விவசாயிகள் போராட்டம்: 28 நாளாக வலுக்கும் எதிர்ப்பு, பிடிவாதத்தை தளர்த்தாத இந்திய அரசு

பட மூலாதாரம், Getty Images
இந்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லையிலும் அதன் அண்டை மாநில எல்லைகளிலும் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் புதன்கிழமை முடிவில் 28 நாட்களை நிறைவு செய்கிறது. உரிமைக்காக விவசாயிகள் வீதியில் இறங்கி குரல்களை ஒலித்து வரும் வேளையில், இந்தியாவில் தேசிய விவசாயிகள் தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணி
விவசாயிகளின் கோரிக்கைகள் மீது மத்திய அரசு செவி சாய்க்காமல் இருப்பதால் குடியரசு தலைவரை விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் சந்தித்து மனு அளிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். வியாழக்கிழமை காலையில் அவர் நாடாளுமன்றம் அருகே உள்ள விஜய் செளக் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். அங்கிருந்து பேரணியாக குடியரசு தலைவர் மாளிகைக்குச் சென்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் ராகுல் காந்தி மனு அளிக்கவிருப்பதாக செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.
கடந்த சில வாரங்களாக விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட 2 கோடி கையெழுத்து வாங்கப்பட்ட மனுவை குடியரசு தலைவரிடம் ராகுல் காந்தி வழங்குவார் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் கூறினர்.

பட மூலாதாரம், Getty Images
இந்த நிலையில், ஆறு மாநில விவசாயிகளுடன் பிரதமர் நரேந்திர மோதி வரும் 25ஆம் தேதி காணொளி வாயிலாக உரையாடவிருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் தேசிய ஆளுகை தினத்தை இந்தியா கடைப்பிடிக்கவுள்ளது.
இதையொட்டி நடக்கும் நிகழ்ச்சியில் ஆறு மாநிலங்களில் உள்ள 9 கோடி விவசாயிகளுக்கு ரூ. 18 ஆயிரம் கோடி மதிப்பிலான நிதியுதவியை பிரதமர் வழங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.
பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த நவம்பர் 26ஆம் தேதி டெல்லி சலோ என்ற பெயரில் தலைநகரை நோக்கிய போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டத்தின் 30ஆவது நாளில், அதாவது சரியாக ஒரு மாதத்தின் நிறைவில் பிரதமர் மோதியின் விவசாயிகள் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.
இதற்கிடையே, டெல்லியின் சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகளை சந்திக்க தமது கட்சி எம்.பி.க்கள் குழுவை மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி புதன்கிழமை அனுப்பி வைத்தார்.
டெரக் ஓ ப்ரெய்ன், சதபதி ராய், ப்ராசன் பானர்ஜி, பிரதிமா மொண்டல், மொகம்மது ஹக் ஆகிய ஐந்து எம்.பி.க்கள் விவசாயிகளைச் சந்தித்து தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குழுவினருடன் மமதா பானர்ஜி செல்பேசி வாயிலாக பேசி போராட்டத்துக்கு ஆதரவைத் தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இதற்கிடையே, இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "விவசாயிகள் தினமான இன்று நாட்டுக்கு உணவு பாதுகாப்பை வழங்கும் விவசாயிகளை வாழ்த்துகிறேன். சில விவசாயிகள் அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுகிறார்கள். அவர்களுடன் அரசு முழு உணர்வுடன் பேச்சு நடத்தி வருகிறது. விரைவில் அவர்களின் போராட்டம் நிறைவு பெறும் என நம்புகிறேன்," என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
கேரள முதல்வர் பினராயி விஜயன், "கேரளா ஒரு நுகர்வோர் மாநிலம். அந்த வகையில், உணவுப்பற்றாக்குறை நாட்டில் ஏற்பட்டால் அதனால் பாதிப்பை எதிர்கொள்வது கேரளாதான். அதனால்தான் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்," என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
தீர்வு காண வலியுறுத்தும் விவசாயிகள்
இதேவேளை, போராட்டக்களத்தில் உள்ள விவசாயிகள், 28 நாட்களாக தொடரும் தங்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்ட வர அக்கறை காட்டாமல் சட்டங்களை திரும்பப்பெறப் போவதில்லை என்ற நிலையில் மத்திய அரசு பிடிவாதம் காட்டி வருவதாக குற்றம்சாட்டினர்.
"இந்த விவகாரத்தில் தாமதம் செய்து, விவசாயிகளின் உணர்வை குலைக்க அரசு முயல்கிறது," என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் யுத்வீர் சிங் தெரிவித்தார்.
விவசாயிகள் போராடி சோர்வு அடைய வேண்டும் என்று அரசு விரும்புவதை அதன் செயல்பாடுகளில் இருந்து உணர முடிகிறது என்று அகில இந்திய கிசான் சபா தலைவர் ஹன்னன் மொல்லா தெரிவித்தார்.
"அரசு பிடிவாதத்தைக் கைவிட்டு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும். பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார். ஆனால், அதற்கு முன்பாக நியாயமான, உறுதியான யோசனைகளை அரசுதான் முன்மொழிய வேண்டும்," என்று மற்றொரு விவசாய சங்க தலைவர் ஷிவ் குமார் காக்கா தெரிவித்தார்.
விவசாயிகள் போராட்டம் காரணமாக சில்லா, காஸிபூர் ஆகிய பகுதிகளில் உள்ள டெல்லியை இணைக்கும் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டிருந்தன. டெல்லிக்குள் வரும் வாகனங்கள், ஆனந்த் விஹார், டிஎன்டி மேம்பாலம், போப்ரா, லோனி எல்லை பகுதிகள் வழியாக திருப்பி விடப்பட்ன. இதனால், நகரை இணைக்கும் அனைத்து எல்லை சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக காணப்பட்டது.
பிற செய்திகள்:
- அண்ணாத்த படம் ஒத்திவைப்பு: சென்னை திரும்பிய ரஜினிகாந்த் - அடுத்தது என்ன?
- பிரான்சில் 3 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொன்ற நபரும் உயிரிழப்பு
- உலகம் மீதான பார்வையை மாற்றத் தூண்டும் செயற்கைக்கோள்கள்
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
- சிந்து சமவெளி மக்கள் மாட்டுக்கறி சாப்பிட்டார்களா? பானை எச்சங்கள் காட்டும் முடிவு
- அன்பு காட்டினால் ஆரோக்கியம் வளரும் - அறிவியல் காரணம் தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












