மு.க. ஸ்டாலின் அரசியல் வாழ்க்கை: கருணாநிதி மகன் என்பதை மீறி திமுகவில் பெற்ற பெயர் - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

மு.க. ஸ்டாலின் அரசியல் வாழ்க்கை: வாரிசு அரசியலை மீறி கட்சிக்கு உழைத்த பயணம்
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தி.மு.கவின் பகுதி பிரதிநிதியாக அரசியல் வாழ்வைத் துவங்கி, கட்சியின் தலைவராக உயர்ந்திருக்கும் மு.க. ஸ்டாலின், தான் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளில் கடுமையாக உழைக்கக்கூடியவர்.

தி.மு.கவின் இளைஞரணி செயலராக மு.க. ஸ்டாலின் மீது வெளிச்சம் படர ஆரம்பித்தபோது, வாரிசு அரசியல் என்ற விமர்சனம் எழுந்தாலும் மு. கருணாநிதியின் மகன் என்பதால் மட்டுமே தான் இந்த இடத்திற்கு வரவில்லை என்பதை தன் கடுமையான உழைப்பின் மூலம் சுட்டிக்காட்டியவர் மு.க. ஸ்டாலின்.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

1953ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி மு. கருணாநிதிக்கும் அவரது இரண்டாவது மனைவி தயாளு அம்மாளுக்கும் பிறந்தார் மு.க. ஸ்டாலின். மு.க. முத்து, மு.க. அழகிரிக்கு அடுத்தபடியாக கருணாநிதியின் மூன்றாவது குழந்தை இவர். இவர் பிறந்த நான்காவது நாளில், சோவியத் அதிபர் ஜோசப் ஸ்டாலின் மறைந்த நிலையில், தன் குழந்தைக்கு அவரது பெயரையே சூட்டினார் கருணாநிதி.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பையும் விவேகானந்தா கல்லூரியில் புகுமுக வகுப்பையும் படித்த ஸ்டாலின், மாநிலக் கல்லூரியில் தன் கல்லூரிப் படிப்பை நிறைவுசெய்தார்.

ஸ்டாலினுக்கு விவரம் தெரிய ஆரம்பித்த காலத்திலேயே தந்தை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். மு.க. முத்து, சினிமாவில் ஆர்வம் காட்டிய நிலையில், மு.க. ஸ்டாலினை அரசியல் ஈர்த்தது. அந்த காலகட்டத்தில் தி.மு.க. பொங்கல் விழாவையும் அண்ணாவின் பிறந்த நாளையும் விமரிசையாகக் கொண்டாடிவந்த நிலையில், 1960களின் பிற்பகுதியில் கோபாலபுரத்தில் அப்பகுதி இளைஞர்களைச் சேர்த்துக்கொண்டு, இளைஞர் தி.மு.க. என்ற பெயரில், தலைவர்களின் பிறந்த நாட்களைக் கொண்டாடுவதை மையமாகக் கொண்ட அமைப்பு ஒன்றை உருவாக்கினார் ஸ்டாலின்.

இந்த அமைப்பு நடத்திய கூட்டங்களில், மு. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., நாஞ்சில் மனோகரன், ப.உ. சண்முகம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு பேசியிருக்கின்றனர். பிற்காலத்தில் இந்த அமைப்பே தி.மு.க. இளைஞரணியாக உருவெடுத்தது. இதற்குப் பிறகு, சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில், 75வது வட்டத்தின் தி.மு.கவின் பகுதி பிரதிநிதியாக தேர்வுசெய்யப்பட்டதுதான் மு.க. ஸ்டாலினுக்குக் கட்சியில் கிடைத்த முதல் பதவி.

1968ல் சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில், தி.மு.கவுக்காக பிரசாரத்திலும் ஈடுபட்டார் ஸ்டாலின். இந்த காலகட்டத்தில்தான் தி.மு.கவின் மேடைகளில் பெரிய எண்ணிக்கையில் பேச ஆரம்பித்தார் அவர்.

1975ல் மு.க. ஸ்டாலினுக்கு துர்காவதி என்ற சாந்தாவோடு திருமணம் நடைபெற்றது. அடுத்த சில மாதங்களிலேயே இந்தியா முழுவதும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. உடனடியாக, அதாவது 1976 பிப்ரவரி ஒன்றாம் தேதியே மு.க. ஸ்டாலின் தனது கோபாலபுரம் வீட்டில் கைதுசெய்யப்பட்டார். சிறையில் இருந்தபோது கடுமையாகத் தாக்கப்பட்ட நிகழ்வும் நடந்தது. ஓராண்டு சிறைவாசத்திற்குப் பிறகு, 1977 ஜனவரி 23ஆம் தேதியன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் ஸ்டாலின்.

வாரிசு அரசியல் பிம்பத்தை மீறி கட்சிக்கு உழைத்த மு.க. ஸ்டாலின்

பட மூலாதாரம், AFP

முதலமைச்சர் மு. கருணாநிதியின் மகன் என்ற அடையாளத்தோடு தி.மு.கவில் செயல்பட ஆரம்பித்த மு.க. ஸ்டாலினுக்கு இந்த சிறைவாசம் தனியான ஒரு அடையாளத்தைத் தந்தது. இளைஞர் தி.மு.கவில் ஸ்டாலின் தொடர்ந்து செயல்பட்ட நிலையில், 1980 ஜூன் 20ஆம் தேதி தி.மு.கவின் துணை அணிகளில் ஒன்றாக இளைஞரணி துவங்கப்பட்டது. மு.க. ஸ்டாலின் அதன் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இளைஞரணி துவங்கப்பட்ட காலகட்டத்தில் தி.மு.கவின் துணை அமைப்புகளில் அதன் தொழிலாளர் அமைப்பான தொ.மு.சவே மிக வலுவான அணியாக இருந்தது. ஆனால், விரைவிலேயே வலுவான துணை அணியாக உருவெடுத்தது இளைஞரணி.

மாவட்டம் தோறும் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் என கட்சிக்கு இணையான பதவிகளோடு வளர ஆரம்பித்தது. இதற்குப் பின்னால் மு.க. ஸ்டாலினின் கடுமையான உழைப்பு இருந்தது.

இளைஞரணிக்காக ஒரு கட்டடம் வேண்டுமென நினைத்து கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு எதிரில் உள்ள அன்பகம் கட்டடத்தைக் கேட்டபோது, அதற்கென பத்து லட்ச ரூபாய் வசூலித்துக் கொடுத்தால்தான் இளைஞரணிக்கு அந்த கட்டடத்தை ஒதுக்க முடியுமென கட்சியின் சார்பில் சொல்லப்பட்டது.

இதையடுத்து 11 லட்ச ரூபாய் வசூலித்து, அந்தக் கட்டடத்தை இளைஞரணிக்காகப் பெற்றார் மு.க. ஸ்டாலின். 1988லிருந்து அன்பகத்திலிருந்த பிரம்மாண்டமான கட்டடத்தில் இயங்க ஆரம்பித்தது தி.மு.க. இளைஞரணி.

1984ல் நடந்த சட்டமன்றத் தேர்தல் மூலம் முதன்முதலாக தேர்தல் அரசியலில் கால்பதித்தார் மு.க. ஸ்டாலின். ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டவர், அந்தத் தேர்தலில் தோல்வியடைந்தாலும் 1989ல் நடந்த தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

அதற்குப் பிறகு 1991ல் நடந்த தேர்தலில் தோல்வி. மீண்டும் 1996ல் நடந்த தேர்தலில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் மீண்டும் வெற்றிபெற்ற ஸ்டாலின், சென்னை மாநகராட்சியின் மேயர் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

மு.க. ஸ்டாலின் அரசியல் வாழ்க்கை:

மாநகராட்சியின் மேயராக அந்தத் தருணத்தில் மு.க. ஸ்டாலினின் பணிகள் பரவலான கவனத்தைப் பெற்றன. 'சிங்காரச் சென்னை' என்ற முழக்கத்தை முன்வைத்த ஸ்டாலின், அதற்கென சில குறிப்பிடத்தக்க திட்டங்களைச் செயல்படுத்தினார்.

அவற்றில், மழைநீர் வடிகால் திட்டத்தைச் செயல்படுத்தியது 65 கோடி ரூபாய் செலவில் சென்னையின் பல்வேறு இடங்களில் 9 மேம்பாலங்களைக் கட்டியது ஆகியவை இப்போதும் பேசப்படும் திட்டங்களாக இருக்கின்றன. 1996ல் சென்னையில் கடுமையான மழை பெய்தபோது, அவர் ஆற்றிய பணிகள் பெரும் கவனிப்பைப் பெற்றன.

2001ஆம் ஆண்டுத் தேர்தலிலும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மு.க. ஸ்டாலின், மீண்டும் சென்னையின் மேயராகவும் வெற்றிபெற்றார்.

ஆனால், ஒருவர் ஒரு பதவியை மட்டுமே வகிக்க முடியும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டதால், தனது மேயர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்தார்.

தன் தந்தை மு. கருணாநிதியைப் போல எழுத்திலும் திரையுலகிலும் மு.க. ஸ்டாலின் பெரிதாக சாதித்தவரில்லை. இருந்தபோதும் ஒரே ரத்தம், மக்கள் ஆணையிட்டால் ஆகிய திரைப்படங்களிலும் குறிஞ்சி மலர், சூர்யா போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார் மு.க. ஸ்டாலின். ஆனால், நடிப்பு என்பது தன்னுடைய களமல்ல என்பதை உணர்ந்து விரைவிலேயே அதிலிருந்து வெளியேறினார் அவர்.

Mk stalin

பட மூலாதாரம், Mk stalin twitter

2006ல் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவியேற்றார் மு.க. ஸ்டாலின். உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது அஷோக் வர்தன் ஷெட்டி, டி. உதயசந்திரன் என சிறப்பான அதிகாரிகளைத் தன் படைக்குத் தேர்வுசெய்து பணியாற்றியதில் அந்தத் துறையில் ஸ்டாலினால் பல குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்ய முடிந்தது. ஹெகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், அண்ணா கிராமப்புற மறுமலர்ச்சித் திட்டம் போன்றவை மிகவும் கவனிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், தி.மு.க. ஆட்சி பல கடுமையான விமர்சனங்களைச் சந்தித்துவந்த நிலையில், உள்ளாட்சித் துறையில் ஸ்டாலினின் செயல்பாடுகள் மட்டுமே கட்சிக்கு ஒரு பாசிடிவான இமேஜை வழங்கிவந்தன.

இதன் அடுத்த கட்டமாக கட்சியில் பொருளாளராக நியமிக்கப்பட்ட மு.க. ஸ்டாலின், 2009ல் துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டார்.

2011ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்த பிறகு, 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் என தொடர் தோல்விகளையே கட்சி எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மேலும் 2016ல் உடல்நலம் குன்றிய மு. கருணாநிதி தனது பணிகளில் இருந்து ஒதுங்கிவிட, கட்சியின் செயல் தலைவராகப் பொறுப்பேற்றார் மு.க. ஸ்டாலின்.

ஆனால், அதற்கு முன் தனக்குப் பிறகு மு.க. ஸ்டாலினே கட்சியை வழிநடத்துவார் என்பதை மு. கருணாநிதி தெளிவுபடுத்தியிருந்தார். 2013ஆம் ஆண்டு ஜனவரி ஆறாம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த மு. கருணாநிதி, மு.க. ஸ்டாலின் எனது அரசியல் வாரிசாக இருப்பதில் என்ன தவறு என்று கேள்வியெழுப்பியதோடு, கட்சியின் அடுத்த தலைவரை முன்மொழியும் வாய்ப்பு வருமானால், நான் மு.க. ஸ்டாலினைத்தான் முன்மொழிவேன் என்று பதிலளித்தார். 2016ல் தந்த ஒரு பேட்டியிலும் தனது வாரிசு மு.க. ஸ்டாலின் என்பதை உறுதிப்படுத்தினார் கருணாநிதி.

இதனால், தி.மு.க. தலைவரும் ஸ்டாலினின் தந்தையுமான மு. கருணாநிதி 2018ல் மறையும்போது எந்த சிறிய சலசலப்புமின்றி கட்சி அவருக்குக் கீழ் வந்தது. 2019ல் இவரது தலைமையில் தேர்தலைச் சந்தித்த தி.மு.க. கூட்டணி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிட்டு 38 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

வாரிசு அரசியல் பிம்பத்தை மீறி கட்சிக்கு உழைத்த மு.க. ஸ்டாலின்

ஆயிரம் விளக்குத் தொகுதியின் பகுதி பிரதிநிதியாக தன் அரசியல் வாழ்வைத் துவங்கி, தி.மு.கவின் தலைவராக உயர்ந்திருக்கும் மு.க. ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கைப் பயணத்தில் அவரது தந்தையின் நிழல் தொடர்ந்து படிந்திருந்தது. அதுவே அவரது பலமாகவும் பலவீனமாகவும் அமைந்தது.

மு.க. ஸ்டாலினை தனது வாரிசாக கருணாநிதி முன்னிறுத்துகிறார் என்ற குற்றச்சாட்டினாலேயே 1993ல் கட்சி வைகோ தலைமையில் இரண்டாகப் பிளவுபட்டது. எம்.ஜி.ஆர். பிரிந்துசென்ற பிறகு கட்சிக்கு ஏற்பட்ட மிகப் பெரிய பிளவு அது. கட்சியில் அவரது வளர்ச்சி, குடும்பத்திற்குள்ளும் பிரச்சனைகளை உருவாக்கியது.

2014ல் இவரது சகோதரர் மு.க. அழகிரி, மு.க ஸ்டாலினுக்கு பொறுப்புகளைக் கொடுப்பது குறித்து தன்னிடம் மிகக் கடுமையாக நடந்துகொண்டதாக மு. கருணாநிதியே சொல்லுமளவுக்கு இந்தப் பூசல் சென்றது. ஆனால், முடிவில் கருணாநிதி ஸ்டாலின் பக்கம் உறுதியாக நின்றுவிட, கட்சியைவிட்டே அழகிரி வெளியேற வேண்டியிருந்தது.

1970களிலும் 80களிலும் மு.க. ஸ்டாலினின் தனிப்பட்ட செயல்பாடுகள் குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அவற்றைத் தன் கடுமையான உழைப்பால் கடந்து வந்திருக்கிறார் அவர்.

தனது தந்தை மீது வைக்கப்பட்ட வாரிசு அரசியல் குற்றச்சாட்டுகளை தற்போது மு.க. ஸ்டாலினும் எதிர்கொள்கிறார். 2021 தேர்தலின் முடிவுகள், மு.க. ஸ்டாலினின் அரசியல் எதிர்காலத்தை மட்டுமல்லாது, தி.மு.க. என்ற மிகப் பெரிய கட்சியின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் தேர்தலாக அமையும்.

BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: