வேளாண் சட்டங்களை தொடர ஆதரவுக் கடிதம் வாங்கும் இந்திய அமைச்சர் தோமர்

விவசாயிகள்

பட மூலாதாரம், ANI

இந்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக்கூடாது என்று தெரிவிக்கும் சட்டத்துக்கு ஆதரவான கடிதத்தை அரசுக்கு சாதகமான விவசாயிகள் சங்கங்களிடம் இருந்து பெறும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார் இந்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.

இந்த விவகாரத்தில் அரசின் சட்டங்களுக்கு எதிராக டெல்லி மற்றும் அதன் அண்டை மாநில எல்லைகளில் முகாமிட்டுள்ள விவசாயிகளின் போராட்டம் வியாழக்கிழமை 29ஆம் நாளை எட்டியிருக்கிறது.

இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தின் பாக்பாத்தை சேர்ந்த சுமார் 60 விவசாயிகள் குழுவுடன் நரேந்திர சிங் தோமர் வேளாண்துறை அமைச்சகம் அமைந்துள்ள க்ரிஷி பவனில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் இந்த கூட்டம் நடைபெற்றது. கிசான் மஸ்தூர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் அதில் இடம்பெற்றிருந்தனர்.

இதன் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய நரேந்திர சிங் தோமர், "மத்திய அரசின் விவசாய சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளிடம் பேசிய பிறகு அவர்கள் அதன் நன்மைகளை புரிந்து கொண்டுள்ளனர். இந்த சட்டங்களை திரும்பப்பெறக்கூடாது என்று அவர்கள் எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்துள்ளனர்," என்று கூறினார். அந்த கடிதத்தையும் அவர் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.

இந்த விவகாரத்தில் எவ்வித அழுத்தத்துக்கும் அடிபணியக்கூடாது என்றும் விவசாயிகள் அரசை கேட்டுக் கொண்டதாக தோமர் குறிப்பிட்டார்.

விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

ஆதரவு கடிதம் பெறும் அமைச்சர்

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு விவசாயிகள் போராட்டம் 19ஆம் நாளை எட்டிய வேளையில், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேட்டவலம் மணிகண்டன், தெலங்கானா, மகாராஷ்டிரா, பிகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சங்கங்கள் அங்கம் வகிக்கும் அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்துப் பேசினார்கள். அதன் முடிவில் 10 சங்கங்களைச் சேர்ந்தவர்கள், சட்டங்களுக்கு ஆதரவாக கடிதம் கொடுத்தனர். அப்போதும் அவர்களின் கடிதத்தை செய்தியாளர்களிடம் காண்பித்து அரசின் சட்டமியற்றல் நடவடிக்கையை நியாயப்படுத்தினார் தோமர்.

ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் தலைவர்கள், குடியரசு தலைவரை சந்தித்து மனு கொடுத்தது பற்றி கேட்டதற்கு, "ராகுல் காந்தி பேசுவதை அவரது கட்சியினரே தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் கையெழுத்துகளை பெற்றதாக அவர் கூறுகிறார். ஆனால், இன்று என்னை சந்தித்த விவசாயிகளில் ஒருவர் கூட தங்களை ராகுல் குழுவினர் சந்திக்க வந்ததாக தெரிவிக்கவில்லை," என்று தோமர் பதிலளித்தார்.

விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

இதன் மூலம் விவசாயிகள் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி 29 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்கும் நிலையில் அரசு இல்லை என்பது தெளிவாகிறது.

இந்த நிலையில், விவசாயிகள் நலத்திட்ட உதவிகள் தொடர்பான நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி வெள்ளிக்கிழமை காணொளி வாயிலாக உரையாற்றவிருக்கிறார். ஏற்கெனவே மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளுடன் பேசிய பிரதமர், 35 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 1,660 கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இதேபோல, தேசிய ஆளுகை தினமாக கடைப்பிடிக்கப்படும் இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயியின் பிறந்த நாளில் ஆறு மாநில விவசாயிகளுடன் காணொளி வாயிலாக பிரதமர் கலந்துரையாடும்போதும் நிதியுதவி திட்டங்களை பிரதமர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே நாளில் டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டங்களும் 30 நாளை எட்டுகிறது.

விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இரு முறை கடிதம் அனுப்பியிருக்கும் இந்திய வேளாண் துறை அமைச்சர், சட்டங்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டினால், அதில் நியாயம் இருக்கும்பட்சத்தில் திருத்தம் செய்ய அரசு தயாராக இருப்பதாக அந்த கடிதங்களில் குறிப்பிட்டிருக்கிறார். இதேபோல, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் சிலருடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போதும் சட்டங்களை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை வியாழக்கிழமையுடன் சேர்த்து இரண்டு முறை எதிர்கட்சியினர் சந்தித்துள்ளனர். வியாழக்கிழமை சந்திப்பின்போது விவசாயிகள் நலன்களை பாதிக்கும் வகையில் மூன்று வேளாண் சட்டங்கள் இருப்பதாகக் கூறி 2 கோடி பேர் கையெழுத்திட்ட மனுவை காங்கிரஸ் தலைவர்கள் அளித்துள்ளனர். இருந்தபோதும் அவற்றின் மீது குடியரசு தலைவர் அலுவலகம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

இதனால், பிரதமர் நரேந்திர மோதி வெள்ளிக்கிழமை விவசாயிகளுடன் ஆற்றும் காணொளி உரையின்போது, அவர் வெளிப்படுத்தும் மத்திய அரசின் நிலைப்பாட்டைப் பொறுத்து போராட்டங்களை தீவிரப்படுத்தும் வாய்ப்புகளை விவசாயிகள் பிரதிநிதிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :