காங்கிரஸ் vs பாஜக: புதுச்சேரி நாராயணசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புமா?

- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து பதவி விலகியுள்ள சூழலில் வரும் 22ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறது நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு.
இதில் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியுமா முடியாதா என்று காங்கிரஸ் - பாஜக இடையே கருத்து மோதல் உருவெடுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்த்த அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர் அடுத்தடுத்து தங்களுடைய பதவியிலிருந்து விலகினர். இதில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், மற்றும் எம்எல்ஏ தீப்பாய்ந்தான் இருவரும் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர்.
இதனால் தற்போது ஆளும் தரப்பு காங்கிரஸ் - 10, திமுக - 3, சுயேச்சை ஒருவர் என 14 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. எதிர் தரப்பு, என்.ஆர்.காங்கிரஸ் - 7, அதிமுக - 4, நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் உட்பட 14 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
இதில் சபாநாயகர் பொதுவான நபர் என்பதால், அவருடைய வாக்கு ஆளும் அரசின் 14 சட்டமன்ற உறுப்பினர்களில் எடுத்துக் கொள்ளப்படாது. இரு தரப்பிலும் சமமாக வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் தருணத்தில் மட்டுமே சபாநாயகர் வாக்களிக்க வேண்டிய சூழல் வரும்.
இந்த சூழலில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை இழந்துவிட்டதாகக் கூறி, சட்டப்பேரவையில் நம்பிக்கை கணக்கெடுப்பு நடத்த எதிர்க் கட்சியினர் துணைநிலை ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வரும் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கோரிக்கை வைத்தனர்.

பட மூலாதாரம், TAMILISAI SOUNDARARAJAN TWITTER
இதனை ஏற்ற தமிழிசை சௌந்தரராஜன், வரும் 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையைக் கூட்டி, குரல் வாக்கெடுப்பு வாயிலாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முதல்வர் நாராயணசாமிக்கு உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் 22ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறும் என சட்டப்பேரவை செயலர் முனுசாமி நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு அதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியுமா?
இதனிடையே இதற்குப் பதிலளித்த முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
மேலும் அவர், "எதிர்க்கட்சிகளுக்கு 14 சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 11 மட்டுமே இருக்கின்றனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் மூன்று நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. இதுகுறித்து சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தெரிவித்துள்ளார்.
நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்ற முதல்வரின் கருத்து குறித்து, புதுச்சேரி நியமன சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மாநில தலைவருமான சாமிநாதனிடம் பிபிசி கேள்வி எழுப்பியது.

அதற்கு பதிலளித்த அவர், "நாராயணசாமி தொடர்ந்து தவறான கருத்தைக் கூறி வருகிறார். உச்ச நீதிமன்றத்தில், நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்குரிமை இருப்பதாக தீர்ப்பளித்திருக்கிறது. அண்மையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையமும், நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை இருப்பதாக கூறியிருக்கின்றது. உச்ச நீதிமன்றத்தை எதிர்த்து முதல்வர் இதுபோன்று கூறுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. மேலும், சட்டப்பேரவையில் உச்ச நீதிமன்றத்தை எதிர்த்து செயல்படுவதற்கான வாய்ப்பு சபாநாயகருக்கு கிடையாது," என்று பதிலளித்தார்.
நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் இரண்டு பேர் கொண்ட அமர்வு தீர்ப்பளித்து இருக்கிறது, இதுவே இறுதியாக எடுத்துக்கொள்ள முடியாது. இதன்பிறகு ஐந்து பேர் கொண்ட அமர்வு இருக்கிறது, மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்யலாம் என பிபிசிக்கு புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் கூறுகிறார்.

"1999ஆம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, பாஜக தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த தனது ஆதரவை அதிமுக விலகிக்கொண்டது. அந்த நேரத்தில், அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த மறைந்த ஜெ.ஜெயலலிதா நாடாளுமன்ற சபாநாயகரிடம் கடிதம் ஒன்றைக் கொடுக்கிறார். அதில், நாடாளுமன்றத்தில், நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கக் கூடாது என்று கூறியிருந்தார். அப்போது அதை ஏற்றுக்கொண்டதால், வாஜ்பேயி அரசு ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மேலும் இதே புதுச்சேரி சட்டப்பேரவையில், 1990ஆம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பிலிருந்த போது, நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்குரிமை இல்லை என்று கூறி விலக்கிவிட்டனர். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே நாங்கள் உச்ச நீதிமன்றத்தில், மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்ய இருக்கிறோம்," என்றார் அவர்.
காங்கிரஸ் கூட்டணிக் கட்சியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். எதிர்க் கட்சியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதன்படி ஆளும் அரசிற்குப் பெரும்பான்மை இருப்பதாக அரசுக் கொறடா கூறுகிறார்.
"ஆனால், தேர்தலில் நின்று மக்களால் குறைந்தபட்ச வாக்கைக் கூட பெறாமல் தேர்தலில் தோல்வியடைந்த பாஜக உறுப்பினர்கள், மத்திய அரசு மூலமாக நியமன சட்டமன்ற உறுப்பினர்களாகச் சட்டமன்றத்திற்குள் வந்துள்ளனர். மக்களால் புறக்கணிக்கப்பட்ட இவர்கள், மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை வெளியே அனுப்புவது என்பது மன்னராட்சி போன்று இருக்கிறது. இதுபோன்ற செயல்களால் ஜனநாயகம் அதன் மதிப்பை இழந்துவிடும்," என்று அனந்தராமன் தெரிவித்துள்ளார்.
சட்டம் என்ன சொல்கிறது?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கின்ற உரிமைகள் அனைத்தும் புதுச்சேரியில் உள்ள மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கிறது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து, மூத்த வழக்கறிஞர் சுப்பிரமணியன் பிபிசிக்கு விளக்கமளித்த போது, "இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 239 A-ல் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அல்லது நியமிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரும் சேர்ந்து புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக செயல்படலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதன்படி, மக்களால் தேர்ந்தெடுப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் மற்றும் உரிமைகள் இருக்கிறதோ, அதே உரிமைகள் மத்திய அரசால் நியமிக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இருக்கிறது. இந்த சட்டத்தில் நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை இல்லை என்று எங்கும் குறிப்பிடவில்லை," என்கிறார் அவர்.
குறிப்பாக மத்திய அரசு நியமிக்கக்கூடிய நியமன உறுப்பினர்கள் அரசு ஊழியர்களாக இருக்கக்கூடாது என்ற நிபந்தனை மட்டுமே உள்ளது. எந்த பிரிவைச் சேர்ந்தவர்களை நியமிக்கக்கூடாது என்ற நிபந்தனைகள் கிடையாது.
"தற்போது இரண்டு தரப்பிலும் தலா 14 சட்டமன்ற உறுப்பினர்கள் சமமாக இருந்தாலும், இதில் சபாநாயகரை 14 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவராக எடுத்துக்கொள்ள முடியாது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இரு தரப்பிலும் சமமான உறுப்பினர்கள் இருக்கும்போது, அதில் அவர் விருப்பப்படி கட்சியைச் சாராமல் அவருடைய தனிப்பட்ட கருத்தியல் அடிப்படையில், சிறந்த ஒன்றுக்கு வாக்களிக்க மட்டுமே உரிமை உள்ளது. இல்லையென்றால் அவருக்கு வாக்களிக்கக்கூடிய அதிகாரம் கிடையாது. இதுவே, சட்டத்தின் நிலைப்பாடு.
ஒருவேளை சபாநாயகர் நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்று எந்தவொரு சட்டத்தையாவது அவர் சுட்டிக்காட்டி வாக்கெடுப்பைப் பரிசீலனை செய்யாமல் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படையில் மூன்று உறுப்பினர்களை நியமிக்கலாம் என்று இருப்பதால், இதைமீறி சபாநாயகர் செயல்படவாய்ப்பு கிடையாது. இதைமீறி சபாநாயகர் செயல்பட்டால், யூனியன் பிரதேச சட்டம் 51 a மற்றும் b பிரிவுகளின்கீழ் இந்த ஆட்சியை முடக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது," என்கிறார் வழக்கறிஞர்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













