'பிக்பாஸ் கமல் ஹாசனால் கலாசார, குடும்ப சீரழிவு' என அதிமுகவின் ஜெயக்குமாா் விமர்சனம் - தமிழக அரசியல்

'கமல் ஹாசனால் கலாசார, குடும்ப சீரழிவு' - ஜெயக்குமாா்

இந்திய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையப் பக்கங்களில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

கமலை விமர்சிக்கும் அதிமுக அமைச்சர்

சந்தர்ப்பம், சுயநலனுக்காக முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆர். பெயரை கமல்ஹாசன் பயன்படுத்துவதாக அமைச்சா் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளாா் என்கிறது தினமணி செய்தி.

"எம்.ஜி.ஆர். பற்றி பேசி அதிமுகவின் வாக்குகளைப் பெற கமல் முயற்சிக்கிறாா். எம்.ஜி.ஆரை எந்தக் கட்சியினரும் உரிமை கொண்டாட முடியாது. அவரை ஏன் புரட்சித் தலைவர் எனக் கூற கமல் மறுக்கிறார்."

"சுய நலனுக்காகவும், சந்தர்ப்பத்துக்காகவும் எம்.ஜி.ஆர். பெயரை அவா் பயன்படுத்துகிறார், " என செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

கலாசார சீரழிவு, குடும்பச் சீரழிவுக்கு வழிவகுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் கமல்ஹாசன் மக்களுக்கு எப்படி நல்லது செய்வார் என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

சாதி வாரி கணக்கெடுப்பு - வழக்கு தள்ளுபடி

தமிழகத்தில் 2020-2021-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பை, சாதிவாரியாக நடத்த உத்தரவிடக்கோரி ஆனந்தபாபு என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்

இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணா, பொங்கியப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஆஜராகி, "இடஒதுக்கீடு நடைமுறையை முழுமையாக அமல்படுத்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம். இதுபோன்ற கணக்கெடுப்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடந்துள்ளது. தற்போது இது நடைபெறாததால்தான் பல்வேறு சமுதாயத்தினர் தங்களது மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம் நடத்துகின்றனர்," என்று வாதிட்டார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "சாதி இல்லாத சமுதாயத்தை நோக்கி பயணிக்கும்போது, சாதிவாரியாக ஏன் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்?" என கேள்வி எழுப்பினர். பின்னர், "இந்திய அரசியல் சட்டத்தின்படி, மனுவில் கோரியுள்ள கோரிக்கையை ஏற்க முடியாது," என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

கல்லூரி மாணவர்கள் - யுஜிசி சுற்றறிக்கை

கல்லூரிகளில் சேர்ந்து, பின்னர் விலகிய மாணவர்களின் முழுக் கல்விக் கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என்று அனைத்துக் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது என இந்து தமிழ் திசை செய்தி தெரிவிக்கிறது.

பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) செயலர் ரஜ்னிஷ் ஜெயின் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களின் துணை வேந்தர்களுக்கும் புதிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

''கல்வி நிறுவனங்களில் இணைந்த மாணவர்கள் ஏதாவது ஒரு காரணத்துக்காக, நவம்பர் 30-ம் தேதிக்குள் தன்னுடைய இடத்தை விட்டுக் கொடுத்தால் அவர்களிடம் இருந்து வசூலித்த முழுக் கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும். பிடித்தக் கட்டணமாக ஒரு ரூபாயைக் கூடத் திருப்பி அளிக்காமல் இருக்கக் கூடாது," என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :