தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: தோற்றுப்போனதாக வைகோ வருத்தப்பட்டது ஏன்? மனம் திறக்கும் துரை வையாபுரி

பட மூலாதாரம், Durai
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ம.தி.மு.க-வின் புதிய முகமாக அக்கட்சியின் நிர்வாகிகளால் முன்னிறுத்தப்படுகிறார் வைகோவின் மகன் துரை வையாபுரி. கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி நடைபெற்ற ம.தி.மு.கவின் உயர்நிலைக் குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும், `துரை வையாபுரியை முன்னிறுத்த வேண்டும்' என்ற குரல்கள் நேரடியாக வெளிப்பட்டன.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஞாயிறன்று நடைபெற்ற திருமண விழாவில் பேசிய துரை வையாபுரி, `இதுவரையில் தந்தைக்கு மகனாக இருந்தேன். இனி தலைவருக்கு ஒரு நல்ல தொண்டனாக இருப்பேன்' என்றார். அவரது பேச்சுக்குக் கூட்டத்தில் பலத்த கைதட்டல்கள். இந்நிலையில், இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட நான்கு மீனவர்களில் ஒருவரான ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தைச் சேர்ந்த சாம் டேனியல் என்பவரின் மனைவிக்கு நர்ஸிங் படிப்புக்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு, பட்டய சான்றிதழைக் கொடுப்பதற்காக துரை வையாபுரி வந்திருந்தார். அவரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
`ம.தி.மு.கவின் தொண்டன் என்ற வார்த்தையே பெரிதானது' என்கிறீர்கள். அண்மையில் நடைபெற்ற ம.தி.மு.க உயர்நிலைக்குழு கூட்டத்திலும், `நீங்கள் கட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும்' என நிர்வாகிகள் வலியுறுத்தினர். எதனால் இப்படியொரு சூழல் ஏற்பட்டது?
``நான் தலைவரின் மகன் என்பது ஒருபுறம் இருக்கட்டும். அவரது வேலைப்பளுவைக் குறைப்பதற்காக கடந்த 2 ஆண்டுகளாக கட்சித் தொண்டர்களின் நல்லது, கெட்டது போன்றவைகளில் பங்கெடுத்து வருகிறேன். ம.தி.மு.கவின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் வேறுவிதமான எதிர்பார்ப்புகள் உள்ளன. `நான் நேரடி அரசியலுக்கு வர வேண்டும், கட்சிப் பொறுப்பில் பங்கேற்க வேண்டும், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும்' என அவர்கள் விரும்பினர். அப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் தேவையில்லை. `நான் தந்தைக்கு மகன் மட்டுமல்ல, எப்போதும்போல கட்சியையும் தலைவரையும் பாதுகாக்க வேண்டிய கடமை எனக்குள்ளது' என்ற நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன். நேற்று (21 ஆம் தேதி) நடைபெற்ற திருமண நிகழ்ச்சியிலும் இதைத்தான் பேசினேன்."

பட மூலாதாரம், DURAI
சமூகப் பணிகளை முன்னெடுக்கும் யோசனை எப்போது தோன்றியது?
`` என்னுடைய வயது 48. நான் ஒரு இலக்கை நிர்ணயித்திருந்தேன். அதாவது, `45 வயதுக்கு மேல் எந்தத் தொழிலையும் மேற்கொள்ளக் கூடாது' என்று. அதேநேரம், குடும்பத்துக்குத் தேவையான கடமைகளைச் செய்து முடிக்க வேண்டும் என நினைத்தேன். வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், என்னுடைய தந்தையால் குடும்பத்துக்குத் தேவையான கடமைகளை முழுமையாகச் செய்ய முடியவில்லை. அதனை அவர் செய்யக் கூடாது என்பதல்ல. அவருடைய அரசியல் பணியின் பளு காரணமாக அவரால் செய்ய முடியவில்லை. அப்படியிருக்கும்போது, என் குழந்தைகளுக்கு நான் ஒரு தகப்பனாக மேற்கொள்ள வேண்டிய கடமைகளைச் செய்து முடிக்க வேண்டும் என நினைத்தேன். இப்போது என்னுடைய குழந்தைகள் கல்லூரியில் படிக்கின்றனர். என் மகள் பி.எஸ்சி இறுதியாண்டு படித்து வருகிறார். என் மகன் பி.இ தகவல் தொழில்நுட்பப் பிரிவில் முதலாம் ஆண்டு சேர்ந்திருக்கிறார்.
சிறு வயதில் இருந்தே எனக்கு சுற்றுச்சூழலில் ஆர்வம் அதிகம். வனவிலங்கு சரணாலயம் செல்வது, அதனைக் காப்பதற்கான பணிகளை மேற்கொள்வது போன்றவற்றில் ஈடுபாடு காட்டினேன். என்னுடைய தொழிலின் காரணமாக அதற்கான நேரத்தை ஒதுக்குவதில் சிரமம் இருந்தது. ஐ.டி.சி கம்பெனியின் விநியோகஸ்தராக இருந்தேன். அந்தப் பணியை ராஜிநாமா செய்துவிட்டேன். கடந்த 3 ஆண்டுகளாக எந்தத் தொழிலையும் செய்யவில்லை. இதில் குறிப்பிடப்பட வேண்டிய ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், என்னுடைய தந்தையாருக்கு 2019 ஆம் ஆண்டு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்படிப்பட்ட நிலையில், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டது. அது நான் விரும்பிய ஒன்றல்ல. அதனை நோக்கித் தள்ளப்பட்டேன்.
சமூகப் பணிகளைப் பொறுத்தவரையில், `நான்கு பேருக்கு உதவியாக இருக்க வேண்டும்' என நினைத்தேன். அது அரசியல் பணியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சுற்றுச்சூழல் பணி, ஆதரவற்றோர் இல்லம், சென்னை புற்றுநோய் சிகிச்சை மையம் ஆகியவற்றில் என்னால் முடிந்த சமூகப் பணிகளைச் செய்தேன். அதிலும், மருத்துவத் துறையில் ஆர்வம் இருந்ததால் கேன்சர் இன்ஸ்ட்டியூட்டில் சில சமூகப் பணிகளை மேற்கொண்டேன். அடிப்படையில் நான் மருத்துவர் அல்ல. கட்சிக்காரர்கள் யாராவது கேட்டால், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை எடுப்பது தொடர்பான ஆலோசனைகளைக் கூறுவேன். இப்போது நேரம் இருப்பதால் நிறைய சமூகப் பணிகளை முன்னெடுக்க முடிகிறது."
நீங்கள் கூறிய பதில்களில் இருந்தே 2 கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். `45 வயதுக்கு மேல் சமூகப் பணிகளில் ஈடுபடுவதற்கு குடும்பத்துக்கான கடமையும் ஒரு காரணம்' என்கிறீர்கள். உங்கள் தந்தையின் அருகாமை கிடைக்கவில்லை என்பதாகப் பார்க்கலாமா?
`` ஆமாம். சிறு வயதில் இதனை நான் உணர்ந்திருக்கிறேன். ஆனால் இதுதான் வாழ்க்கை எனக் காலப்போக்கில் என்னுடைய குடும்பத்தினர் உணர்ந்து கொண்டார்கள். அது நானும் சரி.. என்னுடைய தங்கைகளும் சரி, அம்மாவும் சரி.. அதனை உணர்ந்து கொண்டோம்."

பட மூலாதாரம், DURAI
மதுவுக்கு எதிரான பிரசாரத்தை வைகோ முன்னெடுக்கும்போது, நீங்கள் ஐ.டி.சி விநியோகஸ்தராக இருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியதே?
``ஆமாம். அந்த நெருடல் இருந்ததால்தான் 3 ஆண்டுகளுக்கு முன்பே அந்த வேலையில் இருந்து விலகிவிட்டேன். ஐ.டி.சியைப் பொறுத்தவரையில் புகையிலை என்பது விற்பனையின் ஓர் அங்கம்தான். உணவுப் பொருள்கள், நோட்டு புத்தகங்கள், கோதுமை ஆகியவற்றோடு புகையிலை விற்பனையும் உண்டு. இது தலைவருக்கு சங்கடம் ஏற்படுத்தும் என்பதால் விலகிவிட்டேன்."
அடையாறு கேன்சர் இன்ஸ்ட்டியூட்டில் சமூகப் பணிகளை முன்னெடுத்ததும் இதன் தொடர்ச்சி என எடுத்துக் கொள்ளலாமா?
``கண்டிப்பாக. அதில் மாற்றமே இல்லை. தவிர, புற்றுநோய் தொடர்பாக சிகிச்சை கொடுத்தாலும் மரணம் நிச்சயம் என்பது சில நோய்களில் இருக்கும். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள், ஆறு மாத காலமோ, ஒரு வருடமோ வலியில்லாத வாழ்க்கையை அவர்களுக்குக் கொடுப்பது, இறுதிக் காலத்தில் அவர்கள் நிம்மதியாக இருக்க வைப்பது என என்னுடைய பணி எனத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்."
`ஆயிரம் பட்டம் பதவிகளைவிட ம.தி.மு.கவின் தொண்டன் என்ற அடையாளம் போதும்' என்கிறீர்கள். அப்படியானால், ம.தி.மு.கவில் உங்கள் வருகை உறுதியாகிவிட்டதா?
`` ம.தி.மு.கவுக்குள் வருவது என்பதைவிட நல்ல தலைவருக்குள்ள தொண்டர்களில் நானும் ஒருவன் எனக் கூறுவதையே விரும்புகிறேன். என்னுடைய தந்தை, ஒரு நல்ல தலைவராக இருக்கிறார். இருப்பினும், தற்போதுள்ள காலச்சூழலில் என்னுடைய பங்களிப்பு கட்சிக்கு அவசியமானதாக இருக்கிறது. அதைவிட, ஒரு நல்ல மனிதருக்குத் தொண்டன் என்பதாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்".
`ம.தி.மு.கவில் இளைஞரணிப் பொறுப்பை நீங்கள் ஏற்க வேண்டும்' என்ற குரல்கள் வருகிறதே?
`` ஒவ்வொருவருக்கும் ஓர் ஆசை இருக்கும். என்னைப் பொறுத்தவரையில் கட்சிக்காரர்கள் அங்கீகரிப்பதைவிட மக்கள் அங்கீகரிக்க வேண்டும் என விரும்புகிறேன். அதற்கான பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். அரசியலுக்கு வருவேன் என கனவிலும் நான் நினைத்தது கிடையாது. அதற்குண்டான பயிற்சிகள் எதுவும் எனக்குக் கிடையாது. மேடைப்பேச்சு என்பதே எனக்குப் புதியது. நேற்று திருமணத்தில் பேசப் போகும்போதுகூட, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதச் செல்வது போலத்தான் இருந்தது. இது ஒரு விபத்து என்றுதான் சொல்வேன். நான் விரும்பி இதற்குள் செல்லவில்லை."
`சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் களமிறங்கலாம்' எனச் சொல்லப்படுகிறதே?
``மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் ஆகியோருக்கு அந்த விருப்பம் இருக்கிறது. `கட்சியின் நலன் கருதி நீங்கள் முடிவெடுக்க வேண்டும்' எனத் தலைவரிடம் சொல்கின்றனர். எங்களைப் பொறுத்தவரையில், `அதனைச் செய்ய வேண்டாம்' என்ற நெருடல் இருக்கிறது. `மற்றவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்' என நினைக்கிறோம்.
நீங்கள் கட்சிப் பதவிக்கு வருவதற்கு வைகோ பெரிதும் தயக்கம் காட்டுவது ஏன்?
`` மாவட்ட செயலாளர்கள், கீழ்மட்ட நிர்வாகிகள் எனப் பலரும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். ஒட்டுமொத்தமாக அனைவரும் கோரிக்கை வைக்கும்போது, அவரால் பதில் பேச முடியவில்லை. அவர் வீட்டுக்கு வரும்போது இதைப் பற்றி வருத்தத்துடன்தான் சொன்னார். எங்களிடம் பேசும்போது, `என்னுடைய வாழ்நாளில் கட்சிக் கூட்டங்களைப் பொறுத்தவரையில் என்னுடைய மன ஓட்டத்துக்கு ஏற்றாற்போலத்தான் வழிநடத்துவேன். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் நான் தோற்றுப் போய்விட்டேன்' என வருத்தத்தோடு கூறினார்."
வாரிசு அரசியலில் அவருக்கு உடன்பாடு இல்லை என்பதாக இதனை எடுத்துக் கொள்ளலாமா?
``கண்டிப்பாக. அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை".

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













