புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தது மோதி அமைச்சரவை

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்த தமிழிசை சௌந்தரராஜன்

பட மூலாதாரம், @DrTamilisaiGuv

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்த நிலையில், அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த, குடியரசு தலைவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை பரிந்துரை செய்துள்ளது.

முன்னதாக, புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த திங்கட்கிழமை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் கூட்டணி அரசு தோல்வி அடைந்தது. இதையடுத்து தனது அமைச்சரவையின் ராஜிநாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் நாராயணசாமி வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, அம்மாநிலத்தில் பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் என்.ஆர். காங்கிரஸ், அதிமுக, பாஜக இடம்பெற்ற கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பது அல்லது மாற்று அரசு அமையும்வரை காபந்து அரசாக செயல்படுமாறு நாராயணசாமியையே கேட்டுக் கொள்வது அல்லது குடியரசு ஆட்சிக்கு பரிந்துரை செய்வது போன்ற வாய்ப்புகள் துணைநிலை ஆளுநர் தமிழிசையால் பரிசீலிக்கப்பட்டது.

இந்த நிலையில், புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை செய்யும் அறிக்கையை மத்திய அரசுக்கு தமிழிசை அனுப்பி வைத்தார்.

மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டு பிறப்பிக்கும் உத்தரவு அடிப்படையில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வரும். அனேகமாக இன்று இரவுக்குள்ளாக உத்தரவு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரியில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசு, அதன் பதவிக்காலத்துக்கு முன்பே ராஜிநாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட நிலையை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி உருவாக்கியதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

மேலும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண் பேடி இருந்தபோது அவரது துணையுடன் மாநிலத்தில் மக்கள் நல திட்டங்கள் மற்றும் நிர்வாக பணிகளை முடக்க மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி பல முயற்சிகளை மேற்கொண்டதாகவும் நாராயணசாமி கூறினார்.

ஆனால், இந்த விவகாரத்தில் தங்கள் தரப்பு அழுத்தம் ஏதுமில்லை என்று புதுச்சேரி பாஜகவினர் திட்டவட்டமாக மறுத்தனர். இந்தப்பின்னணியில் புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமாக புதுச்சேரி இருந்தது. அதுவும் தற்போது கவிழ்ந்து விட்டதால் அதன் சரிவு, அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

பிரதமரின் புதுச்சேரி வருகை

இதற்கிடையே, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடுக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோதி வியாழக்கிழமை தமிழகம் செல்லவிருக்கிறார். புதுச்சேரியில் நடைபெறும் பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்திலும் அவர் உரையாற்றுகிறார். இதன் மூலம் புதுச்சேரியில் முறைப்படி தமது தேர்தல் பிரசாரத்தை பாஜக துவங்குகிறது.

பிரதமரின் வருகையைத் தொடர்ந்து இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் 28ஆம் தேதி புதுச்சேரிக்கு வருகை தரவிருக்கிறார்.

புதுச்சேரி காங்கிரஸ் அரசு முடிவுக்கு வந்தது எப்படி?

Lt. Governor of Puducherry, Dr.Tamilisai Soundararajan

ஜூன் 10, 2020: காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, அரசுக்கு எதிராகத் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்த காரணத்தினால் கடந்த ஆண்டு ஜூன் 10ஆம் தேதி புதுச்சேரி பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர்.

இதனால் 18ஆக இருந்த காங்கிரஸ் கூட்டணி கட்சியிலிருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 17ஆக குறைந்தது.

ஜனவரி 25, 2021: முதல்வர் நாராயணசாமி உடனான மோதல் போக்கு காரணமாக புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சரும், வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நமச்சிவாயம் மற்றும் உசுடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தான் ஆகிய இருவரும் ஜனவரி 25ஆம் தேதி பதவி விலகினர்.

இதனால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் 17லிருந்து 15ஆக குறைந்தது.

ஜனவரி 28 2021: நமச்சிவாயம் மற்றும் தீப்பாய்ந்தான் இருவரும் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

நாராயணசாமி vs நமச்சிவாயம்: பாஜகவில் சேர்ந்த புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் தலைவர்

பிப்ரவரி 15, 2021: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த புதுச்சேரி யானம் பிராந்திய சட்டமன்ற உறுப்பினர் மல்லாடி கிருஷ்ணா ராவ் கடந்த 15ஆம் தேதி பதவி விலகினார்.

பிப்ரவரி 16, 2021: கிருஷ்ணா ராவ் விலகிய அடுத்த நாளே பிப்ரவரி 16ஆம் தேதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஜான்குமார்‌ பதவி விலகினார்.

இதனிடையே பிப்ரவரி 16ஆம்‌ தேதி இரவு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்த கிரண் பேடியை விடுவித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருந்தார். அந்த பதவிக்கு வேறொருவரை நியமிக்கும் வரை, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை பிப்ரவரி 16ஆம் தேதி இரவு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை கூடுதல் பொறுப்பாக குடியரசு தலைவர் ஒப்படைத்தார்.

பிப்ரவரி 17, 2020: ஆளும் காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை இழந்து விட்டதாக கூறி பிப்ரவரி 17ஆம் தேதி எதிர்க் கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி துணை நிலை ஆளுநரின் தனி செயலரிடம் மனு அளித்தனர்.

இதே, பிப்ரவரி 17ஆம் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ராகுல்காந்தி புதுச்சேரி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 18, 2020: இதனைத் தொடர்ந்து 17ஆம் மாலை புதுச்சேரி வந்த தமிழிசை சௌந்தரராஜன், பிப்ரவரி 18ஆம் தேதி காலை 9 மணிக்கு துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றார். மேலும் அன்றைய தினமே எதிர்க்கட்சிகள் துணைநிலை ஆளுநரை சந்தித்து, காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என நேரடியாக வலியுறுத்தினர்.

கிரண் பேடி நீக்கப்பட்ட பின்னர் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பை கூடுதலாக ஏற்றார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

பட மூலாதாரம், TAMILISAI SOUNDARARAJAN TWITTER

படக்குறிப்பு, கிரண் பேடி நீக்கப்பட்ட பின்னர் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பை கூடுதலாக ஏற்றார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

இதனால், புதுச்சேரி சட்டப்பேரவையில் 22ஆம் தேதிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென, பதிவியேற்ற முதல் நாளான பிப்ரவரி 18ஆம் தேதியே தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டார்.

இதையடுத்து நாராயணசாமி நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்களிக்கும் உரிமை கிடையாது என்றார். இதற்கு பதிலளித்த பாஜக மாநில தலைவரும், நியமன சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன், உச்சநீதிமன்றம் நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் அதிகாரம் உள்ளது என வழக்கொன்றில் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் பங்கு பெறுவோம்‌ என்றார்.

பிப்ரவரி 21, 2020: 22ஆம் தேதி காலை 10 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவை கூடவிருந்த நிலையில், அதற்கு முதல் நாளான 21ஆம் தேதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்பவன் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் பதவி விலகினார். அடுத்த ஒரு மணி‌ நேரத்தில், திமுகவை சேர்ந்த தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பதவி விலகினார்.

ஆளும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியில் அடுத்தடுத்து 6 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியதால், 17ல் இருந்து 11ஆக பலம் குறைந்தது. இதனால் காங்கிரஸ் கூட்டணி அரசு தனது முழு பெரும்பான்மையை இழந்தது.

பிப்ரவரி 22, 2021: புதுச்சேரி சட்டப்பேரவையில் நடந்த தமது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே நாராயணசாமி வெளிநடப்பு செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் வெளிநடப்பு செய்தனர். இதனால் நாராயணசாமி அரசு கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: