பொறியியல் படிக்க இயற்பியல் மற்றும் கணிதம் கட்டாயமில்லை - AICTE கூறுவது என்ன?

மாணவர்கள்

பட மூலாதாரம், Getty Images

பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர இயற்பியல் மற்றும் கணிதம் கட்டாயமில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கான கவுன்சில் (AICTE) கடந்த பிப்ரவரி 12 வெள்ளிக்கிழமையன்று கூறியது.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே 2021 - 22ஆம் கல்வியாண்டுக்கான கையேட்டின் அனுமதி கூட்டத்தில் இது தொடர்பாக விரிவாகப் பேசியுள்ளார்.

"மற்ற பாடங்களைப் படித்தவர்களுக்கும் பொறியியல் படிப்பில் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்கிற நோக்கத்தோடு இயற்பியல், கணித பாடங்கள் கட்டாயமில்லை என்கிறோம் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் தேவை இல்லை என்று பொருள் அல்ல. பெரும்பாலான பொறியியல் பட்டப்படிப்புக்கு இப்பாடங்கள் மிகவும் அவசியம் தான்," எனக் கூறியுள்ளார் அனில்.

அதோடு "ஜேஇஇ, பொறியியல் கல்லூரிகளுக்கு நடத்தும் மாநில அரசு நுழைவுத் தேர்வான சி.இ.டி-யில் தொடர்ந்து இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களில் அவர்களே தேர்வை நடத்தலாம். அதே போல இப்பாடங்களின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கைகளையும் மேற்கொள்ளலாம்" என அவர் தெரிவித்துள்ளார்.

"மாநில அரசுகளோ அல்லது பல்கலைகழகங்களோ இதைப் பின்பற்ற வேண்டும் என எந்த வித கட்டாயமும் இல்லை. அவர்கள் தொடர்ந்து இயற்பியல், வேதியியல் கணித பாடங்களை கட்டாய பாடங்களாக வைத்துக் கொள்ளலாம்" எனவும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார் அனில் சஹஸ்ரபுத்தே.

ஆனால் இந்த பாடங்களைப் படிக்காத மாணவர்களுக்கு, பொறியியல் படிக்க புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் ஒரு வாய்ப்பை உருவாக்கித் தருகிறோம் என அக்காணொளியில் கூறியுள்ளார் ஏ.ஐ.சி.டி.இ தலைவர் அனில்.

தற்போது 12-ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணிதம் படித்த மாணவர்கள் மட்டுமே பொறியியல் பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும். கடந்த 2010-ம் ஆண்டு தான் பொறியியல் கல்லூரிகளில் சேர வேதியியல் பாடம் கட்டாயமல்ல என அறிவிக்கப்பட்டது.

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கான கவுன்சிலின் 2021 -22 கையேட்டில்

1. இயற்பியல்

2. கணிதம்

3. வேதியியல்

4. கணிணி அறிவியல்

5. எலெக்ட்ரானிக்ஸ்

6. தகவல் தொழில்நுட்பம்

7. உயிரியல்

8. இன்ஃபர்மேடிக் ப்ராக்டிஸ்

9. உயிரி தொழில்நுட்பம் (Biotechnology)

10. விவசாயம்

11. வொகேஷனல் பாடங்கள்

12. பொறியியல் வரைகலை (Engineering Graphics)

13. வணிகக் கல்வி (Business Studies)

14. தொழில்முனைவோர் (Entrepreneurship) போன்ற 14 பாடங்களில் ஏதாவது மூன்றில் 45%-க்கும் மேல் மதிப்பெண் எடுத்திருந்தாலே பொறியியல் படிப்பில் சேரத் தகுதியானவர்கள் ஆகிறார்கள் எனக் கூறப்பட்டிருந்ததாக தி இந்து பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இப்படி பொறியியல் படிப்புக்குத் தேர்வாகிறவர்களுக்கு, கணிதம், இயற்பியல், பொறியியல் வரைகலை போன்ற இணைப்புப் பாடங்களை பல்கலைக்கழகங்கள் வழங்கும் என அக்கையேட்டில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அச்செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.

இந்த செய்தி சமூக வலைதளங்கள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. பொறியியல் கல்விக்கு இயற்பியல் மற்றும் கணிதம் மிகவும் அவசியம் என சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வலைதளத்தில் Approval Process Handbook 2021 - 22 கையேடு சில எழுத்துப் பிழை காரணமாகவும், குழப்பங்களைத் தவிர்ப்பதற்காகவும் நீக்கப்பட்டிருப்பதாக இந்த இணைப்பின் (https://www.aicte-india.org/sites/default/files/Approval%20Process%20Handbook%20-%20Revised.pdf) கடைசி பத்தியில் கூறப்பட்டிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :