விவசாயிகள் போராட்டம்: "பாஜகவிடம் பணம் வாங்கினேனா? என்ன நடந்தது தெரியுமா?"

விவசாயிகள் போராட்டம்
    • எழுதியவர், ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்
    • பதவி, பிபிசி தமிழ்

டெல்லியில் 12ஆவது நாளை எட்டியுள்ள விவசாயிகள் போராட்டத்தில் பங்கெடுக்காமல் இருக்க மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியிடம் பணம் வாங்கியதாக தன் மீது எழும் குற்றச்சாட்டுகள் குறித்து பேசியிருக்கிறார் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி. அய்யாக்கண்ணு.

திருச்சியில் தனது சங்கத்தைச் சேர்ந்தவர்களுடன் தினமும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அய்யாக்கண்ணு, 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் டெல்லியில் விவசாயிகளின் கோரிக்கைக்காக தமது சங்கத்தைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து மாதக்கணக்கில் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்தார்.

கடுங்குளிர் காலத்தில் அரை நிர்வாணத்துடனும் மொட்டை அடித்துக் கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட அவரது சங்கத்தினர், ஒரு கட்டத்தில் எலிக்கறி தின்னும் போராட்டத்தை நடத்தி மக்கள் கவனத்தை ஈர்த்தனர். டெல்லி ஜந்தர் மந்தர் போராட்ட களத்தில் அவரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூட நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இந்த நிலையில், டெல்லியில் பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேச மாநில விவசாயிகள் சங்கங்களைச்சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், இதில் வேறு சில மாநிலங்களைச் சேர்ந்த கட்சியினர், விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பங்கெடுத்தபோது, அய்யாக்கண்ணு குழுவினர் ஆரம்பம் முதலே இடம்பெறவில்லை.

இதனால், அய்யாக்கண்ணுவை மத்தியில் ஆளும் பாஜகவினர் சமரசம் செய்து போராட்டத்தை தீவிரப்படுத்தாமல் தடுத்திருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அய்யாக்கண்ணு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறிய திருச்சியில் உள்ள அவரது வீடருகே அவரை "பிபிசி தமிழ்" சந்தித்தது.

விவசாயிகள் போராட்டத்தை முன்னடுக்க விடாமல் தன்னை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு வளையத்திலேயே வைத்திருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

அவர் மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் நாம் முன்வைத்தபோது, தனது நிலையை அவர் விவரித்தார்.

"மத்திய, மாநில அரசுகளின் அதிகாரம் தொடர்பாக வகைப்படுத்திய இந்திய அரசியலமைப்பு - மத்திய பட்டியல், மாநில பட்டியல், பொதுப்பட்டியல் எனப்படும் கன்கரன்ட் லிஸ்ட் எவை என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

இதில் மூன்றாவது வகையான பொதுப்பட்டியலில் உள்ள விஷயங்களை மாநில அரசு ஒப்புதலுடனேயே மத்திய அரசு செயல்படுத்த முடியும். நாம் ஐக்கிய மாகாணங்கள் அமைப்பு முறையைக் கொண்டிருக்கவில்லை. நாம் கூட்டாட்சி அடிப்படையில் இயங்குகிறோம். அப்படியிருக்கும்போது மாநில அரசின் அதிகார வரம்புக்குள் இருக்கும் விவசாயம் தொடர்புடைய சட்ட மசோதாக்களை எப்படி ஒரு மத்திய அரசு, தனது கையில் எடுத்து எவ்வாறு அதை சட்டமாக இயற்றுகிறது? அந்த 3 சட்டங்களையும் கொண்டு வந்தது மத்திய அரசு. எனவே, நாங்கள் போராட வேண்டிய இடமே டெல்லிதான்," என்று அய்யாக்கண்ணு கூறினார்.

போராடுவதற்காக பல்வேறு வழிகள் இருந்தாலும் சட்ட ரீதியாக மத்திய அரசின் சட்டத்தை அணுக வழிமுறைகள் உள்ளது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், "இந்திய அரசியலமைப்பின்படி விவசாய சட்டத்தை கொண்டு வரும் அதிகாரம் மத்திய அரசுக்கே இல்லை. சட்டவிரோதமான மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்களில் நானும் ஒருவன்."

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

"மாநில அரசின் அதிகாரத்தை தனது கையில் எடுத்துக் கொண்டு மத்திய அரசு சட்டம் கொண்டு வருவதென்பது, விவசாயிகளை கொல்வதற்கு சமம்."

"இந்திய பிரதமர் மோதி விவசாயிகளை பார்க்க மறுத்து வருகிறார். நாங்கள் எந்த கட்சிக்கும் சார்பானவர்களோ, எதிரானவர்களோ அல்ல. விவசாயிகள் போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்து, "எங்களைக் காப்பாற்றுங்கள்" என்று முழக்கமிடுகிறோம்.

ஆனால், காப்பாற்றுங்கள் என்று கேட்பதை "பிச்சைக்காரர்கள்" போல கருதி அலட்சியமாக எங்களை அரசு உதாசீனப்படுத்துகிறது. விவசாயிகள் அழிந்து விட்டால், அடுத்த தலைமுறைகள் அழிந்து விடும். இது மிகவும் ஆபத்தான அறிகுறியாகும். இதில் அரசியல் பின்னணியே கிடையாது," என்கிறார் அய்யாக்கண்ணு.

விவசாயத்துறையில் சீர்திருத்தம் கொண்டு வருவதற்காகவே இந்த மூன்று சட்டங்களையும் அரசு கொண்டு வந்திருப்பதாக மத்திய அரசு கூறி வருகிறது. மேலும், புதிய சட்டங்கள் மூலம் இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயி நேரடியாக விநியோக நிறுவனத்துடன் வியாபாரம் செய்ய முடியும் என்று தெளிவுபடுத்தியிருக்கிறது. இதில் எழும் சந்தேகங்களை மத்திய அரசுடன் பேசித் தீர்க்க ஏன் முயலவில்லை என்று அய்யாக்கண்ணுவிடம் கேட்டோம்.

"வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்படுவதால், மரபணு மாற்றப்பட்ட பொருட்களை விற்கும் கார்பரேட்டுகள் விவசாயத்துறையில் கோலோச்சத்தொடங்கும். அவர்களின் ஒரே நோக்கம் லாபமாகவே இருக்கும்."

"தான் முதல் முறையாக ஆட்சிக்கு வரும்போது நெல் கிலோ 14 ரூபாய்க்கு விற்றதாக மோதியே கூறியிருக்கிறார். அதை ரூ. 28 அதிகரித்து ரூ. 42 ஆக மாற்றுகிறேன் என்று அவர் உறுதியளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த கடந்த 6 வருடங்களில் 4.88 ரூபாய் மட்டுமே நெல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது," என்று அய்யாக்கண்ணு சுட்டிக்காட்டுகிறார்.

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

"இதனால் ஏற்பட்டுள்ள சுமையை நாங்கள்தானே சுமக்கிறோம். அதனால்தானே கடன் தள்ளுபடி செய்யுங்கள் என்று கேட்கிறோம். கார்பரேட் கம்பெனிக்கு 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் தொகை தள்ளுபடி செய்கிறது மத்திய அரசு. ஆனால், விவசாயிகளின் மொத்த கடனே ஒரு லட்சம் கோடி ரூபாய் தானே. அதை ஏன் மத்திய அரசு செய்ய தயங்குகிறது?" என்று அய்யாக்கண்ணு கேள்வி எழுப்புகிறார்.

மேலும், வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட கால நேரம் சந்தேகம் எழுப்புவதாக உள்ளது என்றும் அய்யாக்கண்ணு கூறினார். அவர் மீது சமூக ஊடகங்களில் பரவும் சில தகவல்கள் பற்றி கேட்டோம்.

"விவசாயிகள் ஒன்று சேர மாட்டார்கள். அவர்களை சேர விடக்கூடாது என்ற மனப்போக்கில் மத்திய அரசு செயல்படுகிறது. டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் நாங்களும் சேர விரும்பினால், எங்களுக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது. உடனே சில அரசியல்வாதிகள், அய்யாக்கண்ணு ஏன் போகவில்லை, பாஜகவிடம் பணம் வாங்கிக் கொண்டாரா என்று பேசுகிறார்கள்."

"ஒருபுறம் விவசாயிகளை ஒன்று சேர விடாமல் தடுக்கும் இவர்கள், மிகவும் கேவலமாக விவசாயிகளை கருதுகிறார்கள். அவர்களுடைய விமர்சனங்களிலோ தகவல்களிலோ எதுவும் உண்மை கிடையாது," என்றார் அய்யாக்கண்ணு.

"விவசாயிகளுக்கு நிலையான மாத வருமானம் கிடையாது, அவர்கள் வீட்டை தாண்டி வெளியே சென்றால் வீட்டின் நிலையை யார் கவனிப்பார்கள்? இதனாலேயே சில விவசாயிகள் டெல்லி போராட்ட களத்துக்கு செல்லவில்லை" என்கிறார் அவர்.

இருந்தபோதும், தமது சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கும்பலாக டெல்லிக்கு ரயில் ஏற புறப்பட்டால் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்படுவதால், ஒரு சிலர் தனித்தனி குழுவாக பிரிந்து டெல்லிக்கு புறப்பட்டு விட்டதாக அய்யாக்கண்ணு கூறுகிறார்.

இது குறித்து விவரிக்கும் அவர், "கொரோனா பரவல் காலத்தில் ஏன் இந்த சட்டங்களை மத்தய அரசு கொண்டு வர வேண்டும்?" என்று கேள்வி எழுப்புகிறார்.

விவசாயிகள் போராட்டம்

"இந்தியாவில் சுமார் 90 கோடி மக்களை பாதிக்கும் ஒரு சட்டத்தை கொரோனா காலத்தில் கொண்டு வரலாமா? வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு அந்த நடவடிக்கையை எடுப்பதுதானே?

பொது முடக்க காலத்தில் இதுபோன்ற சட்டத்தை கொண்டு வந்தால், வைரஸ் பரவல் கட்டுப்பாடு என்ற பெயரில் விவசாயிகளை அவர்களின் இடத்தில் இருந்து புறப்பட விடாமல் முடக்கலாம். இதில் மிகப்பெரிய சூழ்ச்சி உள்ளது."

"கொரோனாவால் இதுவரை உலக அளவில் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்து விட்டார்கள். ஆனால், இந்தியாவில் தற்போதைய வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்படுவது தொடருமானால், விவசாயிகள் சமூகத்தில் கிட்டத்தட்ட பாதி பேர் அழிந்து விடுவார்கள்.

தற்போது வயல் வெளிகளை வைத்திருப்பவர்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது. அவர்கள் விளைவிக்கும் பொருட்களை விற்க கார்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள அரசு அறிவுறுத்துகிறது. ஒரு குத்தகை நிலம் வைத்திருப்பவன் என்ற முறையில் கார்பரேட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அந்த நிறுவனம் என்னிடம் பணம் கொடுக்காமல் போனால், அந்த நிறுவனத்தின் தலைமையகம் டெல்லியிலோ, மும்பையிலோ இருக்கும். அங்கு சாமானிய விவசாயியால் செல்ல முடியுமா?" என்று அவர் கேட்கிறார்.

மத்திய அரசு விளக்கத்துக்கு என்ன பதில்?

விவசாயிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அம்சங்கள், மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்களில் உள்ளதாக தொடர்ந்து இந்திய வேளாண் துறை அமைச்சர் கூறுகிறார். அந்த சட்டங்களில் உள்ள குறைபாடுகளை விளக்கினால், அதன் நன்மைகளை விளக்க தயாராக இருப்பதாகவும் அவர் இதுவரை நடந்த விவசாயிகள் சங்கங்களின் பேச்சுவார்த்தைகளின்போது கூறியிருக்கிறார்.

ஆனால், அந்த சட்டங்களை முழுமையாக திரும்ப்பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளும் எதிர்கட்சிகளும் உறுதியாக உள்ளன.

இது குறித்து நம்மிடையே பேசிய அய்யாக்கண்ணு, "மாநிலங்களுக்குள், மாநிலங்களுக்கு இடையே என்று குறிப்பிடும் அரசாங்கம், முதலில் எங்களுக்கு என்ன பாதுகாப்பை தருகிறது என்பதை விளக்க முடியுமா? "நமது அரசியலமைப்பு சட்டமியற்றுபவர்கள், அமல்படுத்துபவர்கள் ஆகியோர் ஒழுங்காக நடந்து கொள்கிறார்களா என்பதை கண்காணிக்க நீதித்துறை உள்ளது என்று கூறுகிறது."

"ஆனால், தற்போதைய சட்டத்தில், வழக்கு விவகாரங்களை விசாரிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று கூறப்பட்டுள்ளது. பிரச்னை என்று வந்தால் ஆர்டிஓவிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் விவசாயிகள் செல்லலாம் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது."

"ஏற்கெனவே பல்வேறு பணிச்சுமைகளால் இருக்கும் அவர்களால் எந்த அளவுக்கு எங்களுக்கு பாதுகாப்பு தர முடியும்? இதை முறையிடுவதற்காக டெல்லி போராட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்று புறப்பட்டால், வீட்டு முன்பாகவே காவலர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்," என்று கூறுகிறார் அய்யாக்கண்ணு.

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

"வெளியே செல்வதென்றாலோ, மருத்துவமனைக்கு செல்வதென்றாலோ கூட, தங்களுடைய வாகனத்தில் வரும்படி காவல்துறையினர் நிர்பந்திக்கிறார்கள்."

"இதை பார்க்கும்போது விவசாயிகளை ஒரு தீவிரவாதி போலவும் அடிமை போலவும் அரசு நடத்துகிறது என்றுதான் சொல்ல வேண்டும்" என்றார் அய்யாக்கண்ணு.

அய்யாக்கண்ணு போராட்டம் தொடர்பாக திருச்சியில் தினமும் சுமார் 50 முதல் 100 பேர் வரை கூடி தங்களின் குரலை ஒலிக்கிறார்கள். "விவசாயிகள் வெளியே செல்ல தடை ஏற்படுத்துகிறீர்களா?" என்று உள்ளூர் காவல் நிலைய அதிகாரியிடம் பிபிசி தமிழ் கேட்டது.

அதற்கு அந்த அதிகாரி, "அய்யாக்கண்ணுவை வீட்டுக் காவலில் எல்லாம் நாங்கள் வைக்கவில்லை. அதற்கான உத்தரவும் எங்களுக்கு கிடையாது. பிறரால் அய்யாக்கண்ணுவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே அவரது வீட்டு முன்பும் அவரது போராட்ட பகுதியிலும் உள்ளூர் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மற்றபடி அவர் எங்கு வேண்டுமானாலும் செல்ல தடையில்லை," என்று தெரிவித்தார்.

இதேவேளை, அய்யாக்கண்ணு தலைமையிலான குழுவினர் டெல்லிக்கு புறப்படுவதாக இருந்தால், அது பற்றிய தகவல்களை உளவுத்துறை மூலம் முன்கூட்டியே பெற்று அவரை நகருக்குள்ளேயே தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட உளவுத்துறைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் பிபிசி தமிழ் அறிகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: