புதுச்சேரி நாராயணசாமி அரசுக்கு முற்றும் நெருக்கடி: காங்கிரஸ், திமுகவைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏக்கள் விலகல்

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவைச் சேர்ந்த தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.வெங்கடேசன் பதவி விலகியுள்ளார். கடந்த 2019ஆம் அண்டு புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வெங்கடேசன்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிநாராயணன் தனது பதவி விலகிய ஒரு மணி நேரத்துக்குள் திமுக சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் சபாநாயகர் இல்லாமல், புதுவை சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் ஒன்பதாகவும், திமுகவின் பலம் இரண்டாகவும் குறைந்துள்ளது.

நாளை மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமிக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் அரசுக்கு ஆதவான உறுப்பினர்களின் எண்ணிக்கை 12-ஆகக் குறைந்துள்ளது. எதிர்க்கட்சிகள் வரிசையில் பாஜகவைச் சேர்ந்த 3 நியமன உறுப்பினர்கள் உள்பட, எதிராக 14 உறுப்பினர்களும் உள்ளனர்.
நாளை காலை 10 மணிக்கு
புதுவை சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் காங்கிரஸ் திமுக கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணிக் கட்சிகள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, "நாளை காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடுவதற்கு முன்பாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசித்தோம். ஆனால் இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை. நாளை சட்டப்பேரவை கூடுவதற்கு முன்பு எங்களின் நிலைப்பாடு குறித்து வெளிப்படும்," எனத் தெரிவித்துள்ளார்.
நாராயணசாமிக்கு நெருக்கமான எம்.எல்.ஏ
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முதல்வர் நாராயணசாமியின் சட்டமன்ற நடவடிக்கைகளுக்கான செயலாருமான லட்சுமி நாராயணன் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இன்று பதவி விலகினார்.
இதற்கான கடிதத்தை சபாநாயகர் சிவக்கொழுந்துவின் இல்லத்தில் அவரைச் சந்திந்து வழங்கினார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களை தொடர்ந்து மேலும் ஒரு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகியுள்ளது புதுச்சேரியில் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு பதவி விலகிய நமச்சிவாயம் மற்றும் தீப்பாய்ந்தான் ஆகியோர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தனர்.
தற்போது பதவி விலகிய லட்சமி நாராயணசாமி புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்தத் தகவல் இன்னும் உறுதியாகவில்லை.
'காங்கிரஸ் ஏற்கனவே பெரும்பான்மை இழந்துவிட்டது'

பதவி விலகியது குறித்து விளக்கமளிக்க லட்சுமி நாராயணன், "எனக்கான உரிய மரியாதை ஆட்சியிலும், கட்சியிலும் வழங்கப்படவில்லை. ஆனால் என்னால் இந்த அரசு கவிழ்ந்து விடக்கூடாது என்பதற்காக பொறுமையாகக் காத்தேன். தற்போது எல்லோருமே பல காரணங்களுக்காக முடிவெடுத்துள்ளனர். இந்த நிலையில் இப்பொழுதாவது என்னுடைய ஆதங்கத்தை, வருத்தத்தை இவர்கள் மீதும், கட்சியின் மீதும், ஆட்சியின் மீதும் வெளிப்படுத்துவதற்காக என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளேன். எனக்கு என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பல கட்சிகளிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. என்னுடைய தொகுதி மக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட முடிவைத் தெரிவிப்பேன்," என்றார் அவர்.
மேலும் அவர், "ஆளும் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நாளை சட்டப்பேரவை கூட இருக்கிறது. இதில் சபாநாயகரைத் தவிர்த்து காங்கிரஸ் கட்சிக்கு 13 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், எதிர்த் தரப்பில் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறனர். தற்போது நான் விலகியதால் இந்த காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துவிடவில்லை. ஏற்கனவே பெரும்பான்மையை இழந்துவிட்டது," என லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













