சி.பி.ஐ. பறிமுதல் செய்த தங்கம் மாயம்: விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
சி.பி.ஐ பறிமுதல் செய்த 100 கிலோ தங்கம் எங்கே?
சென்னை தனியார் நிறுவனத்தில் சி.பி.ஐ பறிமுதல் செய்த 100 கிலோ தங்கம் மாயமானது குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தினத்தந்தியில் செய்தி வெளியாகி இருக்கிறது.
தங்கத்தை இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனம் சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு இந்திய தாதுக்கள் மற்றும் உலோக வர்த்தக கழகத்தின் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவதாக கூறி, சி.பி.ஐ. 2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
பின்னர் அந்த தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்தி, 400.47 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தது. அந்த தங்கத்தை அந்த தனியார் நிறுவன அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு லாக்கரில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். இந்த லாக்கருக்கான 72 சாவிகளை சென்னையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
அந்த தனியார் தங்க இறக்குமதி நிறுவனத்தின் சொத்துகளை கையகப்படுத்தி நிர்வகிக்க வங்கிகள் சார்பில் சிறப்பு அதிகாரியாக ராமசுப்பிரமணியம் என்பவர் நியமிக்கப்பட்டார்.
கடந்த பிப்ரவரி மாதம் தனியார் அலுவலகத்தை திறந்து 72 சாவிகளை பயன்படுத்தி அந்த லாக்கரை திறந்தபோது, 400.47 கிலோ தங்கத்தில், 103.864 கிலோ தங்கம் குறைவாக இருந்தது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வங்கியின் சிறப்பு அதிகாரி ராமசுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கத்தை தனியார் நிறுவனத்தில் உள்ள தராசு மூலம் எடை போட்டனர். அதில் எடை அதிகமாக காட்டியிருக்கலாம். தற்போது வேறு தராசு மூலம் எடை பார்க்கும்போது, வித்தியாசம் ஏற்பட்டிருக்கலாம் என்று சி.பி.ஐ. தரப்பு சிறப்பு வக்கீல் ஸ்ரீநிவாசன் வாதிட்டார். இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். "மாயமானது ஒரு சவரனோ 2 சவரனோ இல்லை. சுமார் 100 கிலோ தங்கம் மாயமாகி உள்ளது. இதை சாதாரணமாக விட முடியாது. ஒருவேளை இந்த தங்கம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கட்டுப்பாட்டில் மாயமாகி இருந்தால், நீதிபதி, நீதிமன்ற ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்படுவதோடு அவர்கள் மீது திருட்டு வழக்கு வேறு பதிவு செய்திருப்பார்கள்' என நீதிபதி தெரிவித்தார்.
பின்னர் இதுகுறித்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "மாயமான 100 கிலோ தங்கம் குறித்து வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணை நடத்த உத்தரவிட போகிறேன். ஆனால், சி.பி.ஐ. அதிகாரிகள் புலன்விசாரணையில் முதன்மையானவர்கள், அவர்கள் மீது எப்படி வழக்குப்பதிவு செய்ய முடியும்? என்று வாதம் செய்யப்பட்டது. இதை ஏற்க முடியாது, சி.பி.ஐ.க்கு மட்டும் கொம்புகள் உள்ளது. மாநில போலீசாருக்கு வால் மட்டும் உள்ளது என்று கூற முடியாது.
மேலும், டெல்லி காவல் துறைச் சட்டத்தின் கீழ் செயல்படும் சி.பி.ஐ. அமைப்பால் திருட்டு வழக்கு பதிவு செய்ய முடியாது. எனவே, தங்கம் மாயமானது குறித்து வங்கிகளின் சிறப்பு அதிகாரி ராமசுப்பிரமணியம், சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்யவேண்டும். இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸ் சூப்பிரண்டு பதவிக்கு குறையாத அதிகாரி புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இவரது புலன் விசாரணைக்கு, சி.பி.ஐ. அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வழக்குப்பதிவு செய்த நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் புலன் விசாரணையை முடித்து சம்பந்தப்பட்ட நீமன்றத்தில் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும்" என்று நீதிபதி கூறியுள்ளார் என்கிறது தினத்தந்தி செய்தி.
ஆதார் அட்டையுடன் இந்தியாவுக்குள் வரும் நேபாள குடிமக்கள்

பட மூலாதாரம், Getty Images
உத்தராகண்ட் மாநிலத்தில், சம்பாவத் மாவட்டத்தில் இருக்கும் பன்பாசா எனும் இடம், இந்தியா நேபாளத்தின் எல்லைப் பகுதியாக இருக்கிறது. கணிசமான எண்ணிக்கையிலான நேபாளி குடிமக்கள், இந்தியாவின் ஆதார் அட்டை உடன், இந்தியாவுக்குள் நுழைவதாக தி நியூ இந்திய எக்ஸ்பிரஸில் செய்தி வெளியாகி இருக்கிறது.
இந்த விவகாரம் இந்திய அதிகாரிகளுக்கு சவாலான விஷயமாக இருப்பதாகவும், தங்களின் உயரதிகாரிகளுக்கு இது குறித்த விவரங்களைத் தெரியப்படுத்தி இருப்பதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்த விவகாரம் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம். தேவையான சோதனைகளைச் செய்ததாலும், கவனமாக இருந்ததாலும் இந்த விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்து இருக்கின்றன என உத்தராகண்ட் மாநிலத்தில், சம்பாவத் மாவட்டத்தில் இருக்கும் தனக்பூர் பகுதியின் துணை ஆட்சியர் ஹிமான்ஷூ கஃபல்தியா கூறியுள்ளார்.
நேபாள குடிமக்கள் இந்தியாவின் ஆதார் அட்டைகளை வைத்திருப்பதில் பாதுகாப்புப் பிரச்சனைகள் இருப்பதாகவும் இந்திய அதிகாரிகள் கூறியதாக, அச்செய்தியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
நேபாள குடிமக்களிடம் இருந்த ஆதார் அட்டைகள் இந்திய அரசால் வழங்கப்பட்டவையா, போலியானவையா என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்படவில்லை.
ஆதார் எண் இந்தியாவில் குடியிருப்போருக்குக்கான அடையாள எண் மட்டுமே. அது குடியுரிமைக்கான ஆவணம் அல்ல.
தன் புதிய கட்சியைப் பதிவு செய்வது குறித்து ரஜினி ஆலோசனை

பட மூலாதாரம், Getty Images
புதிய கட்சியை தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்வது குறித்து, மன்ற நிா்வாகிகளுடன் நடிகா் ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா். தோ்தல் பணிகளை முன்னெடுத்துச் செல்வது குறித்தும் அவா் ஆலோசனை நடத்தினாா் என தினமணி செய்தி வெளியிட்டு இருக்கிறது.
சென்னை போயஸ் தோட்டம் இல்லத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளா் அா்ஜுன மூா்த்தி, மேற்பாா்வையாளா் தமிழருவி மணியன், மக்கள் மன்ற நிா்வாகிகள் சிலரோடு ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் ஒருமணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
ஜனவரியில் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த ரஜினி அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறாா். பூத் கமிட்டிக்கான நிா்வாகிகளை நியமிக்கும் பணியையும் முடுக்கிவிட்டுள்ளாா். தற்போது புதிய கட்சியை தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகிறாா். கட்சிப் பெயா், சின்னம் போன்றவற்றை ரஜினி முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது. அது குறித்து மன்ற நிா்வாகிகளிடம் ரஜினி வெள்ளிக்கிழமை தீவிரமாக ஆலோசித்தாா். மன்ற நிா்வாகிகளின் கருத்துகளையும் கேட்டறிந்தாா் என்கிறது தினமணியின் செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












