கூடியது" என்கிறார் வெங்கடேஸ்வரன். கொரோனா தொற்றுக்கு இரண்டாவது அலையே கடைசி அல்ல; உலகம் முழுவதும் கணக்கிட்டால் நான்காவது அலை பரவிக் கொண்டிருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: