ராகுல் காந்தி ஆவேசம்: "பிரதமரை எதிர்ப்பவர்கள் எல்லாம் தீவிரவாதியா?"

பட மூலாதாரம், AICC
நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த பிறகு ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
"அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரானவை. இந்த சட்டங்கள் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என குடியரசுத் தலைவரிடம் விளக்கி இருக்கிறோம்," என ராகுல் காந்தி கூறினார்.
"விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட மாட்டார்கள் என்பதை பிரதமரிடம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சிதறிப் போய்விடுவார்கள் என பிரதமர் யோசித்துவிடக் கூடாது" என்றும் ராகுல் குறிப்பிட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
எவ்வித விவாதமோ, ஆலோசனையோ நடத்தாமல் இந்த சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதால் அதை திரும்பப்பெற்றே தீர வேண்டும் என்று ராகுல் வலியுறுத்தினார்.
தற்போதைய அரசியல் சூழலில் பிரதமர் நரேந்திர மோதியை எதிர்ப்பவர்கள் அனைவரையும் அவர் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியினர் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள். அது விவசாயிகளோ, தொழிலாளர்களோ, ஏன் மோகன் பகாவத் ஆக இருந்தாலும் அப்படித்தான் ஆளும் கட்சியினர் அழைக்கிறார்கள் என்றார் ராகுல்.
இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்ற நிலை உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அப்படி ஒன்று இருப்பதாக யாராவது கருதினால் அது கற்பனையான ஒன்று என ராகுல் தெரிவித்தார்.
தடுத்து வைக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள்
முன்னதாக, வியாழக்கிழமை காலையில், வேளாண் மசோதாக்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ராகுல் காந்தி உட்பட சில முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் நாடாளுமன்றம் அருகே உள்ள விஜய் செளக் பகுதியில் நின்று பேரணியாக புறப்பட்ட முயன்றனர். ஆனால், ராகுல் உள்பட மூன்று பேர் மட்டுமே குடியரசு தலைவர் மாளிகைக்கு செல்லலாம் என்று காவல்துறையினர் நிபந்தனை விதித்தனர்.

பட மூலாதாரம், ANI
வேளாண் மசோதாக்கள் விவகாரத்தில் குடியரசு தலைவர் தலையிட்டு ஒரு தீர்வைக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி, இரண்டு கோடி பேர் கையெழுத்திட்ட மனுவை குடியரசு தலைவரிடம் வழங்க காங்கிரஸார் திட்டமிட்டிருந்தனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் விஜய் செளக் பகுதிக்கு வந்திருந்தார்.
ஆனால், அங்கிருந்து நடைபயணமாக கட்சியினருடன் குடியரசு தலைவர் மாளிகை நோக்கிச் செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். அங்கு இருந்த பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரும் விவசாயிகள் பிரதிநிதிகளும் தடுத்து வைக்கப்பட்டனர்.

பட மூலாதாரம், AICC
இதையடுத்து ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், அதிர் ரஞ்சன் செளத்ரி ஆகியோர் குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, "விவசாயிகளின் குரல்களை மத்திய அரசு கேட்கவில்லை. லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சட்டம் எங்களுக்கு வலியைக் கொடுக்கிறது, ஏன் எங்கள் குரலை அரசு கேட்கவில்லை, ஏன் இந்த விவசாயச் சட்டங்களை அரசு திரும்பப் பெறவில்லை என விவசாயிகள் கேட்கிறார்கள். இந்தியா ஒரு ஜனநாயக நாடு, ஒரு அரசின் வேலை, தேசத்தின் குரலைக் கேட்பது தான்" என்று கூறினார்.

பட மூலாதாரம், ANI
விவசாயிகள் தூண்டப்படுகிறார்கள் அல்லது திசை திருப்பப்படுகிறார்கள் என ஆளுங்கட்சியினர் கூறுவது குறித்து கேட்டதற்கு, "விவசாயிகள் புத்திசாலிகள். அவர்களுக்கு எது நன்மை தரும் என்பதை அவர்கள் அறிவார்கள். அவர்களை யாரும் தவறாக வழி நடத்த முடியாது" என பதிலளித்தார் பிரியங்கா.
மேலும், "அரசுடன் ஒத்துப்போகாதவர்கள் அரசுக்கு எதிரானவர்களாக கருதப்படுகிறார்கள். விவசாயிகளுக்காகத் தான் நாங்கள் பேரணியாக குடியரசு தலைவர் மாளிகைக்கு செல்ல திட்டமிட்டோம். இந்த ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களுக்கு குடியரசுத் தலைவரைச் சந்திக்கும் உரிமை இருக்கிறது என்று கூறினார் பிரியங்கா காந்தி.
பிற செய்திகள்:
- பிரமாண்ட பனிப்பாறை உடைவதால் உயிரினங்களைத் தொடரும் ஆபத்து
- நடராஜன் குழந்தையைப் பார்க்கப் போகவில்லை, விராட் கோலி போகிறார்: கவாஸ்கர் விமர்சனம்
- கொரோனா தடுப்பூசியை இஸ்லாம் ஏற்கிறதா? முஸ்லிம் நாடுகளில் தீவிர விவாதம் #FACTCHECK
- அர்னாப் கோஸ்வாமி நடத்திய ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சிக்கு பிரிட்டனில் அபராதம்
- பிரிட்டனுடன் கைகோர்த்து 36 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய ஏர்டெல் குழுமம்
- தண்டனை பெற்ற சம்பந்தி, மேலாளர், ஆலோசகருக்கு மன்னிப்பு வழங்கிய டிரம்ப்
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












