செளதி அரேபியா கல்லறையில் வெடிகுண்டு தாக்குதல் - முதலாம் உலகப் போர் நிகழ்ச்சி

இன்றைய நாளில் இந்தியா மற்றும் பிற நாடுகளில் நடந்த முக்கிய செய்திகளின் சுருக்கத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

செளதி அரேபியா: கல்லறையில் வெடிகுண்டு தாக்குதல் - நடந்தது என்ன?

பட மூலாதாரம், AFP

செளதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடந்த முதலாம் உலகப் போர் நினைவு நாள் நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததாகவும், இதில் பலர் காயமடைந்ததாகவும் பிரான்ஸ் கூறுகிறது.

இந்த நிகழ்வில் பல வெளிநாட்டு ராஜாங்க அதிகாரிகள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் அடக்கம் செய்யப்படும் கல்லறையில் நடந்த இந்த நிகழ்வில் மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் கொண்டு இந்த தாக்குதல் நடந்துள்ளது என பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சகத்தின் குறிப்பு விவரிக்கிறது.

கோழைத்தனமான, நியாயப்படுத்த முடியாத தாக்குதல் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செளதி அதிகாரிகள் இதனை உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

செளதியில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் அக்டோபர் 29ஆம் தேதி தூதரகத்தின் காவலர் ஒருவர் கத்தியில் குத்தப்பட்டார். இதே நாளில்தான் பிரான்ஸின் நைஸ் நகரில் இஸ்லாமியவாத பயங்கரவாத தாக்குதல் என அழைக்கப்பட்ட ஒரு தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர்.

செளதியில் உள்ள பிரான்ஸ் செய்தியாளர் க்ளாரன்ஸ் ரோட்ரிக்வுஸ் இன்று நடந்த தாக்குதல்கள் குறித்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

அந்த ட்வீட்டில், "இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் அடக்கம் செய்யப்படும் கல்லறையில் தாக்குதல் முயற்சி நடந்தது. இந்த நிகழ்வில் பிரான்ஸ், ஐர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளின் தூதர்கள் கலந்து கொண்டனர்," என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் இன்னொரு முறை குறிவைக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய கிரீஸின் நாட்டின் தூதுவ அதிகாரி, நான்கு பேர் லேசான காயம் அடைந்ததாகவும், அதில் ஒருவர் கிரீஸ் நாட்டவர் என்றும் கூறி உள்ளார்.

தனது மக்கள் இயக்க மாவட்ட செயலாளர்களுடன் விஜய் ஆலோசனை

விஜய்

பட மூலாதாரம், G VENKET RAM

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மாவட்ட செயலாளார்களுடன், சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் "அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்" என்ற பெயரில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

அவரது ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று மதுரை, திருச்சி போன்ற இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் சர்ச்சையை ஏற்படுத்தின.

விஜய் மேடைகளிலும் சினிமா சார்ந்து மட்டுமில்லாமல் அரசியலையும் சேர்த்து பேசுவார். இதனிடையே "அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்" என்ற பெயரில் விஜயின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் கட்சி பெயர் ஒன்றை தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்.

இதை ஊடகங்கள் வாயிலாக அறிந்த விஜய் அந்த கட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை. அந்த கட்சி சார்பில் நடத்தப்படும் நிகழ்வுகளில் தனது பெயர் ஈடுபடுத்தப்படுமானால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இதுதொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த விஜயின் தாயாரான ஷோபா சந்திரசேகர் தனது அரசியல் பயணம் குறித்து பொதுவெளியில் பேச வேண்டாம் என விஜய் பலமுறை கூறியும் எஸ். ஏ. சந்திரசேகர் கேட்கவில்லை என தெரிவித்திருந்தார்.

இதனிடையே மதுரை, திருச்சி போன்ற மாவட்டங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது. அந்த கூட்டங்களில் விஜய் என்ன முடிவு எடுக்கிறாறோ அதற்குத்தான் கட்டுப்படுவோம் என்றும் எஸ். ஏ. சந்திரசேகர் தொடங்கிய கட்சியில் இணையமாட்டோம் என்றும் விஜய் மக்கள் இயக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்

பள்ளிகள்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை அறிவிப்பார் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என பெற்றோர், ஆசிரியர்கள் தரப்பிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வில் பயிற்சி பெற ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். மருத்துவ படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட பிறகு, 5 லட்சத்து 18 ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஹாங்காங்கில் 4 ஜனநாயக ஆதரவு உறுப்பினர்கள் தகுதி நீக்கம்

ஹாங்காங்

பட மூலாதாரம், Reuters

ஹாங்காங்கில் நான்கு ஜனநாயக ஆதரவு பேரவை உறுப்பினர்கள் அவர்கள் வகித்து வரும் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த பிராந்திய சுதந்திரத்துக்காக குரல் கொடுத்ததற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சீன நாடாளுமன்ற நிலைக்குழு தீர்மானம் நிறைவேற்றியது. ஹாங்காங் தனி சுதந்திரத்தை கோரும் செயல்பாடு, சீன இறையாண்மைக்கு எதிரானதாக பார்க்கப்பட வேண்டும் என்றும் தங்களின் முழக்கத்துக்கு ஆதரவாக வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டை கோரினால் கூட அது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான செயலாக பார்க்கப்படும் என்றும் அந்நாட்டு நாடாளுமன்ற குழு தீர்மானத்தில் கூறியுள்ளது.

சிவில் கட்சியைச் சேர்ந்த ஆல்வின் இயூங், க்வொக் கா கீ, டென்னிஸ் க்வொக், ப்ரொஃபெனல்ஸ் கில்ட் கட்சியின் கென்னத் லியூங் ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள்.

இந்த நடவடிக்கை ஹாங்காங் சுயாதீனத்தில் வாழும் ஜனநாயக சார்பாளர்கள் மீதான கட்டுப்பாட்டை மேலும் அதிகரிக்கும் மிரட்டலாக பார்க்கப்படுகிறது.

ஹாங்காங்கில் புதிய பாதுகாப்பு சட்டம் கடந்த ஜூலை மாதம் சீன மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்னதாக, அத்தகைய சட்டத்தை கொண்டு வர ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் ஆதரவாக இருந்தபோது அவருக்கு எதிராக மாதக்கணக்கில் கடுமையாக போராட்டங்கள் வெடித்தன. எட்டு மாத போராட்டங்கள் காவல்துறையின் கடும் நடவடிக்கை மூலம் அமைதிப்படுத்தப்பட்ட நிலையில், அவ்வப்போது ஜனநாயக ஆதரவு குரல்களை சில செயல்பாட்டாளர்கள் ஹாங்குக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தவாறு எழுப்பி வருகின்றனர்.

ஹாங்காங் பேரவையில் மொத்தம் 70 இடங்கள் உள்ளன. இதில் 19 இடங்களில் ஜனநாயக சார்பானவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் நால்வர் உள்பட 12 உறுப்பினர்கள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள பேரவை தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஹாங்காங் பிராந்தியம், 1997ஆம் ஆண்டுவரை பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. அப்போது சீனாவசம் ஹாங்காங் ஒப்படைக்கப்பட்டபோது, ஒரே நாடு, இரு ஆளுகை என்ற கோட்பாட்டை பின்பற்றி அங்கு வாழும் மக்களின் சுயாதீன உரிமைகள், சுதந்திரத்தை 2047ஆம் ஆண்டுவரை பராமரிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

சிறப்பு சுயாதீன பிராந்தியம் என்ற வகையில், ஹாங்காங் தனக்கென ஒரு சட்ட அமைப்பையும், பல கட்சிகள், தனி நபர் பேச்சு சுதந்திரம், சுதந்திரமான பேரவை உள்ளிட்டவற்றை கொண்டிருக்கிறது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: