புதுச்சேரியில் 7ஆவது முறையாக குடியரசு தலைவர் ஆட்சி அமல் - பழைய வரலாறு என்ன?

புதுச்சேரி சட்டப்பேரவை

பட மூலாதாரம், TWITTER

புதுச்சேரி அரசியல் வரலாற்றில் ஏழாவது முறையாகவும். கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாகவும் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்திய குடியரசு தலைவர் ஆட்சிக்கான ஆணையை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை மாலையில் பிறப்பித்தார். அதன் விவரம் இந்திய உள்துறையின் அறிவிக்கையிலும் வெளியிடப்பட்டது.

அதில், புதுச்சேரியில் எழுந்துள்ள அரசியல் சூழல்நிலை காரணமாக தனக்கு துணைநிலை ஆளுநர் அளித்த பரிந்துரைப்படி அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்துவதற்கான அவசியம் எழுந்துள்ளதை ஏற்றுக் கொள்வதாகவும், அங்கு சட்டப்பேரவையை முடக்கி வைக்கவும் உத்தரவிட்டுள்ளதாக குடியரசு தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரியில் இதற்கு முன்பு ஆறு முறை குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 7வது முறையாக குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. அவை எப்போது நடந்தன என்பதை பார்க்கலாம்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம், 1954ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி உருவாக்கப்பட்டது. 1968ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி கவிழந்த பிறகு எதிர்கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பு அமைந்த நிலையில், 1968, செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 1969ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதிவரை குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இரண்டாவது முறையாக, ஆளும் திமுகவைச் சேர்ந்த இரு அமைச்சர்கள் புதிதாக உருவாக்கப்பட்ட அதிமுகவில் சேர முடிவெடுத்ததால் ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, 1974ஆம் ஆண்டு ஜனவரி 3 முதல் 1974 மார்ச் 6ஆம் தேதிவரை குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

மூன்றாவது முறையாக, அதிமுக, ஸ்தாபன காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதனால் 1974ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி முதல் 1977ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதிவரை குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அப்போது குடியரசு தலைவர் ஆட்சி, மூன்று ஆண்டுகள் 96 நாட்கள்வரை நீடித்தது.

நான்காவது முறையாக அரசியல் ஸ்திரத்தன்மையை காரணம் காட்டி, அரசு கவிழ்ந்ததால் 1978ஆம் ஆண்டு நவம்பர் 12 முதல் 1978ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதிவரை குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

ஐந்தாவது முறையாக, கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இந்திரா காங்கிரஸ் திரும்பப் பெற்றுக் கொண்ட நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க அடுத்து வந்த முதல்வர் கோரிய வாய்ப்பு மறுக்கப்பட்டு சட்டப்பேரவை கலைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 1983ஆம் ஆண்டு ஜூன் 24 முதல் 1985ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதிவரை குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

ஆறாவது முறையாக, ஆட்சியில் இருந்த திமுக அரசு, பேரவையில் பெரும்பான்மையை பெற்றிருந்தபோதும் சட்டப்பேரவை கலைக்கப்பட்டு, புதுச்சேரி குடியரசு தலைவர் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. அங்கு 1991ஆம் ஆண்டு மார்ச் 4 முதல் 1991ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதிவரை குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருந்தது.

இதன் பிறகு தற்போது, 30 ஆண்டுகள் இடைவெளியில் பெரும்பான்மை பலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி இழந்து விட்டதால் புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: