கோவா மேற்குத் தொடர்ச்சி மலை - சுற்றுலா தலத்தில் இயற்கையை காக்க ஒரு போராட்டம்

பட மூலாதாரம், Getty Images
மூன்று கட்டமைப்புத் திட்டங்களை எதிர்த்து, பசுமை போர்த்திய சுற்றுலா தலமான கோவாவில் போராட்டங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. கோவாவில் வாழும் மக்கள், இந்த கட்டமைப்புத் திட்டங்கள், கோவாவின் பல்லுயிர்ப் பெருக்கத்தை பாதிக்கும் எனவும், கோவாவை ஒரு நிலக்கரி மையமாக அது மாற்றிவிடும் எனவும் அஞ்சுகிறார்கள்.
கோவாவில், மோர்முகா (Mormugao Port Trust) என்கிற பெயரில் ஒரேயொரு துறைமுகம் தான் இருக்கிறது. இந்த துறைமுகத்தில் சிதறி விழும், இறக்குமதி செய்யும் எடை குறைந்த நிலக்கரித் துண்டுகள், கடல் அலைகளில் அடித்து வருவதால், அவற்றை கோவாவின் பல கடற்கரைகளிலும் காணலாம்.
தற்போது இந்த மோர்முகா துறைகம், சாலை மற்றும் ரயில் போக்குவரத்து வழியாக, சுமார் 9 மில்லியன் டன் நிலக்கரியைக் கையாளுகிறது. இந்த நிலக்கரிகள், பெரும்பாலும் அருகிலுள்ள இரும்பாலைகளுக்கு அனுப்பப்படுகின்றன.
அதானி, ஜே.எஸ். டபிள்யூ, வேதாந்தா போன்ற பெரு நிறுவனங்களுக்காக, வரும் 2030-ம் ஆண்டில் கோவாவின் மோர்முகா துறைமுகம் 51.6 மில்லியன் டன் நிலக்கரியை கையாளலாம் என பல அறிக்கைகள் கூறுகின்றன.
நெடுஞ்சாலை விரிவாக்கம், ஏற்கனவே இருக்கும் ரயில் தடத்தில் மற்றுமொரு பாதையைப் போடுவது, புதிதாக மின் பகிர்மான லைன்களை போடுவது என மூன்று புதிய கட்டமைப்பு திட்டங்களை அறிவித்தது அரசு.
நிலக்கரி போக்குவரத்தை எளிமையாக்கவே இந்த திட்டங்கள் உதவும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். இதனாலேயே மோர்முகா துறைமுக பகுதியில் போராட்டங்கள் நடக்கின்றன.
இந்த மூன்று திட்டங்கள், தெற்கு கோவாவில் இருக்கும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியிலும் நடக்க இருக்கின்றன. இந்த பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி, இமய மலையை விட வயதானது என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.
ஆனால் கோவா அரசு இவர்களின் குற்றச்சாட்டுகளை மறுக்கிறது. புதிய மின் பகிர்மான திட்டங்கள், கோவாவின் மின்சார தேவையைப் பூர்த்தி செய்யவும், புதிய நெடுஞ்சாலை விரிவாக்கம் அதிகரிக்கும் சாலை போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், கூடுதல் ரயில் தடங்கள் கூடுதலாக சரக்கு மற்றும் பயணிகள் ரயிலை இயக்கவும் பயன்படும் என்கிறது.

பட மூலாதாரம், Getty Images
சுற்றுச்சூழல் ஆர்வலர்களோடு, கோவா மாநிலத்தின் சுற்றுலா துறையும் கவலையில் ஆழ்ந்துள்ளது. கோவாவின் பசுமை போர்த்திய காடுகள், அழகான கடற்கரைகள், ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளை ஈர்த்துக் கொண்டு இருக்கின்றன. இந்த திட்டங்களால் சுற்றுலா துறை பாதிக்கப்படலாம் என அஞ்சுகிறர்கள்.
பல்லுயிர்ப் பெருக்கம் பாதிக்கப்படலாம்
மேற்கு தொடர்ச்சி மலையில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி 240 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இதை யுனெஸ்கோ அமைப்பு, உலகின் எட்டு முக்கிய பல்லுயிர்ப் பெருக்க இடங்களில் ஒன்றாக குறிப்பிட்டு இருக்கிறது.
இங்கு 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்து கோவில், பசுமையான வெப்ப மண்டல காடுகள், தூத்சாகர் உட்பட பல நீர்வீழ்ச்சிகள் இருக்கின்றன.
இந்த பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி, 128 அரிய வகை தாவரங்கள், பட்டாம்பூச்சிகள், பறவைகள், ஊர்வனகள், சிறுத்தைகள், வங்கப் புலிகள் மற்றும் பங்கோலின்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் வீடாக இருக்கிறது.
ஒரு அரிய வகையான தட்டான் (Dragon Fly), கோவாவில் ஒரே ஒரு இடத்தில் தான் இருப்பதாகச் சொல்கிறது பதிவுகள். அந்த இடத்தில் தான் புதிய ரயில்வே தட விரிவாக்கப் பணிகள் வர இருக்கின்றன.
அதே போல ஒரு அரிய வகை எறும்பு, இந்தியாவிலேயே இரண்டு இடங்களில் மட்டுமே காண முடியும். அப்படிப்பட்ட இடத்தில் தான் புதிய மின் பகிர்மான மையத்தை அமைக்க திட்டம் போடப்பட்டு இருக்கிறது.
"எனக்கு இந்த வனங்கள் தான் பாம்புகள் மீதான காதலை உண்டாக்கின. நான் பல முறை மொல்லம் தேசிய பூங்காவுக்கு வந்திருக்கிறேன். இந்த வனத்தில் ஊர்வன மற்றும் தவளை போன்ற உயிரினங்களின் அருமையான பல்லுயிர்ப் பெருக்கமும், பன்முகத்தன்மையும் இருக்கிறது. இதில் சில உயிரினங்களை உலகின் வேறு எந்த பகுதியிலும் காண முடியாது. இந்த பன்முகத்தன்மையை நாம் பாதுகாக்க வேண்டும்," என்கிறார் உயிரியல் பாதுகாவலர் நிர்மல் குல்கர்னி.

கோவாவில் வர இருக்கும் மூன்று கட்டமைப்பு திட்டங்களை ரத்து செய்யச் சொல்லி, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில் கையெழுத்திட்ட விஞ்ஞானிகள், செயற்பாட்டாளர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலக்கரி விரிவாக்கம்
நாங்ளும் நிலக்கரி இல்லாத, சுற்றுச்சூழல் மாசு இல்லாத கோவாவைத் தான் விரும்புகிறோம். நிலக்கரிக்கு மாற்றை தேடிக் கொண்டு இருக்கிறோம். நிலக்கரி போக்குவரத்து அளவை மெல்ல ஒவ்வொரு ஆண்டும் குறைப்போம் என சமீபத்தில் குறிப்பிட்டார் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்.
இந்த பேச்சுக்களில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திருப்தி அடையவில்லை. புதிய மின் பகிர்மானம் கோவாவின் மின்சார பற்றாக்குறையை குறைக்க உதவும் என்கிறது அரசு. ஆனால் கடந்த 9 ஆண்டுக்ளாக, மற்ற மாநிலங்களில் இருந்து வாங்கும் மின்சாரத்தின் அளவு மிகக் குறைவாகவே அதிகரித்து இருக்கிறது என்கிறார்கள் ஆர்வலர்கள்.
அத்துடன், பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்கு மத்தியிலும் மூன்று கட்டமைப்புத் திட்டங்களைக் கொண்டு வருவது, கோவாவில் புதிய துறைமுகத்தை கட்டவும், ஏற்கனவே இருக்கும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும், மத்திய அரசு முன்னெடுக்கும் திட்டம் என்கிறார்கள் ஆர்வலர்கள்.
எல்லா அறிக்கைகள் மற்றும் விவரங்களும், கோவா ஒரு நிலக்கரி மையமாவதைத் தான் சுட்டிக் காட்டுகிறது. இது தொடர்பான எல்லா தரவுகளையும், மத்திய அரசிடம் ஐந்து மாதங்களுக்கு முன்பே பகிர்ந்து விட்டோம், ஆனால் இதுவரை அரசு, இதை மறுக்கும் விதத்தில் ஒரு விவரத்தைக் கூட கொடுக்க முடியவில்லை என்கிறார் செயற்பாட்டாளர் அபிஜித் பிரபுதேசாய்
மொல்லத்தை காப்பாற்றுவோம்
கடந்த மார்ச் மாத தொடக்கத்திலேயே, கொரோனா வைரஸ் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட இரண்டு வார காலத்திலேயே, இந்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், சில கட்டமைப்புத் திட்டங்களுக்கு காணொளிக் காட்சி மூலம் அனுமதி கொடுத்தார். இதனால் கோவாவில் போராட்டம் தொடங்கியது.
இந்த திட்டங்களை எப்படி அனுமதித்தீர்கள் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதோடு இந்த திட்டங்களுக்கு அனுமதி கொடுத்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்கள். சமீபத்தில் கோவாவுக்குச் சென்ற மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், இந்த கட்டமைப்புத் திட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.
மக்கள் எழுப்பும் கேள்விகள் குறித்து கேட்டதற்கு "மக்கள் அனுப்பிய விவரங்களைக் கட்டாயம் படிப்பேன்" என கூறினார் பிரகாஷ் ஜாவடேகர்.

பட மூலாதாரம், Chevon Rodrigues
வெகு விரைவில் சந்தூரில் இருக்கும் ரயில்வே தட விரிவாக்கத்தை எதிர்த்து, ரயில்வே வழித் தடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள், இரவு நேரத்தில் போராட்டம் நடத்தத் தொடங்கினர். அதில் ஆறு பேர் மீது கலவரம் மற்றும் சட்டத்துக்கு புறம்பாக கூடுவது போன்ற வழக்குகள் தொடுக்கப்பட்டது. ஆனால் அங்கு கூடி இருந்தவர்கள், எந்த ஒரு சட்டத்துக்கு புறம்பான செயலும் நடக்கவில்லை என்றார்கள்.
அரசு எங்களை கவனிக்க வேண்டும் என, கொரோனா காலத்திலும், நாங்கள் எங்கள் உயிரைப் பணயம் வைத்து, கூட்டத்தில் பங்கெடுக்க வேண்டி இருக்கிறது என அந்தப் போராட்டத்தில் பங்கெடுத்த ஷெர்ரி ஃபெர்னாண்டஸ் கூறுகிறார்.
இந்த பிரச்சனை குறித்து மக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்திய விதத்தில், இது ஒரு பெரிய வெற்றி, ஆனால் எங்கள் கோரிக்கைகளை அரசு கேட்கவில்லை. அரசு கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும் வரை எங்கள் போராட்டமும் ஓயாது என்கிறார் ஃபெர்னாண்டஸ்.
அரசு, இந்த மூன்று திட்டங்களையும் கைவிட வேண்டும், நிலக்கரி கையாள்வதை நிறுத்த வேண்டும் என்கிறார்கள் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்.
ற செய்திகள் :
- விவசாயிகள் போராட்டம்: ஆதரவு தரும் கனடா பிரதமர் - அழுத்தத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் இழுபறி
- கொரோனா: குணமடைந்த 3 மாதம் கழித்தும் நுரையீரல் பாதிப்பு - ஆய்வில் அதிர்ச்சி
- தமிழ்நாட்டில் காங்கிரஸின் பலத்தை மிகை மதிப்பீடு செய்கிறாரா ராகுல் காந்தி?
- நாசாவின் கவனத்தை ஈர்த்த 6 வயது மாற்றுத் திறனாளி சிறுவன்
- மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் சந்தோஷ் பாபு
- தமிழ்நாட்டில் காங்கிரஸின் பலத்தை மிகை மதிப்பீடு செய்கிறாரா ராகுல் காந்தி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












