இந்தியா Vs இங்கிலாந்து 3வது டெஸ்ட்: இன்றைய போட்டியின் முக்கிய தகவல்கள்

பட மூலாதாரம், BCCI
- எழுதியவர், எம். பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆமதபாதில் உள்ள மோட்டெரா சர்வதேச விளையாட்டரங்கில் புதன்கிழமை (பிப்ரவரி 24) தொடங்குகிறது. இரண்டு போட்டிகளின் முடிவில் 1-1 என தொடர் சமநிலையில் இருப்பதால், இந்தப் போட்டி மிகவும் முக்கியம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது. இந்தத் தொடரின் முடிவில் மட்டுமல்ல, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முடிவிலும் இந்தப் போட்டி மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தும்.
மோட்டெரா மைதானத்தில் நடக்கும் இந்த மூன்றாவது டெஸ்ட் பகலிரவு போட்டியாக நடக்கிறது. அதனால், இதன் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. இதுவரை விளையாடியுள்ள இரண்டு பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஒரு வெற்றியும் ஒரு தோல்வியும் பெற்றிருக்கிறது. கொல்கத்தாவில் நடந்த போட்டியில் வங்கதேசத்தை வென்றிருந்தாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோற்றிருக்கிறது இந்தியா. அதனால், ஒரு பெரிய அணியை பகலிரவு போட்டியில் வீழ்த்தினால், அது டெஸ்ட் அரங்கில் இந்தியா எந்த அளவுக்கு பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது என்பதை உணர்த்தும்.
மேலும், இதுவரை கோலியின் தலைமையில் இந்தியா எந்த கோப்பைகளையும் வென்றதில்லை. அதை நிவர்த்தி செய்வதற்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஒரு நல்ல வாய்ப்பு. அதன் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இதுதான் கடைசி வாய்ப்பு. காரணம், பகலிரவு டெஸ்ட் போட்டிகள் எப்படியும் முடிவைக் கொடுத்து விடும்.
ஆண்கள் பிரிவில் இதுவரை நடந்திருக்கும் 15 சர்வதேச பகலிரவு போட்டிகளில் ஒன்றுகூட டிரா ஆனதில்லை. அனைத்தும் முடிவைக் கொடுத்திருக்கின்றன. அதனால், இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பில் நீடிக்கும்.
இப்போது உலக சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில், 70 சதவிகித புள்ளிகள் பெற்று நியூஸிலாந்து முதலிடத்திலும், 69.7 சதவிகித புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்திலும், 67 சதவிகித புள்ளிகளோடு இங்கிலாந்து நான்காவது இடத்திலும் இருக்கின்றன. ஆஸ்திரேலியா (69.17%) மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

பட மூலாதாரம், Virat Kohli Twitter
அடுத்த இரண்டு போட்டிகளிலும் வென்றால்தான் இங்கிலாந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியும். இந்தியாவைப் பொறுத்தவரை இந்தத் தொடரை வென்றாலே போதும். அதற்கு இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். ஒருவேளை, இந்தியா இந்தப் போட்டியில் தோற்று விட்டால், அதிகபட்சம் இந்தத் தொடரை டிரா செய்யவே முடியும். அதனால், இந்திய அணிக்கு வெற்றி மிகவும் அவசியம்.
சென்னையில் நடந்த இரண்டாவது டெஸ்டில் வென்ற நம்பிக்கையோடு களமிறங்கும் இந்திய அணியில், இப்போது உமேஷ் யாதவும் இணைந்திருக்கிறார். அதனால், அணி இன்னும் பலமடையும். காயத்தால் முதலிரண்டு போட்டிகளுக்கான அணியில் சேர்க்கப்படாத உமேஷ், இப்போது ஷர்துல் தாகூருக்குப் பதில் அணியில் இணைந்திருக்கிறார். அவர் வந்திருப்பதால் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் ஏற்படலாம்!
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இரண்டாவது டெஸ்டில் ஓய்வளிக்கப்பட்ட ஜஸ்பிரீத் பும்ரா இந்தப் போட்டியில் அணிக்குத் திரும்பிவிடுவார். முகமது சிராஜ் இடத்தில் அவர் விளையாடுவது உறுதி. இன்னொரு மாற்றம்தான் இந்தியா மிகவும் யோசித்து எடுக்கவேண்டும். குல்தீப் யாதவ் தன் இடத்தைத் தக்கவைத்துக்கொள்வாரா இல்லை அவருக்குப் பதில் உமேஷ், ஹர்திக், வாஷிங்டன் சுந்தர் என ஏதேனும் மாற்றம் இருக்குமா என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆடுகளம் ரிவர்ஸ் ஸ்விங்குக்கு ஒத்துழைக்கும் பட்சத்தில் உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்படலாம். ஆனால், இந்தப் போட்டியில் ரிவர்ஸ் ஸ்விங் பெரிதாக எடுபடாது என்று சொல்லியிருக்கிறார் இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன். இந்தப் போட்டி விளையாடப்படும் பிங்க் SG பந்துகளில் பயிற்சி செய்திருக்கும் அவர்,
"கூகபரா, டியூக் பந்துகளைப் போல் அல்லாமல், இந்தப் பந்தின் மேற்பரப்பில் அதிகமாக அரக்கு இருக்கிறது. அதனால், இந்தப் பந்து பழையதாவதற்கு வெகுநேரம் எடுத்துக்கொள்ளும். அதனால், ரிவர்ஸ் ஸ்விங் இந்தப் போட்டியில் பெரிய தாக்கம் ஏற்படாது" என்று சொல்லியிருக்கிறார் ஆண்டர்சன். இந்திய அணியும் அதையே கருதினால் உமேஷ் இந்தப் போட்டியில் ஆட வாய்ப்பிருக்காது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
பகலிரவு போட்டிகளைப் பொறுத்தவரை மாலை நேரங்களில் பேட்டிங் செய்வது சிரமமாக இருக்கும். இதுபற்றிப் பேசிய ரோஹித், "நான் அதிகம் பகலிரவு போட்டிகளில் ஆடியதில்லை. வங்கதேசத்துக்கு எதிராக ஒரேயொரு போட்டியில் மட்டும் ஆடினேன். ஆனால், மாலை நேரத்தில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், என் அணியினரோடு நிறைய ஆலோசித்தேன். சூரியன் மறையும் காலகட்டத்தில் பேட்டிங் செய்வது மிகவும் சிரமமாக இருக்கும் என்று தெரிகிறது" என்று கூறினார்.
ரோஹித் சொன்னது போலத்தான், இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரஹாம் தோர்ப்பும் கூறினார்.
"பகலிரவு போட்டிகளில், மற்ற நேரங்களைவிட மாலை வேளையில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளம் ஒத்துழைக்கும். அப்போது பேட்டிங் செய்வது கொஞ்சம் கடினம்" என்றார். இதுவரை நடந்த பகலிரவு போட்டிகளின் எண்களைப் பார்த்தாலும் அது புரியும். பெரும்பாலான போட்டிகள் நான்காவது நாளிலேயே முடிந்துவிடும். மாலை நேரத்தில் மட்டுமல்ல, மற்ற நேரங்களிலும் பேட்டிங் செய்வது கடினம்தான். அதனால், கூடுதல் பேட்ஸ்மேன் வேண்டுமென கோலி விரும்பினால், ஹர்திக் பாண்டியா அந்த வாய்ப்பைப் பெறலாம். சென்னை போட்டியின் வலைபயிற்சியிலேயே பிங்க் பந்தில் தொடர்ந்து பந்துவீசி பயிற்சி செய்திருக்கிறார் ஹர்திக்.
உள்ளூர் முதல் தரப் போட்டிகளில் பிங்க் பந்தில் விளையாடிய வீரர்கள், ரிஸ்ட் ஸ்பின்னர்களை எதிர்கொள்வது சிரமமாக இருந்தது என்று பொதுவான கருத்தை முன்வைத்திருக்கிறார்கள். இந்தவொரு காரணத்துக்காக குல்தீப் மீண்டும் ஒரு வாய்ப்பைப் பெற்றாலும் பெறலாம்.
இரு தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த இந்திய வீரர் ரோஹித் ஷர்மா, "இந்த ஆடுகளம் சென்னை ஆடுகளத்திலிருந்து எந்த வகையிலும் வேறுபட்டிருக்காது. அதைப்போன்றுதான் இருக்கும். ஸ்பின்னுக்கு ஒத்துழைக்கும் என்று கருதுகிறேன்" என்று கூறினார்.
இந்த மைதானத்தில் இதற்கு முன்பு நடந்த சையது முஷ்தாக் அலி தொடரையும் அதையே உணர்த்துகிறது. அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில், 15 ஓவர்களை (20 ஓவர்களில்) சுழற்பந்துவீச்சாளர்களுக்குக் கொடுத்து பரோடாவை சுருட்டி சாம்பியன் பட்டம் வென்றது தமிழ்நாடு. அதனால், கோலியும் சுழற்பந்துவீச்சாளர்களையே ஆயுதமாகப் பயன்படுத்த நினைப்பார். இரண்டாவது டெஸ்டில் ஃபீல்டிங் செய்தபோது காயமடைந்த சுப்மான் கில், விளையாடுவதற்குத் தயாராக இருந்தால் வேறு எந்த மாற்றமும் இருக்காது.
இங்கிலாந்து அணியிலும் கடந்த போட்டிகளில் ஆடாத வீரர்கள் பலரும் அணியோடு இணைகிறார்கள். சென்னையில் கீழே விழுந்து காயமடைந்த ஜேக் கிராலி இப்போது திடமாக இருப்பதாகத் தெரிகிறது. கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடாமல் இருந்த வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரும் அணிக்குத் திரும்பலாம்.

பட மூலாதாரம், BCCI
ரொடேஷன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஜேம்ஸ் ஆண்டர்சன் நிச்சயம் இந்தப் போட்டியில் விளையாடுவர். இவர்கள் போக, ஜானி பேர்ஸ்டோவும் அணியினரோடு இணைந்திருக்கிறார். கிராலி ஆடாதபட்சத்தில் நம்பர் 3 பொசிஷனில் அவர் விளையாடக்கூடும்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என கலக்கிய ஆல்ரவுண்டர் மொயீன் அலி, நாடு திரும்பிவிட்டார். இரண்டு இன்னிங்ஸிலும் சேர்ந்து 8 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர், இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக பேட்டிங் செய்து 18 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். அவர் இல்லாதது அந்த அணியின் ரொடேஷன் திட்டம் மீது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்குப் பதில் டாம் பெஸ் மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பெறலாம்.
முதலிரு போட்டிகளைப் போலவே இந்தப் போட்டியிலும் டாஸ் முக்கியத்துவம் பெறும். சுழலுக்குச் சாதகமான இதுபோன்ற போட்டிகளில் கடைசியாக பேட்டிங் செய்வது எந்த அணிக்குமே பெரும் பின்னடைவாக அமையும். அதனால், டாஸ் வென்று முதலில் பேட் செய்யவே இரண்டு அணிகளும் விரும்பும்.
பகலிரவு போட்டி என்பதைக் கடந்து, மோட்டெரா சர்தார் படேல் மைதானத்தில் இந்தப் போட்டி நடப்பதும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் ஒரு சர்வதேசப் போட்டி அங்கு நடக்கப்போகிறது. மறுசீரமைப்புக்குப் பிறகு உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாகியிருக்கும் இங்கே இந்திய அணி விளையாடுவதைப் பார்க்க, ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு இது 100-வது டெஸ்ட் போட்டி. சில மைல்கல்கள், வரலாற்று தருணங்கள், கோப்பை வாய்ப்பு என இந்தப் போட்டி பல விதங்களில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













