தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: ராகுலின் அடுத்த பயணம்; சசிகலா வருகை - தி.மு.க-வின் கணக்கு என்ன?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

பட மூலாதாரம், Mk stalin twitter page

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சிகளிடம் தி.மு.க தலைமை இன்னும் பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை. `தொகுதிப் பங்கீடு, தனிச் சின்னம் ஆகியவை தொடர்பாக வெளியாகும் தகவல்களால் குழப்பமே மிஞ்சுகிறது' என அச்சப்படுகின்றன தி.மு.க அணியில் உள்ள கட்சிகள். என்னதான் நடக்கிறது?

`உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் தி.மு.க தலைமையும் `வெற்றி நடைபோடும் தமிழகம்' என்ற பெயரில் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும் பிரசாரப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் கொங்கு மண்டலப் பயணம், சசிகலா வருகை என தமிழகத் தேர்தல் களம் விறுவிறுப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

30 அமைச்சர்களின் தொகுதிகள்

அதேநேரம், தமிழக சட்டமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க ஆட்சிக் கட்டிலில் இல்லாததால், இந்தத் தேர்தலை மிக முக்கியமானதாக தி.மு.க தலைமை கருதுகிறது. இதன் காரணமாக, `2016 தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் அ.தி.மு.க போட்டியிட்டதைப் போல, இந்தமுறை அதிகப்படியான இடங்களில் உதயசூரியன் போட்டியிட வேண்டும்' என தி.மு.க தலைமை கருதுவதாகவும் கூறப்பட்டது.

குறிப்பாக, `30 அமைச்சர்களின் தொகுதிகளையும் கூட்டணிக் கட்சிகளுக்குத் தாரை வார்க்காமல் தி.மு.கவே போட்டியிட வேண்டும்' என்பதிலும் தி.மு.க தலைமை உறுதியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், சிறிய கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கும் சூழலும் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

Rahul gandhi

பட மூலாதாரம், Getty Images

ஐபேக் கணித்த 148 தொகுதிகள்

அதிலும், `தி.மு.கவுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் ஐபேக் நிறுவனம், 148 தொகுதிகளை வெற்றிவாய்ப்பு அதிகமுள்ள தொகுதிகளாகக் கண்டறிந்துள்ளது. இதில் பல தொகுதிகளை கூட்டணிக் கட்சிகள் கோரலாம்' என்கின்றனர் பெயர் குறிப்பிட விரும்பாத தி.மு.க நிர்வாகிகள் சிலர்.

இது குறித்து மேலும் நம்மிடம் விவரித்தவர்கள், ``பழநி தொகுதியை சி.பி.எம் கட்சி எதிர்பார்க்கிறது. அங்கு தி.மு.க மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் தொகுதியைத் தயார்நிலையில் வைத்திருக்கிறார். திண்டுக்கல் தொகுதியில் சி.பி.எம் கட்சி பலமுறை வென்றுள்ளது. கடந்த 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் சி.பி.எம் வேட்பாளராக திண்டுக்கல்லில் போட்டியிட்ட கல்யாணசுந்தரம், இந்த முறையும் சீட்டை எதிர்பார்க்கிறார். திண்டுக்கல்லில் சொந்தக் கட்சிக்குள் போட்டி அதிகம் இருப்பதால் சி.பி.எம் கட்சியினர் பழநியை எதிர்பார்க்கிறார்கள். இது ஒரு உதாரணம்தான். எனவே, தி.மு.க-வுக்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுப்பதில் தி.மு.க தலைமை ஆர்வம் காட்டவில்லை" என்கின்றனர்.

என்ன நடக்கிறது?

தி.மு.க கூட்டணியில் பிரதானக் கட்சியாக காங்கிரஸ் உள்ளது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 41 தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சி, 8 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதில், காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட பல தொகுதிகளில் அ.தி.மு.கவே வென்றது.

மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய தி.மு.க, 89 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இந்த முறையும் 41 இடங்களைக் காங்கிரஸ் கோரியுள்ளது. இதற்கு தி.மு.க தலைமை சம்மதிக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது. ராகுல் காந்தியின் வருகை உள்ளிட்ட காரணங்களால் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படலாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நம்பிக் கொண்டிருக்கிறது.

``தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக உள்ளது. இடப்பங்கீடு தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மையில்லை. ராகுல்காந்திக்கும் ஸ்டாலினுக்கும் நல்ல புரிதல் இருக்கிறது" என்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் கோபண்ணா. பிபிசி தமிழுக்காக தொடர்ந்து பேசியவர், ``வரப் போவது சட்டமன்றத் தேர்தல்தான் என்றாலும் ராகுல்காந்தி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவரது பயணம் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, கூட்டணிக் கட்சிகளுக்கும் பயன் தரும் வகையில் உள்ளது.

ராகுலின் தென்மாவட்ட பயணம்

அடுத்ததாக தென்மாவட்டங்களில் ராகுல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அந்தப் பயணம் கொங்கு மண்டலத்தை விடவும் எழுச்சியாக இருக்கும். அது மிகப் பெரிய வெற்றியைக் கொடுக்கும். இதனைத் தொடர்ந்து ஸ்டாலினுடன் இணைந்து ராகுல் பிரசாரம் செய்ய உள்ளார். தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது. சசிகலா வருகையால் அ.தி.மு.கவுக்கு ஏற்படப் போகும் பாதிப்புகள், எங்கள் அணிக்கு மேலும் வலு சேர்க்கும்" என்கிறார்.

அதேநேரம், சட்டமன்ற தேர்தலில் இரண்டு இடதுசாரிக் கட்சிகளும் அதிக இடங்களில் போட்டியிட விரும்புகின்றன. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியாக இடதுசாரிகள் களமிறங்கியதால், தி.மு.க-வின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக, `ஒற்றை இலக்கத்தில் இரு கட்சிகளுக்கும் இடங்கள் ஒதுக்கப்படலாம்' எனத் தி.மு.க தரப்பில் கூறப்படுகிறது. அண்மையில் சி.பி.எம் கட்சியின் மாநில குழுவின் முடிவில், `எங்களுடைய செல்வாக்குக்கு ஏற்ற வகையிலான தொகுதிகளில் போட்டியிடுவோம்' எனத் தெரிவித்திருந்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டி?

யெச்சூரி

பட மூலாதாரம், Sitaram Yechury

இதன் தொடர்ச்சியாக சி.பி.எம் கட்சியின் தேசிய தலைவர்கள் பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி, பிருந்தா காரத் உள்ளிட்டோர் 12 பிரசார மையங்களுக்குச் செல்ல உள்ளனர். இதன் காரணமாக, `12 தொகுதிகளில் சி.பி.எம் போட்டியிடலாம்' என்ற தகவல் வெளியானது. இதுவும் குழப்பங்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது.

``தொகுதிப் பங்கீடு, எண்ணிக்கை ஆகியவை குறித்து தி.மு.க தரப்பில் எதுவும் பேசப்படாததால் சில அச்சங்கள் உள்ளன. ஏனென்றால் இடப்பங்கீடு தொடர்பாக ஊடகங்களில் ஏராளமான தகவல்கள் வெளிவருகின்றன. இதனால் கூட்டணி குலைந்து விடுமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது" என்கிறார் சி.பி.எம் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர்.

பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், `` கூட்டணிக் கட்சிகளின் செல்வாக்குக்கு ஏற்ற இடங்கள் கிடைக்குமா என்ற அச்சம் காங்கிரஸ், சி.பி.ஐ, சி.பி.எம், ம.தி.மு.க, வி.சி.க ஆகிய கட்சிகளுக்கும் ஏற்பட்டுவிட்டன. அதனை சரிசெய்வதற்கு தி.மு.க தரப்பில் இருந்து எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதேநேரம், `கூட்டணி உறுதியாக இருக்கிறது' எனத் தி.மு.க தலைவர் பேசியிருக்கிறார். தேர்தல் தேதி அறிவித்த பிறகு தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடியும் என நம்புகிறோம்" என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், `` எங்கள் கட்சி போட்டியிடக் கூடிய 18 தொகுதிகளை அடையாளம் கண்டு வைத்துள்ளோம். தி.மு.க தரப்பில் எவ்வளவு இடங்களை ஒதுக்குவார்கள் எனத் தெரியவில்லை. எங்கள் தொகுதிகளுக்கும் சி.பி.ஐ கட்சிகளின் தொகுதிகளுக்கும் இடையில் எந்தவிதக் குழப்பங்களும் இல்லை. நாங்கள் ஏற்கெனவே வென்ற தொகுதிகளைத்தான் கேட்க உள்ளோம். நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், நாகப்பட்டினம், திருப்பூர், கோவை, அரூர், கிருஷ்ணகிரி எனப் பரவலாகத் தொகுதிகளை கேட்போம். தி.மு.க தலைமை பேச்சுவார்த்தை நடத்தும்போது நிலவரம் தெரியவரும்" என்கிறார்.

உரிய மரியாதை கிடைக்குமா?

ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

இந்த விவகாரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர், பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசியபோது, `` தி.மு.க அணியில் யாரும் அதிகப்படியான இடங்களைக் கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவே சில தகவல்கள் வெளியாகின்றன. 180 இடங்களில் தி.மு.க நிற்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகளைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தி.மு.க தலைமை நினைப்பதாகவும் செய்திகள் கசிந்தன" என்கிறார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ``ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனியாக செல்வாக்கும் கௌரவமும் இருக்கின்றன. இவையெல்லாம் இணைந்துதான் கூட்டணி உருவாகிறது. 2006 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மைனாரிட்டி அரசாகத்தான் தி.மு.க இருந்தது. அப்போது வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தனர். எனவே, கூட்டணி கட்சிகளுக்கு என்று எதுவுமே இல்லை என யாரும் முடிவு செய்ய முடியாது. களத்தில் போராடுகிற கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும். இடதுசாரிக் கட்சிகளுக்கு இரட்டை இலக்கத்தில் கொடுப்பதுதான் சரியானதாக இருக்கும். இதே பாணியில், நாடாளுமன்றத் தேர்தலின்போதும் இடதுசாரிக் கட்சிகளுக்குத் தலா ஒரு சீட்டுதான் எனத் தகவல் பரப்பினர். பின்னர், பேச்சுவார்த்தையில் 2 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்தமுறை இரட்டை இலக்கத்தில் இடங்களை எதிர்பார்க்கிறோம்" என்றார்.

`தி.மு.க அணியில் என்ன நடக்கிறது?' என சி.பி.எம் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நயினாரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` எங்கள் கூட்டணி மிகுந்த கட்டுக்கோப்புடனும் உறுதியுடனும் இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வையும் பா.ஜ.க-வையும் வீழ்த்த உறுதியுடன் பாடுபடுவோம். இதில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் அதையும் சந்தித்து இந்த அணி 234 தொகுதிகளிலும் உறுதியாக வெற்றி பெறும். கடந்த காலங்களில் இரட்டை இலக்கங்களில் எதிர்க்கட்சிகள் வென்றன. இந்தமுறை அதற்கும் வாய்ப்பு இருக்காது. அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க அணியே வெற்றி பெறும்" என்றார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சி.பி.ஐ கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் லெனின், பிபிசி தமிழுக்காக பேசுகையில், ``இந்தக் கூட்டணி வலிமையானது. மக்களைப் பற்றிக் கவலைப்படக் கூடியவர்கள் இந்த அணியில் இருக்கிறார்கள். மேலும் சிலர் இந்த அணிக்குள் வரலாம். தேர்தல் தேதி அறிவித்த பிறகு தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடியும் என நம்புகிறோம்" என்றார்.

ம.தி.மு.க, வி.சி.க கணக்கு என்ன?

மதிமுக

பட மூலாதாரம், TWITTER

இடதுசாரிகளின் நிலை இவ்வாறாக இருந்தாலும், `கூட்டணியில் 10 இடங்கள் உறுதியாக கிடைக்கும்' என ம.தி.மு.க நம்புகிறது. இந்தத் தேர்தலில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரியும் களமிறங்கலாம் எனவும் கூறப்படுகிறது. அண்மையில் தி.மு.க தலைவரிடம் பேசிய வைகோவும், `நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் சரி' எனக் கூறியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, ``தேர்தல் தேதி அறிவித்த பிறகு தொகுதிப் பங்கீடு தொடர்பான வேலைகள் தொடங்கும். இதுதொடர்பாக தி.மு.கவில் குழு அமைத்த பிறகு ஒவ்வொரு கட்சிகளும் பேசுவார்கள். எத்தனை தொகுதிகளை ம.தி.மு.க எதிர்பார்க்கிறது என்பதை எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் முடிவு செய்வார்" என்கிறார்.

இதுதவிர, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் ஒற்றை இலக்கத்தில் இடங்கள் ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு ரவிக்குமார் வென்றார். அதே பாணியில் உதயசூரியன் சின்னத்தில் வி.சி.க வேட்பாளர்கள் போட்டியிடலாம் என்ற தகவலும் வெளியானது. இதற்குப் பதில் அளித்த வி.சி.க தலைவர் திருமாவளவன், `எங்களின் தனித்தன்மை பாதிக்காத வகையில் முடிவெடுப்போம், தனிச்சின்னத்தில் போட்டியிடுவது உறுதி" என்றார்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, ``எங்கள் கூட்டணி வலிமையாக உள்ளது. எத்தனை இடங்கள் என்பதை தி.மு.க தலைமையிடம் பேசி எங்கள் தலைவர் முடிவு செய்வார்" என்கிறார்.

தி.மு.க தலைமை முடிவெடுக்கும் - ஆர்.எஸ்.பாரதி

கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே உள்ள குழப்பங்கள் குறித்து தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தி.மு.க தலைவர் குழு அமைப்பார். அந்தக் குழுவின் பரிந்துரையை ஏற்று இடங்களை ஒதுக்குவார். கூட்டணிக்குள் எந்தவிதக் குழப்பங்களும் இல்லை" என்றார்.

மார்ச் முதல் வாரத்தில் தி.மு.க தரப்போடு கூட்டணிக் கட்சிகள் பூர்வாங்க பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என கூறப்படுகிறது. அதற்குள் எந்தவிதக் குளறுபடிகளும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அச்சம், கூட்டணி கட்சிகள் மத்தியில் நிலவுகிறது.

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: