அலுவலக வேலை நேரத்தில் புதிய மாற்றங்கள் - இந்திய அரசு திட்டம்

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
ஊழியர்களின் வேலை நேரம் தொடர்பாக மாற்றங்களை கொண்டு வர மத்திய தொழிலாளர் அமைச்சகம் தயாராகி வருவதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"ஊழியர்களின் வேலை நேரம் தொடர்பாக மாற்றங்களை கொண்டு வர மத்திய தொழிலாளர் அமைச்சகம் தயாராகி வருகிறது. இதனால், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டி வாய்ப்பு கிடைக்கலாம். எனினும், ஊழியர்கள் வாரத்தில் 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும்.
இப்போது அனைத்து நிறுவனங்களிலும் வாரத்தில் 6 நாட்கள், தினமும் 8 மணிநேரம் என்ற வகையில் வேலை நேரம் உள்ளது. இதன் காரணமாக அவர்கள் வாரத்தில் 48 மணிநேரம் வேலை செய்து வாரத்திற்கு ஒரு நாள் விடுப்பு என்ற நிலை உள்ளது.
மத்திய தொழிலாளர் நல அமைச்சக செயலாளர் அபூர்வா சந்திரா திங்களன்று, ஊழியர்கள் வாரத்திற்கு அதிகபட்சம் 48 மணி நேரம் மட்டுமே பணியாற்றுவதற்கான வரம்பு அவர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று கூறினார்.
அதாவது, ஒரு ஊழியர் ஒரு நாளைக்கு 12 மணிநேரமும், வாரத்தில் நான்கு நாட்களில் 48 மணி நேரமும் பணிபுரிந்தால், மீதமுள்ள மூன்று நாட்களுக்கு அவர் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். ஊழியர் வாரத்தில் 5 நாட்கள் அல்லது 6 நாட்கள் வேலை செய்யத் தேவையில்லை என்பதற்கு நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையில் உடனபாடு ஏற்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
எனினும் நாங்கள் ஊழியர்களையோ அல்லது முதலாளிகளையோ கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் இது ஒரு நெகிழ்வுத் தன்மையை அளிக்கும். இது மாறிவரும் கலாசாரத்து ஏற்ப இருக்கும்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகள் எண்ணிக்கை என்ன?

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகள் எண்ணிக்கை என்ன என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
"தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகள் எண்ணிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மக்களவையில் செவ்வாயன்று மத்திய உள்துறை அமைச்சகம் எழுதுப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் உள்ள 108 முகாம்களில் 58,843 இலங்கை தமிழ் அகதிகள் தங்கியுள்ளனர் என்றும், அத்துடன் உள்ளூர் காவல்நிலையத்தில் பதிவு செய்து 34,135 பேர் முகாமில் இல்லாத அகதிகளாகத் தங்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மொத்தமாக தமிழகத்தில் 92,978 இலங்கை தமிழ் அகதிகள் தங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய முஸ்லிமாக எனக்கு பெருமை: குலாம் நபி ஆசாத் பெருமிதம்

பட மூலாதாரம், Twitter
பாகிஸ்தானுக்கு செல்லாத அதிர்ஷ்டசாலி மக்களில் நானும் ஒருவன் என காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் குலாம் நபி ஆசாத் 2015-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் மாநிலங்களவை உறுப்பினரானார். அவரது பதவி காலம் முடிவுக்கு வருகிறது.
ஜம்மு, காஷ்மீர் தற்போது 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அங்கு சட்டப் பேரவையும் அமைக்கப்படவில்லை. இதனால் குலாம் நபி ஆசாத் வேறு ஒருமாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு அவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பதும் உறுதியாக தெரியவில்லை.
குலாம் நபி ஆசாத்துடன் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 3 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதால் இதையாட்டி அவர்களுக்கு பிரியாவிடை நடைபெற்றது. இதையொட்டி பேசிய பிரதமர் நரேந்திர மோதி, ''குலாம் நபி ஆசாத் சிறந்த மனிதர். அவருக்கு கர்வம் எப்போதும் இருந்ததில்லை'' எனக் கூறி பாராட்டியபோது பிரதமர் மோதி கண் கலங்கினார்.
பின்னர் மாநிலங்களவையில் குலாம் நபி ஆசாத் கூறியதாவது:
நாட்டில் இருந்து தீவிரவாதமும் ஒழிய வேண்டும். எல்லையைக் காக்கும் வீரர்கள் நாட்டுக்காக உயிரிழப்பது எப்போது முடிவுக்கு வரும் என்பது மக்கள் ஒவ்வொருவரின் எண்ணமாக உள்ளது.
பாகிஸ்தானுக்கு செல்லாத அதிர்ஷ்டசாலி மக்களில் நானும் ஒருவன். அங்குள்ள சூழ்நிலைகளை பற்றி கேள்விப்படும் போது ஒரு இந்திய முஸ்லிமாக எனக்கு பெருமை ஏற்படுகிறது" என்று குலாம் நபி ஆசாத் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













