கொரோனா வைரஸ் தடுப்பூசி: ஃபைசர் தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதி வழங்கிய அமெரிக்கா

பட மூலாதாரம், Reuters
ஃபைசர் & பயோஎன்டெக் நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான எஃப்.டி.ஏ அனுமதி வழங்கி இருக்கிறது.
இந்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை அனுமதிக்க, டிரம்ப் அரசு நிர்வாகத்தால், எஃப்.டி.ஏ அமைப்பு கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமைக்குள் கொரோனா தடுப்பு மருந்தை அனுமதிக்க வேண்டும் அல்லது பதவியில் இருந்து விலக வேண்டும் என எஃப்.டி.ஏ அமைப்பின் தலைவரான ஸ்டீஃபன் ஹானிடம் கூறப்பட்டதாகச் செய்திகள் வெளியானது. ஆனால் அது உண்மை இல்லை என அவரே அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அடுத்த 24 மணி நேரங்களுக்குள் முதல் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் எனக் கூறியிருக்கிறார் அதிபர் டிரம்ப். அமெரிக்காவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,92,000-த்தைக் கடந்துவிட்டது.
அமெரிக்காவில் பொது மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை, திங்கள் அல்லது செவ்வாய் முதல் தொடங்க, தாங்கள் ஃபைசர் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவோம் என சுகாதார மற்றும் மனிதாபிமான சேவைகள் துறையின் செயலர் அலெக்ஸ் அசார் நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்து இருந்தார்.
இந்த ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்து, பிரிட்டன், கனடா, பஹ்ரைன், செளதி அரேபியா போன்ற நாடுகளின் அரசு ஒழுங்காற்று அமைப்பினரால், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.


கடந்த புதன்கிழமை, அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,000 பேர் இறந்தனர். உலகில் எந்த நாடும், ஒரே நாளில் இவ்வளவு அதிக மரணங்களைப் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எஃப்.டி.ஏ கூறியது என்ன?
கடந்த வியாழக்கிழமை, எஃப்.டி.ஏ அமைப்புக்கு ஆலோசனைகளை வழங்கும் 23 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழு, ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்தை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்குமாறு பரிந்துரைத்தது.
இதனைத் தொடர்ந்து, ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்துக்கு, அவசர பயன்பாட்டுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என நன்கொடையாளர்களுக்கு அந்த நிறுவனம் தெரிவித்தது.
அதோடு, எஃப்.டி.ஏ அமைப்பு, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மற்றும் மத்திய அரசின் தடுப்பூசித் திட்டமான 'ஆபரேஷன் வார்ப் ஸ்பீட்' உள்ளிட்டவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து அனுமதிக்கப்படுவதைக் குறித்து தெரியப்படுத்தியது.
எஃப்.டி.ஏ-க்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதா?
எஃப்.டி.ஏ ஒரு பெரிய, பழைய, மெதுவாக செயல்படும் ஆமை. இப்போதே கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி கொடுங்கள் மருத்துவர் ஹான். விளையாடுவதை நிறுத்திவிட்டு, மக்களின் உயிரைக் காப்பாற்றுங்கள் என, கடந்த வெள்ளிக்கிழமை, அதிபர் டொனால்ட் டிரம்ப், எஃப்.டி.ஏ அமைப்பை தன் ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

பட மூலாதாரம், Reuters
வெள்ளிக்கிழமை கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என, எஃப்.டி.ஏ அமைப்பின் ஆணையர் ஹானுக்கு, வெள்ளை மாளிகையின் நிர்வாகத் தலைவரான மார்க் மெடோஸ் உத்தரவிட்டதாக, வாசிங்டன் போஸ்ட் பத்திரிகை மூன்று பேரை ஆதாரமாக வைத்துச் செய்தி வெளியிட்டது. இதை ஸ்டீஃபன் ஹான் முழுமையாக மறுத்து இருக்கிறார்.
ஃபைசர் தடுப்பு மருந்தை அனுமதித்து இருப்பதால் அடுத்து என்ன நடக்கும்?
அடுத்த 24 மணி நேரத்துக்குள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து விநியோகம் தொடங்கப்படும் என 'ஆபரேஷன் வார்ப் ஸ்பீட்' கூறுகிறது.
தடுப்பு மருந்துகள் அமெரிக்கா முழுக்க சென்று சேர வேண்டும் என்பதற்காக, அமெரிக்கா, ஃபைசர் நிறுவனத்துடன் இணைந்து வேலை பார்க்கும். அதோடு, கொரோனாவால் அதிகம் பதிக்கப்படக் கூடிய நிலையில் இருப்பவர்களுக்கு, திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை தடுப்பு மருந்து வழங்கப்படலாம் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார் சுகாதார மற்றும் மனிதாபிமான சேவைகள் செயலர் அலெக்ஸ் அசார்.
இந்த டிசம்பர் மாதத்துக்குள், ஃபைசர் நிறுவனம் அமெரிக்காவுக்கு 6.4 மில்லியன் (64 லட்சம்) டோஸ் மருந்துகளைக் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறது.

ஒரு நபருக்கு இரண்டு டோஸ் தேவை. எனவே, இந்த 6.4 மில்லியன் டோஸ் மருந்தைக் கொண்டு மூன்று மில்லியன் மக்களுக்கு தான் தடுப்பு மருந்து வழங்க முடியும். ஆனால் அமெரிக்காவின் மக்கள் தொகை 330 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் 21 மில்லியன் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில் வாழும் மூன்று மில்லியன் வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்கிறார்கள் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய அதிகாரிகள்.
அமெரிக்காவில் இருக்கும் மாகாணங்கள், எப்படி கொரோனா தடுப்பு மருந்தை விநியோகிக்க வேண்டும் என்பதில் ஒரு ஒருமித்த கருத்து இல்லை. சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயதானவர்களுக்குப் பிறகு, அமெரிக்காவில் 87 மில்லியன் அத்தியாவசியப் பணியாளர்கள், கொரோனா தடுப்பு மருந்து பெறும் வரிசையில் இருக்கிறார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எந்த துறையைச் சேர்ந்தவர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை மாகாண அரசுகளே தீர்மானிக்கும்.
கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பு குறைவாக இருப்பவர்களுக்கு, அடுத்த 2021-ம் ஆண்டின் வசந்த காலத்தில் (பொதுவாக மார்ச் - ஜூன் வரையிலான மாதங்கள்) தான் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறுகிறார்கள்.
மாடர்னா நிறுவனமும், நேஷ்னல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த்தும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்துக்கும், அமெரிக்காவில் அவசர பயன்பாட்டு அனுமதி கோரப்பட்டு இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












