டெல்லி விவசாயிகள் போராட்டம்: தமிழ்நாட்டில் இருந்து வந்த விவசாயிகள் சங்கத்தினர் பங்கேற்பு
டெல்லி அருகே நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து கிளம்ப முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் இருந்து விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த சிலர் ரயில் மூலம் டெல்லி சென்று எப்படியோ போராடும் விவசாயிகளோடு போய்ச் சேர்ந்துகொண்டனர்.
இப்படி சுமார் 10 தமிழர்கள் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் தற்போது இடம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
இது தவிர நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர், போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்தனர். ஆனால், இவர்கள் டெல்லியை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.
கடன் தள்ளுபடி, விளை பொருள்களுக்கு லாபகரமான விலை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையிலான தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் கடந்த காலங்களில் டெல்லியில் நடத்திய சிறிய போராட்டங்கள் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுள்ளன.
ஆனால், அவர்களால் இந்தப் போராட்டத்தில் வந்து பங்கேற்க முடியவில்லை. இது குறித்து கடந்த வாரம் அய்யாக்கண்ணுவிடம் பிபிசி தமிழ் விசாரித்தது. தாங்கள் 300 பேர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்க ரயிலில் முன்பதிவு செய்திருந்ததாகவும், ஆனால், அதையடுத்து தாங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதால் டிக்கெட்களை கேன்சல் செய்துவிட்டதாகவும், மீண்டும் முயற்சி செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன் பிறகு, மீண்டும் டெல்லி செல்ல முயன்ற அந்த சங்கத்தினரை போலீசார் கைது செய்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

பட மூலாதாரம், Randeep sangatpur
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதே அமைப்பைச் சேர்ந்த சிலர் எப்படியோ டெல்லி வந்து சேர்ந்துவிட்டனர்.
அவர்களில் போராட்டத் தலத்தில் இருந்த ஜோதி முருகன் என்பவரிடம் பிபிசி தமிழின் சார்பில் பேசினோம்.
அவர் தம்மை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சென்னை மாவட்டத் தலைவர் என்று அறிமுகம் செய்துகொண்டார். தங்கள் சங்கத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு நிர்வாகிகள் தம்முடன் இருப்பதாகவும், இது தவிர தங்கள் அமைப்பைச் சேர்ந்த மேலும் 6 பேர் தனியாக வந்து போராட்டத்தில் வேறு இடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தங்களுக்கு பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள் போராட்டக் குழுவினர், உணவு, தங்குவதற்கும், குளிப்பதற்குமான இடங்களைத் தந்து சகோதரத்துவத்துடன் இணைத்துக்கொண்டதாக அவர் பிபிசி தமிழிடம் கூறினார்.
எவ்வளவு நாள்கள் போராட்டத்தில் இருப்பீர்கள் என்று கேட்டதற்கு "போராட்டம் முடியும்வரை இருப்போம்" என்று கூறினார் அவர்.
பிற செய்திகள்:
- சோசலிசம் குறித்து அம்பேத்கரின் கருத்து என்ன? - வெளிச்சத்துக்கு வராத பக்கங்கள்
- அயோத்தி பாபர் மசூதி இடிப்பும், ராமர் கோயில் அரசியலும் - 165 ஆண்டு வரலாறு
- மத்தியப் பிரதேச 'லவ் ஜிகாத்' சட்டம்: 10 ஆண்டு சிறை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம்
- பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி ரஷ்யாவில் தொடங்கியது
- ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டார் - அடுத்தது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













