தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாற்றப்படுவாரா? டெல்லியில் முக்கிய தலைவர்களுடன் அடுத்தடுத்து சந்திப்பு

- எழுதியவர், எம்.ஏ. பரணி தரன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கடந்த இரண்டு தினங்களாக சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அவர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.
மூன்று நாட்கள் அரசுமுறைப்பயணமாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி வந்ததன் பின்னணியில் பல்வேறு அரசியல் விவகாரங்களும் தனிப்பட்ட காரணங்களும் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
கடந்த புதன்கிழமை சென்னையில் இருந்து டெல்லிக்கு வந்து பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம், சட்டம் ஒழுங்கு நிலைமை உள்ளிட்டவை குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாக தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசும்படி ஆளுநருக்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியது.
அதே நேரம் புதன்கிழமை இரவு மேற்கு வங்கத்துக்கு இரண்டு நாட்கள் பயணமாக அமித் ஷா புறப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், தமிழக ஆளுநருக்காக காத்திருந்து அவரை சந்தித்து அமித் ஷா பேசினார்.
இதைத்தொடர்ந்து இந்திய பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கை அவரது வீட்டில் அமித் ஷா சந்தித்தார். இதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமை நண்பகலில் அவர் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை சந்தித்துப் பேசினார். இவரைத்தொடர்ந்து இந்திய குடியரசு தலைவர் ராம்தாந்த் கோவிந்தையும் அவர் சந்ததித்துப் பேச நேரம் கேட்டிருப்பதாக பிபிசி அறிந்தது.
வழக்கமாக மாநில விவகாரங்கள், சட்டம் ஒழுங்கு, அரசியல் நிலைமை தொடர்பாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பும் பொறுப்பு மாநில ஆளுநருக்குரியது. இது தவிர, மத்திய அரசு திட்டங்கள் நிறைவேற்றல் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான முன் ஆலோசனைகளுக்காக ஆளுநரை நேரில் அழைத்து இந்திய உள்துறை அமைச்சர், பிரதமர் அல்லது குடியரசுத் தலைவர் ஆலோசனை நடத்தும் மரபும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நடைமுறை நீங்கலாக தற்போது தமிழக ஆளுநர் அடுத்தடுத்து பிரதமர், உள்துறை அமைச்சர், பிரதமர் அலுவலக விவகாரங்கள் இணை அமைச்சர், வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோரை சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் ஏற்கெனவே மாநில அரசின் அதிருப்திக்கு அதன் துணை வேந்தர் சூரப்பா ஆளான நிலையில், அவர் முன்னெடுத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கான உயர் அந்தஸ்து நடவடிக்கையை தமிழக அரசு வெளிப்படையாகவே நிராகரித்தது.
இதேவேளை, நீட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மாநில அரசின் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும் நடவடிக்கையில் ஆளுநர் தேவைக்கு அதிகமாகவே தாமதப்படுத்தியதாக எதிர்கட்சியான திமுக கடுமையாக குற்றம்சாட்டியது. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸும் ஆளுநர் பொறுப்பு குறித்தும் அதன் தேவை அவசியமா என்றவாறும் கேள்வி எழுப்பி அறிக்கைகளை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறை தண்டனைக்காலம் முடிந்த பிறகும் பாதுகாப்பு காரணங்கள் என்ற பெயரில் வழக்கில் தண்டனை பெற்ற ஏழு கைதிகளை விடுவிக்கக் கோரி தமிழ்நாட்டில் குரல்கள் வலுத்து வருகின்றன.
இந்த விவகாரத்தில் ஏழு பேரை விடுதலை செய்ய மாநில அமைச்சரை மாநில ஆளுநருக்கு முறைப்படி கடந்த செப்டம்பர் மாதம் பரிந்துரை செய்த பிறகும், அதன் மீது ஆளுநர் முடிவெடுக்கவில்லை. ராஜிவ் காந்தி கொலை வழக்குக்குப் பிந்தைய நிலையை விசாரித்து வரும் சிபிஐயின் அங்கமான பல்நோக்கு கண்காணிப்பு அமைப்பு அறிக்கைக்காக காத்திருப்பதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பான மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு அண்மையில் விசாரணை நடத்தியது.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் கே.எம். நடராஜ், "ராஜிவ் காந்தி கொலை சம்பவத்தின் சதி தொடர்பான விவகாரம், இந்தியாவைக் கடந்து பல நாடுகளில் உள்ளது. ராஜிவ் காந்தியை கொல்ல பயன்படுத்திய வெடிகுண்டு எங்கு தயாரிக்கப்பட்டது என்பது தொடர்பான புலனாய்வில் உறுதியான தகவல் சிபிஐக்கு கிடைக்கவில்லை,." என்று குறிப்பிட்டார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், "மிகப்பெரிய இந்த சதி தொடர்பான புலனாய்வு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கிறது. இருந்தபோதும் பிரிட்டன், தாய்லாந்தில் இருந்து தகவல் வரும் என சிபிஐ காத்திருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பினர்.
பேரறிவாளன் உள்ளிட்ட தண்டனை பெற்ற கைதிகள் தங்களை விடுவிக்கக் கோரும் மனுக்கள் மீது மாநில ஆளுநர் அரசியலமைப்பின் 161ஆவது விதியின்கீழ் மன்னிப்பு வழங்க உரிமை உள்ள விவகாரத்தில், தனது அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் பயன்படுத்த விரும்பவில்லை என்று தெரிவித்தனர்.
மேலும், நீதிமன்ற தலையீடு இல்லாமல் இந்த வழக்கில் ஏன் ஆளுநர் முடிவெடுப்பது பற்றி அவரிடமே கேட்கக்கூடாது என்று அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேட்டனர்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையில் கழித்து வரும் பேரறிவாளன், 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தன்னை விடுவிக்குமாறு ஆளுநருக்கு கருணை மனு அனுப்பினார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது கருணை மனு மீதான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால், உச்ச நீதிமன்றத்தை பேரறிவாளன் தரப்பு அணுகியது. இதையடுத்து, அவரது மனு மீது முடிவெடுக்குமாறு ஆளுநரை உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டில் கேட்டுக் கொண்டது.
இதன் பிறகு மீண்டும் இந்த விவகாரம் சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றம், கருணை மனு மீதான நடவடிக்கை எடுக்காதது குறித்து அதிருப்தியை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில்தான் தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் ஏழு பேரை விடுவிக்கும் பரிந்துரையை ஆளுநருக்கு செய்தது.
மிகவும் நுட்பமான ராஜிவ் கொலை வழக்கில் ஆளுநர் தாமதம் செய்வது தொடர்பான கருத்துகளை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் வெளிப்படையாக பதிவு செய்தன. இந்தப் பின்னணியில்தான் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பிரதமர் மோதி, அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்துப் பேசியிருப்பதாக டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிபிஐ சுயாதீன அமைப்பு என்றபோதும், அதன் நிர்வாக விவகாரங்கள் போன்றவை மத்திய பணியாளர் நலத்துறை கட்டுப்பாட்டில் வரும். அந்த வகையில் ராஜிவ் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐ மேற்கொண்டு வருவதால், அதன் தடையில்லா கடிதம் பெறுவது தொடர்பான அழுத்தங்களை மத்திய அரசுக்கு கொடுக்கும் வகையில் பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை இணை அமைச்சரான ஜிதேந்திர சிங்கை ஆளுநர் சந்தித்திருப்பதாக பிபிசிக்கு தெரிய வந்தது.
வழக்கமாக பிரதமர், உள்துறை அமைச்சரை மட்டுமே சந்திக்கும் மாநில அளுநர், அசாதாரணமாக பிரதமர் அலுவலக விவகாரங்கள் இணை அமைச்சரை சந்தித்தது, ராஜிவ் கொலை கைதிகளின் பின்னணியில்தான் என்பதை அறிய முடிகிறது.
இதற்கிடையே, தன் மீதான மாநில கட்சிகளின் தொடர் அதிருப்தி காரணமாகவும் தமிழ்நாட்டில் எதிர்வரும் அரசியல் சூழல்களைக் கருத்தில் கொண்டும் வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரும் வேண்டுகோளை தனிப்பட்ட முறையில் குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் ஆகியோரிடம் வைக்கவும் தமது டெல்லி பயணத்தை மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பயன்படுத்திக் கொண்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் பிபிசிக்கு தெரிவித்தன.
இந்த தகவல்களின் பின்னணியில் முதல் கட்டமாக, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கலாம் என்று டெல்லியில் உள்ள இந்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆளுநர் இடமாற்றம் விவகாரத்தில், குடியரசு தலைவரும் பிரதமரும் மட்டுமே முடிவெடுக்கும் நிலையில் இருப்பவர்கள் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
- அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் - நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
- இந்தியாவில் நீண்ட காலம் தொடர்ந்து எரியும் பெட்ரோலியக் கிணறு: சுற்றுச்சூழல் ஆபத்து
- `தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் இருக்கும்?` - கேள்வி எழுப்பிய நீதிபதிகள்
- அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் சமன் ஆனால் என்னாகும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












