அமித் ஷாவின் குற்றச்சாட்டுக்கு திமுக பதில் - `சாதனை பட்டியலை நேருக்கு நேர் மேடை அமைத்து சொல்ல தயார்`

ஸ்டாலின்

பட மூலாதாரம், MK STALIN TWITTER

மத்திய அரசில் இருந்தபோது தி.மு.க. தமிழகத்திற்குக் கொண்டு வந்த திட்டங்கள் அடங்கிய பட்டியலை கேட்டு திமுகவிற்கு பாஜக மூத்த தலைவர் அமித் ஷா விடுத்திருந்த சவாலுக்கு திமுக பதில் அளித்துள்ளது.

திமுகவின் பொருளாளரும் நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்களை கொண்டுவந்துள்ளது என்றும் மத்திய பா.ஜ.க. அரசு, தமிழ் மொழியைப் புறக்கணித்தது, இந்தித் திணிப்பு - மத துவேஷம் உருவாக்குவது, சமூக நல்லிணக்கத்தை பாழ்படுத்துவது போன்ற துரோகங்களை மட்டுமே இதுவரை தமிழ்நாட்டிற்குச் செய்து வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

சாதனைப் பட்டியலைச் சொல்ல வேண்டுமென்றால் - நேருக்கு நேர் மேடை அமைத்து - அமித்ஷா கூறியிருப்பது போல் தெருதோறும் கூட்டம் போட்டுப் பேச திமுகவால் முடியும் என்றும் டிஆர்பாலு தெரிவித்துள்ளார்.

பட்டியலை வெளியிட்டுள்ள டிஆர்பாலு தனது அறிக்கையில், ''சமூகநீதியின் பிறப்பிடமாம் தமிழகத்தில் இருந்து சமூகநீதிக் காவலர் திரு. வி.பி.சிங் அவர்களை ஆதரித்த போது "பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 27 சதவீத இடஒதுக்கீடு" அளிக்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றியிருக்கிறோம். தமிழகத்தின் நீர் உரிமையை நிலைநாட்ட காவிரி நடுவர் மன்றம் அமைத்திருக்கிறோம். சேலம் உருக்காலை தனியார் மயமாவதை தடுத்து நிறுத்தியிருக்கிறோம்,'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சமூகநீதி என்றாலே பா.ஜ.க.விற்கு கசக்கிறது என்று விமர்சித்துள்ள பாலு, ''மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு 27 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்தது திராவிட முன்னேற்றக் கழகம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பங்கேற்று இருந்த காலத்தில்தான் என்பதை உள்துறை அமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும். என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ''ஸ்டெர்லைட் ஆலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியது; ராஜீவ் வழக்கில் 30 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்க அனுப்பிய தமிழக அரசின் தீர்மானத்திற்கு இதுவரை ஒப்புதல் கொடுக்க மறுப்பது என்று மத்திய பா.ஜ.க. அரசு தமிழகத்திற்கு இழைத்துள்ள அடுக்கடுக்கான துரோகங்களைப் பட்டியலிட முடியும்,'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமித் ஷா

பட மூலாதாரம், Getty Images

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு நேற்று வருகை தந்த நிலையில், தேர்வாய் கண்டிகையில் புதிய நீர்த் தேக்கத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தல், மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆகியவற்றை துவக்கி வைத்தார் அப்போது அந்த விழாவில் பேசிய அமித் ஷா, ''மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு என்ன பலன் கிடைத்தது? திமுகவினர், பாஜகதான் தமிழகத்திற்கு அநீதி இழைத்திருக்கிறது என்று கூறுவார்கள். காங்கிரஸ் கூட்டணியில் இருந்த பத்து ஆண்டுகளில், திமுகவினர் என்ன சாதனைகளை செய்தார்கள்? சாதனை பட்டியலை திமுக தரட்டும்." என்று பேசினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :