பழனி துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த முதியவர் பலி - அடுத்தடுத்து கடந்த பரபரப்பு நிமிடங்கள்

கைது
படக்குறிப்பு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நடராஜ்

பழனியில் நிலம் தகராறு தொடர்பான விவகாரத்தில் தியேட்டர் உரிமையாளர் நடராஜ் சுட்டதில், காயம் அடைந்த இருவரில் ஒருவரான சுப்பிரமணி உயிரிழந்தார்.

துப்பாக்கி தோட்டா காயங்களுடன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி ராமபட்டினம் புதூரில் வள்ளுவர் என்ற திரையரங்கு இயங்கி வருகிறது. இந்தத் திரையரங்கின் உரிமையாளர் நடராஜ். இவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சுப்பிரமணி, பழனிச்சாமி ஆகியோரும் இணைந்து சில வருடங்களுக்கு முன்பாக ஒரு நிலத்தில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிலம் தொடர்பாக நடராஜ் தரப்புக்கும் சுப்பிரமணி, பழனிச்சாமி தரப்புக்கும் இடையில் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், நில விவகாரம் தொடர்பான வழக்கில் சுப்பிரமணி, பழனிச்சாமி தரப்புக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இருந்தபோதும் விவகாரம் தீராத நிலையில், இது தொடர்பாகப் பேச, நடராஜின் வீடு அமைந்துள்ள பழனி அப்பர் தெருவுக்கு சுப்பிரமணியும் பழனிச்சாமியும் சென்றுள்ளனர்.

அப்போது நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், திடீரென நடராஜ் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுப்பிரமணியையும் பழனிச்சாமியையும் சுட்டார்.

இந்தக் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இருவரையும் நடராஜ் சுட்ட பிறகு, வேறு ஒருவர் கல்லைக் கொண்டு எறிந்து நடராஜை விரட்ட முயன்றார். அவரையும் துப்பாக்கியால் சுடுவதற்கு நடராஜ் முயன்று, அது நடக்காத நிலையில் அங்கிருந்து வெளியேறினார் நடராஜ்.

இந்த துப்பாக்கிச் சுட்டில் சுப்பிரமணிக்கும் பழனிச்சாமிக்கும் வயிறு, இடுப்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டது. அவர்கள் பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சுப்பிரமணிக்கு குண்டு எங்குள்ளது என்பது தெரியாததால், கூடுதல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக நடராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய தேனி சரக டிஐஜி முத்துச்சாமி, "பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிக்கு உரிமம் உள்ளது. சம்பந்தப்பட்ட நடராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். பழனிச்சாமி ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டார்" என்று தெரிவித்தார்.

தொடரும் துப்பாக்கி சூடு

சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், திங்கட்கிழமை மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்திருக்கிறது.

இதற்கிடையே, துப்பாக்கி சூடு நடந்தபோது நடராஜின் செயலைப் பார்த்து அங்கு வழிப்போக்கராக வந்த முதியவர், முதலில் கல்லால் அடித்தும் செருப்பை தூக்கி வீசியும் அவரது கவனத்தை திருப்ப முயன்றிருக்கிறார்.

இந்த காட்சிகள் அனைத்தும் சம்பவ பகுதிக்கு எதிரே உள்ள சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது. தொடக்கத்தில் நடராஜின் செயலை பார்த்த வழிப்போக்கர்கள், ஏதோ தீபாவளி துப்பாக்கியால் விளையாட்டாக சுடுவதாக கருதியிருக்கின்றனர்.

ஓட்டம் எடுத்த வழிப்போக்கர்கள், உதவிய ஆர்வலர்கள்

ஆனால், ரத்தம் சொட்டுவதை பார்த்த பிறகே நிலைமையின் விபரீதம் சாலையில் செல்வோருக்கு புரிந்தது. பலரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்த நிலையில், தனி நபராக அவ்வழியாக வந்த முதியவர், நடராஜ் மீது மணல் திட்டில் இருந்த கற்களை எடுத்து வீசி அவரை விரட்டியடித்தார். அந்த முதியவரின் செயல், பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இதே போல, உயிருக்கு போராடிய பழனிச்சாமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, அவருக்கு பி-நெகட்டிவ் ரத்தம் தேவைப்பட்டதால் அங்கிருந்த மருத்துவர் உதயகுமார் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்து ஆபத்தான கட்டத்தை அவர் கடக்க உதவியிருக்கிறார்.

ஒருபுறம் பதற்றம் நிறைந்த நடராஜின் துப்பாக்கி சூடு சிசிடிவி காட்சிகள், சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், முன் பின் அறிமுகமில்லாதவர்களுக்காக உதவ முன்வந்த முதியவரின் செயலும், அரசு மருத்துவரின் கடமை உணர்வும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: