தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: கிலோ கணக்கில் தங்கம் வைத்திருக்கும் வேட்பாளர்கள் யார்?

தங்க நகை

பட மூலாதாரம், SAM PANTHAKY

    • எழுதியவர், கெளதமன் முராரி
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழகத்தின் தேர்தல் பணிகள் மற்றும் பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி, வெள்ளிக்கிழமை மாலையுடன் நிறைவு பெறுகிறது.

திமுக, அதிமுக, பாமக, பாஜக, மநீம, நாம் தமிழர், அமமுக என ஏற்கனவே தமிழகத்தின் பல கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களும் தங்கள் பிரமாண பத்திரத்தோடு வேட்பு மனுக்களை தாக்கல் செய்து விட்டனர்.

இந்த பிரமாணப் பத்திரத்தில் வேட்பாளர்களின் சொத்து மதிப்புகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதில் முக்கிய வேட்பாளர்கள் எவ்வளவு தங்கம் வைத்திருக்கிறார்கள் என்பதைக் கீழே குறிப்பிட்டிருக்கிறோம்.

கோவில்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடவிருக்கும் டி.டி.வி. தினகரன், தன் மனைவி பெயரில் 1,048 கிராம் தங்கம் வைத்திருக்கிறார். அத்துடன் 37.17 கிராம் வைரத்தையும் வைத்திருப்பதாக வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆலந்தூரில் போட்டியிடும் வேட்பாளர் பா. வளர்மதி, 1,092 கிராம் தங்கம் வைத்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

தங்க நகை விவரங்கள்

திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தன் மனைவி பெயரில் 1,600 கிராம் தங்க நகை இருப்பதாக கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட அதே அளவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அக்கட்சியின் சார்பாக திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமான் தன் பெயரில் 150 கிராம் தங்கம் இருப்பதாகவும், தன் மனைவியின் பெயரில் 1,600 கிராம் தங்க நகைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

திமுகவின் பொதுச் செயலாளர் மற்றும் காட்பாடி தொகுதியில் அக்கட்சி சார்பாக போட்டியிட விண்ணப்பித்திருக்கும் துரை முருகன் தன் பெயரில் 500 கிராம் தங்கம் மற்றும் தன் மனைவி பெயரில் 2,224 கிராம் தங்கம் இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். இது போக தன் பெயரில் 1 கேரட் வைரம் மற்றும் தன் மனைவி பெயரில் 5.5 கேரட் வைரம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அதோடு 8 கிலோ வெள்ளிப் பொருட்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

திமுக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்முடி தன் பெயரில் 122 கிராம் மற்றும் தன் மனைவி பெயரில் 2,800 கிராம் தங்கம் இருப்பதாகவும் பிரமாணத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அதோடு அவர் மனைவி பெயரில் 50 கிலோவுக்கு வெள்ளிப் பொருட்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன் தன் பெயரில் 3.85 கிலோ தங்கம் வைத்திருப்பதாகவும், தனது மனைவி பெயரில் 24 கிராம் தங்கம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்: