அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை: பாஜக தொண்டர்களிடம் தமிழக அரசியல் குறித்து என்ன பேசினார் அமித் ஷா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தாலும், அடுத்த தேர்தலில் பாஜக தனித்து வெற்றி பெறுவதற்கு தொண்டர்கள் கடுமையாக உழைக்கவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித் ஷா வலியுறுத்தியுள்ளதாக பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.
அமித் ஷாவின் வருகை தங்களுக்கு நம்பிக்கையை கூட்டியுள்ளதாகவும், தமிழகத்தில் இதுவரை தொண்டர்கள் செய்த வேலைகளுக்கு அவர் அங்கீகாரம் அளித்ததாகவும் தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.
பிபிசி தமிழிடம் பேசிய பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன், சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு வாக்குச்சாவடி வாரியாக தொண்டர்களை பலப்படுத்தும் வேலைகளில் ஈடுபடவேண்டும் என அமித் ஷா கூறினார் என்கிறார்.
''கிராம அளவில் பாஜகவின் தொண்டர்கள் படையை உருவாக்கவேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்கள் கட்டமைப்பை உறுதிப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளோம் என்பதை கண்டு பாராட்டினார் அமித் ஷா. தமிழகத்தில் அடுத்த தேர்தலில் பாஜக தனித்து வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. அதற்கு தொண்டர்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என விளக்கினார். அவரது வருகை பாஜக தொண்டர்களுக்கு மிகவும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது,'' என்றார் நாராயணன்.
மேலும், தமிழகத்தில் அரசு விழாவில் பங்கேற்ற சமயத்தில் தேர்தல் கூட்டணி குறித்து பேசியது பற்றிக் கேட்டபோது, ''தமிழகத்தில் அரசு விழாக்களில் அரசியல் பேசுவது புதியது இல்லை. இதற்கு முன்னதாகவும், அதிமுக, திமுகவினர் அரசியல் பேசியிருக்கிறார்கள். இந்த முறை, கூட்டணி பற்றி அதிமுகவின் மூத்த தலைவர்கள் வெளிப்படையாக பேசிவிட்டதால், அமித் ஷாவும் அவரது கருத்தைத் தெரிவித்தார். அதிலும், அதிமுக பாஜக கூட்டணி ஏன் தமிழகத்திற்கு அவசியம் என்று விளக்கியபோதுதான் அவர் பேசினார். அதனால், அரசு மேடையில் கூட்டணி அரசியல் பேசவில்லை. மத்திய, மாநில அரசுகளின் உறவு பற்றிப் பேசிய சமயத்தில், தேர்தல் பற்றியும் பேசினார்கள் என்றுதான் சொல்லவேண்டும்,''என்கிறார் நாராயணன்.

கூட்டணி பற்றிய அறிவிப்பில்,தமிழக பாஜகவை புறக்கணிக்கும் வகையில் அதிமுக-அமித் ஷாவின் சந்திப்பு அமைந்துவிட்டதா என்று கேட்டபோது, ''கூட்டணி பற்றிய முடிவு ஏற்கனவே தமிழக பாஜகவினருடன் பேசி, முடிவு செய்த ஒன்றுதான். எங்கள் கட்சி தேசிய கட்சி என்பதால், தமிழக குழுவினருடன் ஆலோசித்துவிட்டு, முடிவை தேசிய தலைவர் அறிவித்தார்,'' என்கிறார் நாராயணன்.
ஒவ்வொரு முறையும் பாஜகவின் மூத்த தலைவர்கள் தமிழகத்திற்கு வரும்போது, ட்விட்டர் தளத்தில் எதிர்ப்புகள் கிளம்புவது பற்றிக் கேட்டபோது, ''ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட் ஆவது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஏன் என்றால் அது பொது மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் செயல் அல்ல. 2014ல் பாஜகதான் சமூக ஊடகங்களை பிரதானமாக பிரசாரத்திற்கு பயன்படுத்தியது. அதனை தொடர்ந்து பிற அரசியல் கட்சிகளும் சமூக ஊடகங்களை பயன்படுத்தினார்கள். தற்போது, சமூக ஊடகங்களை தாண்டி, எங்கள் பிரசார பாணியில் மேலும் மக்களுக்கு எங்கள் கட்சி மற்றும் சித்தாந்தத்தை எப்படி கொண்டுசெல்வது என்றுதான் முயற்சி செய்துவருகிறோம்,''என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் அமித் ஷா தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதத்தில் பேசியதாகவும், அடுத்த ஆண்டின் வேலைகள் பற்றி விவரித்ததாகவும் சொல்கிறார் தென்சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு தலைவரான சூரியநாராயணன்.
கோவை, சென்னை, திருச்சி, ஓசூர், ராசிபுரம் பகுதிகளில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள் என்கிறார் சூரியநாராயணன்.''இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பாஜக எவ்வாறு காலூன்றியுள்ளது என்பதை விளக்கிய அமித் ஷா, தமிழகத்தில் பலம் பெறவேண்டும் என்றார். தமிழகத்தைக் கைப்பற்றுவது பாஜகவுக்கு மிகவும் அவசியம் என்றார். அடிப்படை தொண்டர்களின் வேலைகள் மூலமாகவே கட்சியை பலப்படுத்த முடியும் என அறிவுறுத்தினார்,'' என்றார்.
அதிமுக - பாஜக கூட்டணி பற்றிய அறிவிப்பை அரசு விழாவில் பேச வேண்டிய கட்டாயம் பற்றிக் கேட்டபோது, ''கூட்டணி பற்றி அதிமுக சொல்லிவிட்டதால், அமித் ஷாவும் பேசவேண்டிய சூழல் ஏற்பட்டது. தமிழகத்தில் திருமணம், அரசு விழாக்கள் எனப் பல இடங்களில் அரசியல் முடிவுகள் முந்தைய காலங்களில் நடந்துள்ளது. அமித் ஷாவின் பேச்சு வெறும் தேர்தல் பற்றியதாக இல்லை. தொண்டர்களுடன் பேசுவதற்கு தனி கூட்டம் நடத்தப்பட்டது. அரசு விழாவில் தேவையான கருத்துக்கள் மட்டுமே பேசினார். அதிமுக தலைவர்கள் தேர்தல் பற்றிப் பேசியதால், அமித் ஷா அதை விலக்காமல் பேசினார். அரசு விழாவில் அரசியல் பேசுவது புதிதில்லை,''என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












