கொரோனா வைரஸ் பணியில் இந்திய மருத்துவர்கள் சந்திக்கும் தீவிர சிக்கல்கள்

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி
இந்தியாவில் கோவிட்-19 நோய்த் தொற்றால் நீண்டகால பாதிப்புக்குள்ளான ஒரு நோயாளி, இனிமேல் வாழ விரும்பாததால், தன்னிடமிருந்து வென்டிலேட்டரை கழற்றுமாறு மருத்துவரிடம் கெஞ்சினார்.
கோடைக்காலத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மேலாக தீவிர சிகிச்சையில் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் ஆக்சிஜன் உதவியுடன் அந்த பெண் வீடு திரும்பியிருந்தார்.
ஒரு மாதத்திற்கு பிறகு இந்தியத் தலைநகர் டெல்லிக்கு அருகே சுமார் 90 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் மீண்டும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பிறகும் அவரது நுரையீரலில் கடுமையான பாதிப்பு (ஃபைப்ரோஸிஸ்) ஏற்பட்ட நிலையில் அவர் அவதிப்பட்டார்.
இந்த முறை சுமார் மூன்று மாதங்கள் மருத்துவமனையில் இருந்த அவர் தனது மயக்கவியல் நிபுணரான 28 வயதான கம்னா கக்கருக்கு எண்ணற்ற குறிப்புகளை எழுதினார்.
"நான் வாழ விரும்பவில்லை. என் உடலிலிருந்து மருத்துவ உதவி கருவிகளை எடுத்து விடுங்கள். எனக்கு முதலில் கொரோனா ஏற்பட்டபோதே நீங்கள் என்னை காப்பாற்றி இருக்கக்கூடாது" என்று அவர் எழுதியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
இவரை காப்பாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டும் அவரது உயிர் பிரிந்துவிட்டது.
இதுபோன்று மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் பணிபுரிபவர்களுக்கு மோசமான நோய்ப் பாதிப்பு, மரணம் மற்றும் நீண்டநேர வேலை உள்ளிட்டவை பழகிவிட்டன. மருத்துவர் கக்கரும் அவரது சக மருத்துவர்களும் கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து இதுவரை நோய்த்தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்கள்.
ஆனால் பெருந்தொற்று காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாலும், இந்த நோய் நோயாளிகளுக்கு முற்றிலும் கணிக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்துவதாலும், சுகாதார ஊழியர்கள் உடல் சோர்வு மற்றும் மன விரக்தி நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
"இங்கே ஒரு நோயாளி நம்பிக்கையுடன் இருந்தார், பின்னர் நம்பிக்கையற்ற நிலைக்கு மாறி, பின்னர் கிளர்ந்தெழுந்து, வாழ விரும்பவில்லை என்று கூறினார். அவருடைய வலியை சகித்துக்கொள்வது எனக்கு கடினமாக இருந்தது" என்று டாக்டர் கக்கர் கூறுகிறார்.

மும்பையிலுள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் 31 வயதான மருத்துவரான அசீம் கர்க்கவாவும் இதேபோன்ற அனுபவத்தை பகிர்கிறார்.
குடும்பத்தில் வருமானம் உள்ள ஒரே நபரான இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸிலிருந்து உடல்நலன் தேறி வீடு திரும்பும் நிலைக்கு சில நாட்களுக்கு முன்னதாக, அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. அவர் உயிரிழப்பதற்கு முன்னர் இரண்டு வாரங்களுக்கு அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். சில கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ஏற்படும் நுரையீரல் இரத்த உறைவு பிரச்சனையே அவரது மரணத்திற்கு முக்கிய காரணமென்று பிறகு தெரியவந்தது.
"அவரது இறப்பு செய்தியை அவரது மனைவியிடம் கூறுவது மிகவும் மனஉளைச்சல் அளிப்பதாக இருந்தது. அந்த நோயாளி சுமார் 45 நாட்களுக்கு எங்களது கண்காணிப்பின் கீழ் இருந்தார். இதுபோன்ற சூழ்நிலையில் ஒருவரது உயிரை காப்பாற்ற முடியாமல் போனது இன்னமும் மன இறுக்கத்தை அளிக்கும். இந்த நோய்த்தொற்று மிகவும் கணிக்க முடியாத வகையில் இருக்கிறது" என்று அவர் கூறுகிறார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் புதிய உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதால், நாடு முழுவதும் மேலதிக படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், அலையலையாக குவியும் நோயாளிகளை எதிர்கொள்ளும் அளவுக்கு சுகாதார பணியாளர்கள் போதுமான அளவில் இல்லை. எனவே, எண்ணற்ற மருத்துவமனைகளும் மயக்கவியல் மருத்துவர் தொடங்கி காது, மூக்கு, தொண்டை நிபுணர் வரை பல்வேறு துறைகளை சேர்ந்த மருத்துவர்களுக்கும் கொரோனா நோயாளிகளை கவனிக்கும் பயிற்சியை வழங்கி வருகின்றன.
ஆனால், அதுகூட போதுமானதாக இல்லை. தாங்கள் முற்றிலும் சோர்ந்து போய்விட்டதாக சுகாதார பணியாளர்கள் கூறுகிறார்கள். "மருத்துவமனைகளை விட்டு கோவிட்-19 நோய்த்தொற்று இன்னமும் முழுமையாக விலகவில்லை. ஆனால், வெளியிலுள்ள மக்களுக்கு அது புரியவில்லை" என்று மருத்துவர் கக்கர் கூறுகிறார்.

பட மூலாதாரம், KAMNA KAKKAR
பெருந்தொற்று மட்டும் சுகாதார பணியாளர்களின் கலக்கத்துக்கு காரணமல்ல. வைரஸால் ஏற்படக்கூடிய நிச்சயமற்ற சம்பவங்களும் அவர்களை பெரும் அழுத்தத்திற்கு ஆளாக்குகின்றன.
தற்போதெல்லாம் மூச்சுத்திணறலுடன் மருத்துவமனைக்கு வரும் எந்த நோயாளியாக இருந்தாலும் அவர் கொரோனா பாதிப்புள்ள நபராகவே பார்க்கப்படுகிறார். ஆனால், உண்மையில் அவ்வாறு சேர்க்கப்படும் நோயாளிக்கு இதயநோய், டெங்கு உள்ளிட்ட மற்ற பாதிப்புகள் கூட இருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், எல்லோரும் சந்தேக நபராக இருப்பதால், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும், சந்தேக நோயாளிகளை தனி வார்டில் வைத்து அவர்களுக்கு நோய்த்தொற்று பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது.
மிகவும் நோய்வாய்ப்பட்டவர்களை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றும்போது, நோயாளிகளிடம் நம்பிக்கையை உருவாக்குவது கடினம். ஏனெனில் சில சமயங்களில் அவர்களால் மருத்துவர்கள் அல்லது செவிலியர்களை பார்க்கவோ அல்லது சில சமயங்களில் தொடர்பு கொள்ளவோ முடியாது. "இது சில நேரங்களில் மிகவும் வெறுப்பாக இருக்கிறது" என்று மருத்துவர் கர்க்கவா கூறினார்.
மருத்துவர்களும் செவிலியர்களும் ஒன்றாக மணிக்கணக்கில் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்துகொண்டு பணிபுரிவது, "ஒவ்வொரு நாளும் ஒரு சவப்பெட்டியில் இருப்பதை போல உணர வைக்கிறது" என்று மருத்துவர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
இரவுநேர பணிகளின்போது மருத்துவர்கள் பாதுகாப்பு கவச உடைகளுடன் மேசைகளில் அமர்ந்துள்ள புகைப்படங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கின்றனர். உதாரணமாக, கடந்த ஜூன் மாதம் மருத்துவர் கர்க்கவா, பல மணிநேரம் தொடர்ந்து ரப்பர் கையுறைகளை அணிந்திருந்ததால் சுருங்கிப்போன தனது கையைக் காட்டும் படத்தை சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.

பட மூலாதாரம், ASEEM GARGAVA
பெரும்பாலான சுகாதார பணியாளர்கள் பல மாதங்களாக தங்களது வீடுகளுக்கு செல்லாமல் உள்ளனர். தனது குழந்தையை ஆறு மாதங்களுக்கு பிறகு சந்தித்ததாக டெல்லியை சேர்ந்த மருத்துவரொருவர் பிபிசியிடம் கூறினார். ஏனெனில், தங்களிடமிருந்து நோய்த்தொற்று குடும்பத்தினருக்கு பரவிவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக பெரும்பாலான சுகாதார பணியாளர்கள் மருத்துவமனைகளிலோ அல்லது விடுதிகளிலோ தங்குகின்றனர்.
தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது மருத்துவமனையில் இருக்க விரும்பாததால், வீட்டிற்கு சென்று தனிமைப்படுத்தி கொண்டதே கடைசியாக தான் வீட்டிற்கு சென்ற தருணம் என்று மருத்துவர் கர்க்கவா கூறுகிறார்.
நவம்பர் மாத இறுதியில், டெல்லியின் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் (எல்.என்.ஜே.பி) மருத்துவமனையின் மயக்க மருந்து நிபுணர் பிராச்சி அகர்வால் தனது "ஒன்பதாவது சுற்று கோவிட்-19 பணியை" தொடங்கினார். அதாவது, ஒவ்வொரு சுற்றுப் பணியின் போதும் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் என தொடர்ந்து 15 நாட்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்ற வேண்டும். அதைத் தொடர்ந்து ஒரு வாரம் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு, பிறகு கொரோனா பரிசோதனையில் பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தால் அடுத்த சுற்று பணியில் ஈடுபட வேண்டும்.
"நோயாளிகளை கவனிப்பதும், மரணங்களை கடந்து செல்வதும், விடுதிகளில் தங்குவதும், வெளியுலகிலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட உணர்வை தருகிறது" என்று மருத்துவர் அகர்வால் கூறுகிறார்.

பட மூலாதாரம், SASWATI SINHA
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கள் தனிப்பட்ட இழப்புகளுக்கு வருத்தப்படுவதற்கு சிறிது நேரம் மட்டுமே கிடைக்கிறது. பல சுகாதார பணியாளர்கள் நோய்த்தொற்றால் சக ஊழியர்களை இழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 660க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவமனைகளில் பணிபுரிந்து வந்தவர்கள்.
இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய மும்பையை சேர்ந்த மற்றொரு மருத்துவர், "எனது நண்பர்கள் சிலர் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளை எடுத்துகொள்வதுடன், அதற்காக சிகிச்சையை பெற்று வருகின்றனர். தங்கள் நண்பர்களும் உறவினர்களும் முகமூடியை கூட சரிவர அணியாமல் விருந்துகள் மற்றும் திருமணங்களுக்கு செல்வதை பார்க்கும்போது அவர்கள் மிகவும் "கோபமும் வேதனையும்" அடைகிறார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள்."
சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் வேலையைச் செய்வதற்காக ஹீரோக்களாக போற்றப்படுவதை பார்த்து சோர்வடைகிறார்கள். "நாங்கள் அந்த கட்டத்தை கடந்துவிட்டோம். இப்போது யாராவது எங்களை ஒரு ஹீரோ என்று அழைத்தால், தயவுசெய்து அதை நிறுத்துங்கள். அது இப்போது வேலைக்கு ஆகாது. ஊக்கப்படுத்துவதற்கு ஒரு எல்லை இருக்கிறது" என்று மருத்துவர் கக்கர் கூறுகிறார். எனினும், "இது வேகப்பந்தயம் அல்ல, மாரத்தான் என்று மூத்த மருத்துவர்கள் கூறுகின்றனர்."
மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் மருத்துவ மானுடவியலாளராக பணிபுரியும் ட்வைபயன் பானர்ஜி, சோர்வு மற்றும் பின்னடைவு ஆகியவை இந்தியாவின் பொது சுகாதார முறையின் நீண்டகால பிரச்சனையே தவிர, அதற்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று மிகப் பெரிய காரணமல்ல என்று கூறுகிறார். "மருத்துவர்களின் தனிப்பட்ட திறனை கொண்டாடுவதற்கும், அதிகரிப்பதற்கும் பதிலாக அதன் தேவையை குறைப்பதற்கான வழிகளை ஆராய வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.
கடந்த கோடைக்காலத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு தங்களது இரண்டு சகாக்களை இழந்த பின்னர், இந்தியாவின் மிகப்பெரிய கோவிட்-19 மருத்துவமனையான எல்.என்.ஜே.பி.யின் சுகாதார ஊழியர்கள் ஒவ்வொரு தளத்திலும் தினசரி பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.
"நம் அனைவரையும் பாதுகாக்க நாங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம். ஒரு நாள், நாங்கள் வைரஸை வெல்வோம் என்று நம்புகிறோம்" என்று மருத்துவமனையின் கோவிட் -19 தீவிர சிகிச்சை பிரிவை நிர்வகிக்கும் ஃபரா ஹுசைன் கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












