தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: அனல் பறக்கும் பிரசாரத்தில் நேற்று நடந்தது என்ன?

தினகரன்

பட மூலாதாரம், TTV DINAKARAN TWITTER

தமிழ்நாட்டில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தல், உண்மையான அண்ணாவின் தொண்டர்களுக்கும் தமிழின துரோகிகளுக்கும் இடையே நடக்கும் தேர்தல் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் செவ்வாய்க்கிழமை தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய டிடிவி தினகரன், "தீய சக்தி என எம்ஜிஆரால் அடையாளம் கட்டப்பட்ட திமுகவை இத்தேர்தலில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்" என்றார். தமிழ்நாட்டின் வெளிப்படையான உண்மையான அம்மாவின் ஆட்சியை ஊழலற்ற ஆட்சியை கொண்டுவர வாக்களிக்க வேண்டிய வெற்றிச் சின்னம் குக்கர் சின்னம் என்றும் பரப்புரை செய்தார் டி.டி.வி. தினகரன்.

"தேர்தல் கால வருமான வரித்துறை சோதனை மிரட்டல் உத்தி" - கமல் ஹாசன்

கமல்ஹாசன்

தேர்தல் காலங்களில் வருமான வரித்துறை நடத்தி வரும் திடீர் சோதனைகள், பிற அரசியல் கட்சிகளை மிரட்டும் மத்திய அரசின் உத்தி போல நினைக்கத் தோன்றுகிறது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் மதுரை அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர், "எங்கள் வேட்பாளர்கள் வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்தவர்கள். எங்களுடன் இருப்பவர்களுக்கு ஏற்கனவே தொழில் இருக்கிறது. அவர்கள் இங்கே மக்களுக்கான கடமையை செய்ய வந்திருக்கிறார்கள். என் எஞ்சிய வாழ் நாட்களை மக்களுக்காக செலவிட விரும்புகிறேன். இந்த கூட்டம் காசு கொடுத்து சேர்த்தது இல்லை. இந்த தொகுதியில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். வீரத்தின் உச்ச கட்டம் அகிம்சை. நல்லதை தொடர்ந்து செய்வது என் கடமை. ஊழலுக்கு மாற்று இன்னொரு ஊழல் கட்சி இல்லை. வேலை இப்போது தான் தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள். தமிழகம் சீரமையும்.,' என்று பேசினார்.

முன்னதாக, கோயம்புத்தூரில் இருந்து மதுரைக்கு தனி விமானம் மூலம் வந்த கமல்ஹாசன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம், தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களையும் அவர்களுக்கு நெருக்கமானவர்களையும் இலக்கு வைத்து நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனை நடப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், இது ஒரு மிரட்டல் உத்தியாகத் தான் இருக்கும். நியாயமான முறையில் வருமான வரித்துறை சோதனை நடக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து செய்ய வேண்டும். வாக்காளர்களுக்கு பல இடங்களில் பட்டுவாடா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இந்த நிலையில், வருமான வரி சோதனை என்பது மத்திய அரசின் மிரட்டல் போக்காக தான் உள்ளது" என்று தெரிவித்தார்.

கொள்கையை கைவிட்டு ஆதாயத்துக்காக கூட்டணி வைக்கும் பாமக: கனிமொழி

கனிமொழி

திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் எஸ்.கே.பொன்னுத்தாயிக்கு ஆதரவாக திமுகவைச் சேர்ந்த தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினர் கனிமொழி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் ,ராஜன் செல்லப்பா மேயராக இருந்தபோது மக்களுக்கு எதுவும் செய்யவில்லை வடக்குத் தொகுதியில் இருந்த போதும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இங்கே வென்றாலும் எதுவும் செய்ய மாட்டார். சட்டமன்றத்திலே உங்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படிப்பட்ட வேட்பாளர் பொன்னுத்தாயி என்பதை உணர்ந்து இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மக்களவை தேர்தலிலும் இதே கூட்டணியைத்தான் ஸ்டாலின் உருவாக்கி இருந்தார். இந்த கூட்டணி என்பது கொள்கைக்காக உருவானது. அதிமுக, பாரதிய ஜனதாவை போல தேர்தலுக்கு தேர்தல் மாறக்கூடிய கூட்டணி அல்ல. பாமக அந்த கூட்டணியில் தான் உள்ளது உடன் இருக்கக்கூடிய ஒரு கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக முதல்வரை பற்றி முன்பு பேசும்போது, ஒரு வார்டு கவுன்சிலராக இருக்க கூட அவர் தகுதி இல்லாதவர் என்று விமர்சித்தார். அதற்கு மேல் அவர் கூறியதை என் வாயால் சொல்ல தயாராக இல்லை. அந்த அளவுக்கு முதலமைச்சர் மீது அவச்சொல்லை பயன்படுத்தியவர், இப்போது அதே அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறார். பதவியில் இருக்க வேண்டும், எந்த வழக்குகளும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பாஜகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி வைத்து உள்ளது என்று கனிமொழி பேசினார்.

பாஜகவின் பினாமி ஆனது அதிமுக - தொல். திருமாவளவன்

திருமாவளவன்

பாரதிய ஜனதா கட்சியின் பினாமி கட்சி போல அதிமுக மாறி விட்டது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளன் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில், பாபநாசத்தில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவை ஆதரித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் தி.மு.க.வை எதிர்த்து மட்டுமே பரப்புரை செய்கின்றன. ஆனால், அவை அ.தி.மு.க, பாரதிய ஜனதாவை பற்றி பேசுவது கிடையாது. ஏனென்றால் அவர்களது இலக்கு தி.மு.க மட்டும்தான். தமிழகத்தில் உள்ள மாம்பழம், தாமரை, இரட்டை இலை மூன்றுமே பாரதிய ஜனதாவின் சின்னம்தான். மாம்பழத்திற்கு ஓட்டு போட்டாலும் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டாலும் அது பாரதிய ஜனதாவுக்கு ஓட்டுப் போடுவதாக தான் அர்த்தம். எடப்பாடிபழனிசாமியை முதலமைச்சர் ஆக்கினால் மோதியை முதலமைச்சர் ஆக்குவதாகவே அர்த்தம். அதுபோல, தமிழ்நாட்டில் ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சர் அல்ல, அமித் ஷா தான் துணை முதலமைச்சர் போல இருக்கிறார். அதிமுக முற்றிலுமாக பாரதிய ஜனதா கட்சியின் பினாமி ஆக மாறி விட்டது. அவர்கள் ஓட்டுக்கு ரூ.5,000 கொடுத்தாலும் மக்கள் இந்த முறை அவர்களுக்கு வாக்களிக்க போவதில்லை என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: