நரேந்திர மோதியை எதிர்க்கும் #GoBackModi ஹேஷ்டேக் எங்கு, எப்படி தொடங்கியது?

பட மூலாதாரம், Reuters
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு முறையும் வரும்போது #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆகிவருகிறது.
இது பணம் கொடுத்தும், வெளிநாடுகளில் இருப்பவர்களாலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் படன்படுத்தி 'பாட்'-கள் (bots) மூலாகவும் ட்வீட் செய்யப்படுவதாகக் குற்றம்சாட்டிய பாரதிய ஜனதா கட்சியினர், பின்னர் #TNWelcomesModi என்ற ஹேஷ்டேகைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் எதிர் ட்வீட்களை பதிவிடத் தொடங்கினர்.
பாகிஸ்தானில் இருப்பவர்கள்தான் இந்தியாவுக்கு எதிராக இவ்வாறு ட்வீட் செய்வதாகவும் நரேந்திர மோதி மற்றும் பாஜக ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
எனினும், ஒப்பீட்டளவில் #GoBackModi என்ற ஹேஷ்டேக்தான் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறது.
உலக அளவில் இந்த ஹேஷ்டேக் முதலிடம் பிடித்தது நரேந்திர மோதியின் அடுத்தடுத்த தமிழ்நாட்டுப் பயணங்களின்போது, இதைப் பதிவிட மோதி எதிர்ப்பாளர்களுக்கு உந்துதலாக அமைந்தது.
ஆரம்ப கட்டத்தில் தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த ட்ரெண்ட் பிற இந்திய மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் பிரபலமானது.

பட மூலாதாரம், Twitter
சமீப ஆண்டுகளில் இது மிகவும் வழக்கமானதாகவிட்டது என்றாலும், இது எங்கு, எப்போது, எப்படித் தொடங்கியது என்று பார்க்கலாம்.
காவிரி மேலாண்மை வாரியம்
ஏப்ரல் 12, 2018 அன்று "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோதியின் தமிழக வருகையை" கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கருப்புக் கொடி போராட்டம் ஒன்றை அறிவித்தன.
இது தொடர்பாகத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தவர்கள் #GoBackModi என்ற ஹேஷ்டேகுடன் ட்வீட் செய்தனர். லட்சக்கணக்கான ட்விட்டர் பதிவுகளுடன் அன்று அந்த ஹேஷ்டேக் உலக அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.
#GoBackModi என்ற ஹேஷ்டேகில் அந்த நாளின் பிற்பகல் வரை மட்டும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான ட்வீட்டுகள் பதிவிடப்பட்டன.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா
2019ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட தமிழகம் வந்தார் நரேந்திர மோதி.

பட மூலாதாரம், Twitter
அன்றும் #GoBackModi என்று ஹேஷ்டேக் மூலம் நரேந்திர மோதிக்கு எதிராகவும், #TNWelcomesModi என்ற ஹேஷ்டேகில் மோதிக்கு ஆதரவாகவும் கருத்துகள் பகிரப்பட்டன.
2ஆம் முறை பிரதமரான பின்னர்
சென்னை ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோதி 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி தமிழ்நாடு வந்தார்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியடைந்து இரண்டாம் முறையாகப் பிரதமராகப் பதவியேற்ற பின்னர், நரேந்திர மோதி முதன்முதலாக சென்னைக்கு வருகை தந்த நாள் அது.

பட மூலாதாரம், Twitter
அப்போதும் சுமார் ஒரு லட்சம் ட்வீட்களை கடந்து உலகளவில் ட்ரெண்டிங் பட்டியலில் சிலமணி நேரம் முதலிடம் பிடித்தது #GoBackModi ஹேஷ்டேக்.
சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் இருந்து அருகில் உள்ள அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு நரேந்திர மோதி செல்வதற்காக ஐ.ஐ.டி வளாக சுற்றுச் சுவரில் ஒரு பகுதி இடிக்கப்பட்டது.
சாலை வழியாகப் பிரதமர் செல்லும்போது அவருக்கு எதிர்க் கட்சியினர் கருப்புக் கொடி காட்டுவார்கள் என்பதால் அதைத் தவிர்க்க காவல்துறையினர் இவ்வாறு செய்ததாக அப்போது உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
சீன மொழியில் #GoBackModi
சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகியோரின் சந்திப்பு மாமல்லபுரத்தில் 2019ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதியன்று நடந்தது. அன்றும் #GoBackModi இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
சீன அதிபரின் வருகையால் gobackmodi என்பது சீன மொழியிலும் ட்ரெண்டான து. கூகுள் ட்ரான்ஸ்லேட்டரில் gobackmodi என்பதற்கான சீன மொழிபெயர்ப்பை பெற்று, அதை ஹேஷ்டேக்காக பயன்படுத்தி பதிவிட்டனர். இந்த மொழிபெயர்ப்பு துல்லியமானதாக இல்லை என்றும் அப்போது கூறப்பட்டது.
#GoBackModi என்ற ஹேஷ்டேகில் பதிவிட்டவர்களில் சிலர் நாங்கள் goback modi என்று பதிவிட்டாலும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்கிறோம் என்றும் கூறினர்.
தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர பிப்ரவரி 14 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு மற்றும் கேரளா வந்தார்.
அப்போதுதான் GoBackModi மற்றும் PoMoneModi ஆகிய ஹேஷ்டேகுகள் கடைசியாக ட்ரெண்ட் ஆகின.
#PoMoneModi மற்றும் #Pray_for_Nesamani

#GoBackModi என்ற ஹேஷ்டேக் மட்டுமல்லாது நரேந்திர மோதியுடன் தொடர்புடைய வேறு சில ஹேஷ்டேகுகளும் இந்திய, உலக அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளன.
2016ஆம் ஆண்டு கேரள மாநிலத்துக்கு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பரப்புரை செய்வதற்காக வந்திருந்த நரேந்திர மோதி, கேரளாவில் உள்ள பழங்குடியின குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் குறித்து பேசியபோது, கேரளாவின் நிலைமை சோமாலியாவை விட அச்சம் தரக்கூடியதாக உள்ளது என்று பேசினார்.
கம்யூனிஸ்டுகள் வலிமையாக உள்ள பேராவூரில் மக்கள் உணவுக்காக குப்பைகளைக் கிளறிக் கொண்டுள்ளனர் என்று அவர் விமர்சித்தார். ஆனால், அதற்கு கேரளாவில் கட்சி பேதமின்றி எதிர்ப்புக்கு கிளம்பியது.
அப்போது #PoMoneModi என்ற ஹேஷ்டேக் மூலம் மலையாளிகள் தங்கள் எதிர்ப்பைக் காட்டினார். மோகன்லால் நடித்த ஒரு மலையாளப் படத்தில் வந்த 'போ மோனே தினேஷா' என்ற வசனத்தை ரீ-மேக் செய்து உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக் இது.
மலையாளம் புரியாத சில வடஇந்தியர்கள் இதற்கு இணையத்தில் பொருள் தேடிக்கொண்டு இருந்தனர்.
2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலைவிட 2019இல் நடந்த தேர்தலில் கூடுதல் இடங்களைப் பெற்று ஆட்சிக்கு வந்தது பாரதிய ஜனதா கட்சி.
அப்போது #Pray_for_Nesamani என்ற ஹேஷ்டேக் தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவிலும் ட்ரெண்ட் ஆனது.
நரேந்திர மோதி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்ற நிகழ்வு பல செய்தி ஊடகங்களின் சமூக வலைத்தளப் பக்கங்களில் நேரலையாக ஒளிபரப்பானது.
அப்போது அவற்றின் பின்னூட்டங்கள் #Pray_for_Nesamani என்ற ஹேஷ்டேக்கால் நிரம்பி வழிந்தன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












