உத்தர பிரதேசத்தில் லவ் ஜிகாத் என்ற கூக்குரலில் குரலை இழந்த ஒரு இளம் ஜோடியின் கதை

பட மூலாதாரம், Gajanfar Ali
- எழுதியவர், சின்கி சின்ஹா
- பதவி, பிபிசி செய்தியாளர்
வீட்டிற்கு வெளியே நம் கண்கள் பார்க்கும் முதல் விஷயம் ஒரு வளைந்த மரம். அது ஒடிந்து நிற்கிறது. மரத்தின் கிளைகள் வளைந்து, கதவுகள் மற்றும் கூரையில் படர்ந்துள்ளன.
இங்கே இரண்டு வீடுகள் உள்ளன மற்றும் இரு வீடுகளின் ஜன்னல்களும் கிட்டத்தட்ட இணைக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளில் ஒன்று ரஷீத்தின் தந்தை முகமது ராசா அலிக்கு சொந்தமானது.
சில காலத்திற்கு முன்பு, இந்த வீட்டில் ஒரு இளம் பெண் தனது கணவருக்காக காத்திருந்தார். அவருக்கு வேதனை தந்த நாட்கள் இவை. ஆனால், கணவர் சிறையில் இருந்து திரும்பியபோது, அவர் புன்னகையுடன் வரவேற்றார். மதத்தை வலுக்கட்டாயமாக மாற்றி திருமணம் செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். சில அமைப்புகள் 'லவ் ஜிகாத்' பிரச்சனையை எழுப்பி சலசலப்பை ஏற்படுத்தியதால் கணவர் கைது செய்யப்பட்டார்.
தான் விருப்பப்பட்டு ஆறு மாதங்களுக்கு முன்பு ரஷீத்தை மணந்ததாக பிங்கி கூறுகிறார்.
ஆதரவற்ற பெண்களுக்கான காப்பகத்தில் தான் தங்கியிருந்தபோது, தனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக பிங்கி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அவர் பொய் சொல்கிறார் என்று கூறப்பட்டது. ரஷீத்தை தான் விரும்பி திருமணம் செய்து கொண்டதாக பிங்கி பலமுறை சொல்லிக்கொண்டே இருந்தார்.
சிறைக்கு அனுப்பப்பட்ட ரஷீத்தின் விடுதலைக்காக அவர் சட்டப் போராட்டமும் நடத்தினார். கணவர் சிறையிலிருந்து திரும்பினார். ஆனால் இப்போது பிங்கி இந்த வீட்டில் வசிக்கவில்லை. அவர் இங்கிருந்து சென்றுவிட்டார். இப்போது இந்த பழைய உடைந்த வீட்டில் ஒரு பூட்டு தொங்குகிறது. ஒரு விசித்திரமான உடைந்த மரம் வாசலில் நிற்கிறது.
பிங்கி மற்றும் இந்த வீட்டைப் பற்றி இங்கு யாரும் பேசுவதில்லை. நேரம் சரியாக இல்லை என்று அனைவருமே சொல்கிறார்கள்.

அக்கம் பக்கத்தில் மெளனம் நிலவுகிறது. இங்கே இப்போது ரஷீத்தின் தந்தை மட்டுமே வசிக்கிறார். சாலையின் மறுபுறம் உள்ள கடையில் அமர்ந்திருந்த வயதான பெண்மணி, ரஷீத்தின் தந்தை ஒரு குடிகாரன் என்று கூறுகிறார்.
"அவன் என்ன சொல்வான்? அவன் ஏதோ சிறிய வேலை செய்கிறான், சம்பளம் பெறுகிறான். அதை கொண்டு குடிக்கிறான். நாங்கள் வேறு என்ன சொல்வது. இதைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்களுக்கு அவரைத் தெரியாது," என்று குறிப்பிட்டார்.
பரேலி சிறையில் இருந்து ரஷீத் விடுவிக்கப்பட்ட பின்னர் இந்த இளம் ஜோடி இங்கிருந்து சென்றுவிட்டது. தங்கள் கதையைச் சொல்ல இந்த இளம் ஜோடி இப்போது இங்கே இல்லை.
இந்த விவகாரம் இப்போது முடிந்துவிட்டதாக அவரது வழக்கறிஞர் சுல்ஃபிகர் டேகேதார் கூறுகிறார்.
"அவர்கள் ஏழைகள். அவர்கள் முஸ்லிம்கள் என்பதால் அஞ்சுகிறார்கள். அவர்கள் யாரையும் எதிர்த்து வழக்குத் தொடர விரும்பவில்லை. அவர்கள் இந்த வழக்கைப் பற்றி பேசக்கூட விரும்பவில்லை" என்று தெரிவிக்கிறார்.
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தங்கள் வாட்சாப் மற்றும் மின்னஞ்சலில் இருந்து அவர்கள் நீக்கிவிட்டதாகவும் டேகேதார் கூறுகிறார். சமீப காலம் வரை, பிங்கியின் வழக்கு தலைப்புச்செய்தியாக இருந்தது. ஆதரவற்ற பெண்களுக்கான காப்பகத்தில் தனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக பிங்கி குற்றம் சாட்டினார். கணவரை கைது செய்த பின்னர் போலீசார் பிங்கியை அங்கு அனுப்பினர்.
வைரலாகி வந்த பிங்கியின் காணொளியில், பஜ்ரங் தள தொண்டர்கள், காவல்நிலையத்திற்குள் ஆர்பாட்டம் செய்வதையும், அவர்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்புவதையும் காண முடிகிறது. அவர்களது திருமண ஆவணங்களை காட்டுமாறு மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். ஆனால், திருமண ஆவணங்களைக் காட்டிய போதிலும் ரஷீத், பிங்கியை பலவந்தமாக மதம்மாற்றி திருமணம் செய்து கொண்டதாக பஜ்ரங் தள தொண்டர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டினர்.

பிங்கி - ரஷீத் எங்கு சென்றனர் என்று யாருக்கும் தெரியாது
ரஷீத் மற்றும் பிங்கி இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. டேராடூனுக்கு அவர்கள் சென்றதாக சிலர் கூறுகிறார்கள். அங்குள்ள ஒரு சலூன் கடையில் ரஷீத் முன்னர் வேலை செய்துகொண்டிருந்தார். டேராடூனில்தான் இருவரும் முதல் முறையாக சந்தித்தனர். ஆனால், அவர்கள் உறவினர்களுடன் வசிக்கிறார்கள் என்று ரஷீத்தின் தந்தை கூறுகிறார். அவர்களிடம் பணம் இல்லை. வீட்டில் தங்கினால் கொல்லப்படுவார்கள் என்று அவர்கள் பயந்தனர்.
உத்தர பிரதேசத்தில் மொரதாபாதில் உள்ள காந்த், ஒரு இனவாத பதற்றம் நிலவும் இடம். இதற்கு முன்பும் இங்கு கலவரங்கள் நடந்துள்ளன.
2014ஆம் ஆண்டில், ஒரு மத தகராறில் 'மகாபஞ்சாயத்தை' இங்கு அழைக்குமாறு முறையீடு செய்யப்பட்டது. இந்த நேரத்தில், பாஜக தொண்டர்களுக்கும், காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. முன்னதாக 2013ஆம் ஆண்டில், செப்டம்பர் மாதத்தில் முசாஃபர் நகரில் ஒரு மகாபஞ்சாயத்து நடந்தது. இந்த மகாபஞ்சாயத்துக்குப் பிறகு முசாஃபர் நகரில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 60 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தனர்.
இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து வருவதாக இங்கே வதந்தி பரவியது. மதங்களுக்கு இடையிலான திருமண எதிர்ப்பின் பின்னணியில் இதுதான் செயல்படுகிறது. இந்த காரணத்திற்காகவே, சில அமைப்புகள் இத்தகைய திருமணங்களுக்கு எதிராக நிற்கின்றன.
பிங்க, பிஜ்னோர் மாவட்டத்தில் வசிப்பவர். பொது முடக்கத்தின்போது, ஜூலை மாதம் டேராடூனில் ரஷீத்தை திருமணம் செய்த பின்னர், பிங்கி தனது பெயரை 'முஸ்கான் ஜஹான்' என்று மாற்றிக்கொண்டார். பிங்கி டேராடூனில் கடன் முகவராக பணிபுரிந்தார். 2019இல் அவர் ரஷீத்தை சந்தித்தார். பொது முடக்க காலத்தில் 2020ஆம் ஆண்டில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர், பின்னர் ரஷீத்துடன் மொராதாபாதில் அவரின் வீட்டிற்கு வந்துள்ளார்.

பட மூலாதாரம், Gajanfar Ali
ரஷீத்தின் தந்தை இங்கு வசிக்கிறார். திருமணத்தை பதிவு செய்யுமாறு பலரும் அறிவுறுத்தினர். அதற்குள் உ.பி.யில் கட்டாய மதமாற்ற தடுப்பு அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ரஷீத்தின் தாய் முன்பே காலமாகிவிட்டார். 2003இல் அவரது தந்தை முகமது ராசா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ரஷீத் மற்றும் அவரது மனைவியை தன் வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டேன் என்றும் அவர்களுக்கு சொத்தில் எந்தப் பங்கையும் கொடுக்க மாட்டேன் என்றும் முகமது ராசா கூறுகிறார்.
"அவர்கள் எனது விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டனர். நான் என்ன செய்வது? சிறைக்கு போகமுடியுமா என்ன? நான் அவர்களை நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டாம் என்று சொன்னேன், ஆனால் பிங்கி திருமணத்தை பதிவு செய்வதில் பிடிவாதமாக இருந்தார். பிங்கி ஏழாயிரம் ரூபாயை வழக்கறிஞருக்கு கொடுத்தார்," என்று முகமது ராசா கூறுகிறார்.
முகமது ராசா தனியாக வசித்து வருகிறார், அவர் மிகவும் பயப்படுகிறார். தொலைபேசி உரையாடலின் போது, சில சமயங்களில் என்ன நடக்குமோ என்று பயப்படுவதாகச் சொல்கிறார். தனது மருமகள் ஒரு பட்டதாரி என்றும் அவர் கூறுகிறார். பிங்கி, பி.ஏ இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
டிசம்பர் 5ஆம் தேதி, பிங்கி மற்றும் ரஷீத் ஆகியோர் தங்கள் திருமணத்தை பதிவு செய்வதற்காக மொராதாபாத் துணைக்கோட்ட அலுவலகம் சென்றிருந்தனர். ஆனால் அங்கு அவர்கள் பஜ்ரங் தள தொண்டர்களால் சூழப்பட்டனர். திருமண ஆவணங்களை காட்டுமாறு அவர்கள் கேட்கத் தொடங்கினர். இந்த நபர்கள் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
"ஆறு மாதங்களுக்கு முன்பு ரஷீத்தை தான் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதாகவும், தான் மேஜர் என்றும் பிங்கி கூறியபோது, காவல்துறை அவர்களை விட்டுவிட்டு சென்றது," என்று பெயர் குறிப்பிட விரும்பாத ரஷீத்தின் பக்கத்து வீட்டுக்காரர் மற்றும் குடும்ப நண்பர் ஒருவர் கூறினார்.
"ஆதாரம் இல்லாமல், காவல்துறையினரால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. ஆனால், பஜ்ரங் தள தொண்டர்கள் அவர்களை காவல் நிலையத்தில் அடைத்து வைத்திருந்தார்கள். இதற்காக, அவர்கள் பிங்கியின் தாயை பிஜ்னோரிலிருந்து அழைத்து வந்து மகளுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். புதிய சட்டத்தின்கீழ் காவல்துறையினர் அவர்களைப் பிடிக்கக்கூடிய நிலை உருவானது," என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்.
ரஷீத் நீதித்துறை காவலில் வைக்கப்பட்டார். முஸ்கான் ஜஹான் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக காவல் நிலையத்தில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னர், அவர் டிசம்பர் 6 மதியம் 2 மணிக்கு மொராதாபாத்தின் மகளிர் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார்.

தாய், மகளுக்கு எதிராக செய்த புகார்
பிங்கியின் தாய் பாலா தேவி பட்டியலினத்தை சேர்ந்தவர். பிஜ்னோரில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். ஐபிசி பிரிவு154ன் கீழ், காந்த் காவல் நிலையத்தில் டிசம்பர் 5ம் தேதி, பாலா தேவியின் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. ரஷீத் மற்றும் அவரது சகோதரர் சலீம் மோசடி செய்ததாகவும், மதமாற்றம் செய்வதற்காக ரஷீத் பிங்கியை திருமணம் செய்து கொண்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
பிபிசி நியூஸிடம் இந்த எஃப்.ஐ.ஆரின் நகல் உள்ளது. ரஷீத் தனது மகளை 2020 டிசம்பர் 1ஆம் தேதி தங்கள் வீட்டிலிருந்து அழைத்து வந்ததாக பிங்கியின் தாய் இதில் கூறியுள்ளார். மகளை காப்பாற்ற அவரது குடும்பத்தினர் காந்தை அடைந்தபோது, ரஷீத் ஒரு முஸ்லிம் என்பதை அறிந்து கொண்டனர். ரஷீத் தனது அடையாளத்தை அவர்களிடமிருந்து மறைத்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
தனது மகளை ஒரு புர்காவில் பார்த்ததாகவும், ரஷீத்தின் பக்கத்து வீட்டிலிருந்து அழைத்துச் வந்ததாகவும் பிங்கியின் தாய் தனது புகாரில் எழுதியுள்ளார். இரவு எட்டு மணிக்கு அவர் ரஷீத் மற்றும் மகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
"என் மகள் அவர்கள் மிரட்டியதால் பயந்துபோயிருப்பதால், நான் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்கிறேன்" என்று பாலா தேவி தெரிவித்துள்ளார்.
பிங்கியின் தாய் பாலா தேவி எஃப்.ஐ.ஆரில் கைநாட்டு போட்டுள்ளார். எஃப்.ஐ.ஆர் தட்டச்சு செய்யப்பட்டுள்ளது, எனவே பாலா தேவியின் பெயரும் டைப் செய்யப்பட்டுள்ளது என்று போலீஸார் ஒருவர் தெரிவித்தார்.
எஃப்.ஐ.ஆர் எண் 484/2020 இல், ரஷீத் மற்றும் அவரது சகோதரர் சலீம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டின் உத்தர பிரதேச சட்டவிரோத மதமாற்ற தடுப்பு சட்டத்தின் பிரிவு (3) மற்றும் பிரிவு 5 (1) ஆகியவற்றின் கீழ் அவர்கள் இருவர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
தொலைபேசி உரையாடலின் போது, பாலா தேவி சொல்வது வேறுவிதமாக இருந்தது. "இது எங்கள் கெளரவப் பிரச்சனை. எங்கள் பெண் காணாமல் போயிருந்தார். பஜ்ரங் தள அமைப்பினர் எங்களுக்கு உதவினார்கள்," என்று கூறினார்.
ஆனால் அவர் ஏன் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார் என்று கேட்டபோது, தனக்கு எதுவும் தெரியாது என்று கூறுகிறார். பிங்கியைக் கண்டுபிடிக்க பஜ்ரங் தளத் தொண்டர்கள் தனக்கு உதவியதாக அவர் கூறுகிறார்.
பிங்கி சில நாட்கள் மகளிர் காப்பகத்தில் வைக்கப்பட்டு பின்னர் உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். டிசம்பர் 15 அன்று பிங்கி ரஷீத்தின் குடும்பத்துடன் மீண்டும் இணைந்தார். தான் மகளிர் காப்பகத்தில் சித்திரவதை செய்யப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இரத்தப்போக்கு இருப்பதாக புகார் செய்தபோது, தனக்கு முறையாக மருந்து அல்லது சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக, கருச்சிதைவு ஏற்பட்டது என்று கூறினார். ஆனால் காவல்துறையும், மகளிர் காப்பக நிர்வாகமும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளன.
இந்த விஷயத்தை மேலும் தொடர தாங்கள் விரும்பவில்லை என்றும் யாருக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்வது தங்கள் நோக்கம் அல்ல என்றும் ரஷீத் விடுதலையான பிறகு இந்த ஜோடி தெரிவித்தது. "அவர்கள் பஜ்ரங் தளத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் அளவிற்கு வலுவானவர்கள் அல்ல. ரஷீத்தின் தந்தை காரணமாக நாங்கள் வழக்கை வாபஸ் பெற்றோம். அவர் இதை ஆதரிக்கவில்லை," என்று ரஷீத்தின் வழக்கறிஞர் டேகேதார் கூறினார்.
மொராதாபாத்தின் காந்த் கோட்டத்தின் மக்கள் தொகையில் 54 சதவீதத்தினர் இந்துக்கள், சுமார் 44 சதவீதம் பேர் முஸ்லிம்கள். பத்தேகஞ்சின் பின் தெருக்களில் ரஷீத்தின் வீடு உள்ளது. ரஷீத் மற்றும் பிங்கி 2020 செப்டம்பரில் வீடு திரும்பினர். பொது முடக்கத்தின்போது ரஷீத்தின் வேலை போய்விட்டது. ஜூலை மாதம் தான் பிங்கியை மணந்ததாக அவர் தனது பெற்றோரிடம் கூறினார். திருமணத்திற்கு குடும்பத்தினர் ஒப்புதல் அளித்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

இந்து சிறுமிகளை காப்பாற்றுவதாக வாதம்
காந்தாவில் பஜ்ரங் தளத்தின் அமைப்பாளர் என்று மோனு விஷ்னோய் தம்மை கூறிக்கொள்கிறார். அவர் கழுத்தில் குங்குமப்பூ நிற அங்கவஸ்திரம் அணிந்துள்ளார். இந்த பகுதியில் அனைவருக்கும் அவரை தெரியும். இளம் நோட்டரிகளும் வழக்கறிஞர்களும் அவர் வரும்போது எழுந்து நின்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.
ஒரு பெண் உள்ளூர் செய்தியாளர் எப்போதும் அவருடன் வருகிறார். மோனுவின் தொலைபேசியில் வரும் அழைப்புகளுக்கு அவர் தான் பதிலளிக்கிறார்.
"முதலில் நான் ஒரு இந்து, பின்னர் ஒரு செய்தியாளர். இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய அனைத்தையும் மோனு செய்கிறார்" என்று அவர் கூறுகிறார்.

விஷ்னோய்தான், பிங்கி மற்றும் ரஷீத் பற்றிய புகாரை போலீசாரிடம் கொடுத்தார். ஆனால் இந்த இருவருக்கும் எதிரான அமளியில் தனக்கு சம்மந்தம் என்று மோனு கூறுகிறார்.
"ஆனால் வீடியோவில் உங்கள் ஆதரவாளர்கள் காவல்நிலையத்தில் பிங்கியிடம் ஆவணத்தைக் காட்டுமாறு கோருகிறார்கள். இது போன்று ஆவணங்களைக் கேட்க உங்களுக்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளதா?"என்று நான் அவரிடம் கேட்டேன்.
"அந்தப் பெண் எங்களுக்கு தவறான ஆவணத்தைக் காண்பித்தார். அந்த நேரத்தில் எங்கள் தொண்டர்கள் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டார்கள், அதில் என்ன தவறு?"என்று மோனு வினவினார்.
35 வயதான மோனு விஷ்னோய், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பஜ்ரங் தளத்தில் சேர்ந்தார். அவருக்கு சந்தையில் ஒரு கடை உள்ளது.
இந்து அமைப்பொன்றின் உள்ளூர் தலைமையின்பால் தான் மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும், தனது சமூகத்திற்கு சேவை செய்ய சபதம் எடுத்துள்ளதாகவும் மோனு கூறுகிறார்.
"நாங்கள் இந்து சமுதாயத்தின் பெண்களைக் காப்பாற்ற விரும்புகிறோம். இந்த பெண்களை லவ் ஜிகாதிலிருந்து காப்பாற்றுவது எங்கள் வேலை" என்று அவர் கூறுகிறார்.
"இவை அனைத்தும் நீண்ட காலமாக இங்கு நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதுபோன்ற நிகழ்வுகளைப் பற்றி தகவல் சேகரித்து எங்களிடம் கூறுவதற்கென குழுவொன்று எங்களிடம் உள்ளது. பின்னர் நாங்கள் தலையிடுகிறோம். பெண்கள் தங்கள் குடும்பம் மற்றும் சமூகத்தின் நலன் சார்ந்த செயல்களையே செய்ய வேண்டும். இதுபோன்ற திருமணங்கள் நடப்பதை நாங்கள் தடுத்துள்ளோம். நாங்கள் வேலை செய்யும் முறை என்ன என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்ல மாட்டோம். ஆனால் எங்களிடம் எங்கள் சொந்த அமைப்பு உள்ளது. மேலும் இதுபோன்ற திருமணங்களைப் பற்றிய தகவல்களை தருபவர்களும் இருக்கிறார்கள். இதன் அடிப்படையில், நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் காவல்துறையினரைக் கேட்டுக்கொள்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
ஆனால், பிங்கியை பற்றிய செய்தி, தகவல் அளிப்போரால் வழங்கப்படவில்லை என்று கூறும் விஷ்னோய், பிங்கியின் தாய்தான் உதவி கேட்டு தன்னிடம் வந்ததாக தெரிவிக்கிறார்.
ஆனால், பஜ்ரங் தள அமைப்பினர்தான் பிங்கியின் தாயை அழைத்து வந்து மகளுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததாக ரஷீத்தின் அண்டை வீட்டுக்காரர் கூறுகிறார். "பிங்கியின் ஆவணங்கள் மற்றும் நிக்காநாமா (திருமண சான்றிதழ்) மூலமாக பிங்கியின் வீட்டு முகவரியை அவர்கள் தெரிந்துகொண்டனர். சிந்தியுங்கள், பிங்கியின் தாய்க்கு ஆட்சேபனை இருந்தால், ஏன் அவர் முன்பே புகார் செய்யவில்லை," என்று அவர் கேட்கிறார்.
"பஜ்ரங் தள அமைப்பினர் தங்கள் காரில் பிங்கியின் தாயை காந்திற்கு அழைத்து வந்தனர். ரஷீத் மீது புகார் செய்யும்படி அவர்கள் சொன்னார்கள். பஜ்ரங் தளத்தின் நெருக்குதலின் பேரில் காவல்துறையினர் வழக்கை பதிவு செய்தனர்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

போலீசாரின் மெளனம்
காந்த் தெஹ்ஸிலில் உள்ள சஜ்லெத் காவல் நிலைய அதிகாரி பல்ராம் சிங், காவல் நிலைய கட்டிடத்தில் மற்ற சில காவல்துறை அதிகாரிகளுடன் மதியம் அமர்ந்திருந்தார்.
இந்த விஷயத்தில் தன்னிடம் எந்த தகவலும் இல்லை என்று அவர் கூறினார். ஆனால் பிங்கி தனது திருமணத்தை நியாயப்படுத்துவதற்கு ஆதரவாக எந்த ஆவணங்களையும் முன்வைக்க முடியவில்லை என்று அவரை மேற்கோள்காட்டி பல அறிக்கைகள் தெரிவித்தன.
"இந்த வழக்கு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் பஜ்ரங் தளத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று அவர் கூறுகிறார்.
காந்த் காவல் நிலைய பொறுப்பாளரான அஜய் குமார் கெளதமைச் சந்திக்குமாறு அவர் என்னிடம் கூறினார். "உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க நான் இங்கு இல்லை. உலகத்தில் உள்ள எல்லா விஷயத்திற்கும் நானா பொறுப்பு?" என்று அவர் என்னிடம் கேட்டார்.
"பஜ்ரங் தள செயற்பாட்டாளர்கள் அந்த பெண்ணிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டனர் என்பதை வீடியோ காட்சிகள் காட்டுகின்றன. ஆனாலும் நீங்கள் அவர்களை ஏன் கைது செய்யவில்லை?" என்று நான் வினவினேன்.
"இளம்பெண்ணின் தாயும் சகோதரியும் புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு வந்திருந்தனர். இதற்குப் பிறகு மகளிர் காப்பகம் செல்ல பிங்கி ஒப்புக்கொண்டார். பஜ்ரங் தளத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் சட்டப்படி செயல்படுகிறோம். அந்தப்பெண் மகளிர் காப்பகத்தில் இருந்த வரை, கருச்சிதைவு ஏற்படவில்லை. எங்களிடம் இத்தனை தகவல்தான் உள்ளது. இப்போது நீங்கள் இங்கிருந்து போகலாம்," என்று அவர் பதிலளித்தார்.
மொராதாபாத் அமர்வு நீதிமன்றத்தில் பிங்கி ஆஜர்படுத்தப்பட்டார். மகளிர் காப்பகத்திலிருந்து பிங்கியை அவரது மாமியார் வீட்டிற்கு அனுப்புமாறு நீதிமன்றம் காவல்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டது. தனது கணவர் மற்றும் மைத்துனரை விடுவிக்குமாறு பிங்கி நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வழக்கை போலீசார் இன்னும் விசாரித்து வருவதால் ஊடகங்களிடம் தன்னால் பேச இயலாது என்று மொராதாபாத் ஏஎஸ்பி (ஊரகப்பகுதி) வித்யாசாகர் மிஸ்ரா கூறினார்.
சில மாதங்களுக்கு முன்பு வரை பிங்கி மற்றும் ரஷீத் வாழ்ந்த தெருவில் இப்போது நான் நிற்கிறேன். வீட்டின் முன், வளைந்த கிளைகளைக் கொண்ட உடைந்த மரம் இன்னும் அமைதியாக நிற்கிறது. வீடு பூட்டப்பட்டுள்ளது. என்ன நடந்திருந்தாலும் அதை ஒப்புக்கொள்ள யாரும் தயாராக இல்லை. எல்லோருமே அதை மறந்துவிட்டு, தங்கள் வாழ்க்கையில் ஒன்றிவிட்டார்கள். இதெல்லாம் யாருக்கு நடந்ததோ, யார் தனது கூட்டைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டார்களோ, அவர்கள் மட்டும் இதை மறக்கவில்லை.
தங்களுக்கு நடந்த சம்பவத்தை மறந்து முன்னேறும் பொருட்டு அவர்கள் செல்லவில்லை. எங்கோ சென்று வாழ்க்கையை வாழ முயற்சி செய்வதற்காகவே அவர்கள் இங்கிருந்து சென்றுள்ளார்கள்.

பிற செய்திகள்:
- ராணுவத்தின் பிடியில் மியான்மர்: பரிதவிக்கும் 10 லட்சம் தமிழர்களின் குமுறல்கள்
- "சீன வைரஸ் ஆய்வகத்தில் இருந்து கொரோனா கசிந்திருக்க வாய்ப்பில்லை" - உலக சுகாதார நிறுவனம்
- "வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை" - புதிய திட்டத்தை கொண்டுவரும் மத்திய அரசு
- சசிகலா வருகை: `எதுவும் பேச கூடாது!' - அ.தி.மு.க தலைமையின் திடீர் உத்தரவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













