இந்தியாவின் போர் கைதி பாகிஸ்தான் விமானப்படை தளபதி ஆன கதை

எச்.எஸ் பனாக் மற்றும் விமான லெப்டினன்ட் பர்வேஸ் குரேஷி மெஹ்தி

பட மூலாதாரம், HS Panag, Bharatrakshak.com

படக்குறிப்பு, எச்.எஸ் பனாக் மற்றும் விமான லெப்டினன்ட் பர்வேஸ் குரேஷி மெஹ்தி
    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி

இந்தச் சம்பவம் 1971, நவம்பர் 21 அன்று நிகழ்ந்தது. இந்தியா-பாகிஸ்தான் போர் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதற்கு 11 நாட்கள் முன்னர். '4 சீக்கிய படைப்பிரிவின்' வீரர்கள் ஒரு சில டாங்குகளுடன் கிழக்கு பாகிஸ்தானில் உள்ள சௌகாச்சா நகரத்தை நோக்கி முன்னேறினர்.

ஒரு பிரிவினர் டாங்குகளின் மேல் சவாரி செய்தனர். மேலும் மூன்று பிரிவினர் அவர்களைப் பின்பற்றினர். பாகிஸ்தானின் '107 காலாட்படைப் பிரிவின்' வீரர்கள் இவர்களைத் தாக்க முயன்றனர்.

ஆனால் இந்திய வீரர்கள் உற்சாகமாக இருந்தனர். உள்ளூர்வாசிகள் அவர்களை 'ஜோயி பங்களா' என்ற முழக்கத்துடன் வரவேற்றனர், மேலும் '4 சீக்கிய' படையினரின் 'ஜோ போலே ஸோ நிஹால்' என்ற முழக்கமும் எதிரொலித்தது.

இந்தியாவிடம் போர் கைதியாக சிக்கியவர் பாகிஸ்தான் விமானப்படையின் தலைமை தளபதி ஆனது எப்படி?

பட மூலாதாரம், Asad Saeed Khan

'பேட்டில் ஆஃப் தி பல்ஜ்' என்ற ஹாலிவுட் திரைப்படத்தினைப் போன்ற சில காட்சிகள் காணப்பட்டன. மாலை வாக்கில், இந்திய வீரர்கள் சௌகாச்சாவில் உள்ள கபாடக் ஆற்றின் கரையை அடைந்தனர்.

'4 சீக்கிய' படையினரின் டாங்குகளுடன் இயங்கும் டி-கம்பெனி, பாலத்தை அடைய தங்களால் முடிந்தவரை முயன்றது, ஆனால் அவர்கள் அங்கு செல்வதற்கு முன்பு, பாகிஸ்தானியர்கள் பாலத்தைத் தகர்த்துவிட்டனர்.

பாலத்தின் மேற்குப் பகுதியில் ஓர் இந்திய டாங்கு மணலில் சிக்கியது. அதை விடுவிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் பயனளிக்காமலே போய்க்கொண்டிருந்தன.

நான்கு சேபர் ஜெட் விமானங்கள் தாக்குதலைத் தொடங்கின

இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக ஓய்வு பெற்ற '4 சீக்கிய' ரெஜிமென்ட்டின் அட்ஜூடண்ட் கேப்டன் எச்.எஸ்.பனாக், அண்மையில் வெளியான தனது புத்தகமான 'த இண்டியன் ஆர்மி, ரெமினிசென்ஸ், ரிஃபார்ம்ஸ் அண்ட் ரொமான்ஸ்'-ல், "நவம்பர் 22 அன்று மூடுபனி விலகிய நேரம், பாகிஸ்தான் விமானப்படையின் நான்கு சேபர் ஜெட் விமானங்கள் 4 சீக்கியப் படையின் முகாம்களை நோக்கி வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கின. தகர்க்கப்பட்ட பாலத்தின் அருகே சிக்கியிருந்த இந்திய டாங்கை எப்படியும் அழிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்." என்று எழுதுகிறார்.

இந்தியாவிடம் போர் கைதியாக சிக்கியவர் பாகிஸ்தான் விமானப்படையின் தலைமை தளபதி ஆனது எப்படி?

பட மூலாதாரம், Westland

மேலும் அவர் குறிப்பிடுகையில், "நாங்கள் எங்கள் விமானப் படையிடமிருந்து பலமுறை பாதுகாப்பு கேட்கிறோம். ஆனால் எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை. ஏனென்றால் முறையான போர் அறிவிப்பு அப்போது செய்யப்படவில்லை. நாங்கள் சாதாரணமான இயந்திரத் துப்பாக்கிகளைக் கொண்டு இந்த விமானங்களை நோக்கிச் சுட்டுக் கொண்டிருந்தோம்," என்று பதிவு செய்கிறார்.

சில நிமிடங்களில் சேபர்களுடன் போரிட நேட் விமானம் வந்தது

அந்த சமயத்தில், தம் தம் விமான நிலையத்தில் ஃப்ளையிங் அதிகாரி டான் லாசரஸ் ஃப்ளையிங் அதிகாரி சுனித் சுவாரஸுடன் ஸ்கிராபிள் விளையாடிக் கொண்டிருந்தார்.

அதிகாலை 2.37 மணியளவில், தம் தம் ஏர் பேஸின் சைரன் ஒலிக்கத் தொடங்கியது. லாசரஸ் மற்றும் சுவாரஸ் ஸ்கிராபிள் விளையாட்டைக் கைவிட்டுத் தங்கள் நேட் விமானங்களை நோக்கி ஓடினர்.

மறுபுறம், ஃப்ளைட் லெப்டினென்ட்களான ராய் மாஸ்ஸி மற்றும் எம்.ஏ. கணபதி ஆகியோரும் தங்கள் விமானங்களை நோக்கி ஓடினர்.

பாகிஸ்தான் சேபர் ஜெட் விமானங்கள் '4 சீக்கிய' படையினரைத் தாக்கிய இடம், தம் தம் விமான நிலையத்திலிருந்து வடகிழக்கில் 50 மைல் தொலைவில் இருந்தது. இந்த நான்கு நேட் விமானங்கள் அங்கு செல்ல 8 முதல் 9 நிமிடங்கள் ஆனது. மறுபுறம், கேப்டன் பனாக் தனது கட்டுப்பாட்டில் இருந்த தளங்களில் உள்ள தளவாடங்களை ஆய்வு செய்துவிட்டு ஜீப்பில் திரும்பிக் கொண்டிருந்தார்.

விமானப்படை லெப்டினன்ட் ராய் மாஸ்ஸி, எம்.ஏ. கணபதி, டான் லாசரஸ் (இடமிருந்து வலம்)

பட மூலாதாரம், Bharatrakshak.com

படக்குறிப்பு, விமானப்படை லெப்டினன்ட் ராய் மாஸ்ஸி, எம்.ஏ. கணபதி, டான் லாசரஸ் (இடமிருந்து வலம்)

"சுமார் 3 மணியளவில் மூன்று சேபர் விமானங்கள் 1800 அடி உயரத்திற்குச் செல்வதையும் பின்னர் 500 அடிக்குக் கீழே வந்து குண்டுகளை வீசுவதையும் பார்த்தேன். அப்போது நான்கு விமானங்கள் மரத்தின் உயரத்தில், என் தலைக்கு மேல் பறப்பதைக் கண்டேன். அந்த விமானங்களின் வேகத்தில் என் ஜீப் ஆடிப்போனது," என்று பனாக் நினைவு கூர்கிறார்.

"பாகிஸ்தானிய விமானப்படை எங்களைத் தடுக்க அதன் முழு படைப்பிரிவையும் பயன்படுத்துகிறதோ என்று ஒரு கணம் தோன்றியது. ஆனால் பின்னர் நான்கு போர் விமானங்களும் தனித்தனியாகப் பிரிந்து ஒவ்வொரு சேபர் விமானத்தைத் தொடர்ந்து தாக்கத் தொடங்கின. நேட் விமானங்கள் களத்தில் இறங்கியதை சேபர்கள் உணரவேயில்லை. நான் அதை உணர்ந்து கொண்டேன். எனவே, நான் ஜீப்பை நிறுத்திவிட்டு இந்த விமானப் போரைப் பார்க்கத் தொடங்கினேன்," என்றும் அவர் கூறுகிறார்.

இந்தியாவின் போர் விமானம்

பட மூலாதாரம், Bharatrakshak.com

படக்குறிப்பு, இந்தியாவின் போர் விமானம்

முதல் தாக்குதலைச் செய்த மாஸ்ஸி

புகழ்பெற்ற விமானப்படை வரலாற்றாசிரியர்களான பி.வி.எஸ்.ஜகன்மோகன் மற்றும் சமீர் சோப்ரா ஆகியோர் தங்கள் 'ஈகிள்ஸ் ஓவர் பங்களாதேஷ்' புத்தகத்தில், "சேபர்களை முதலில் பார்த்தது வெகு தொலைவில் இருந்த சுவாரஸ்தான். மாஸ்ஸியும் கணபதியும் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் ஃபைட்டிங்க் பொசிஷனில் பறந்து கொண்டிருந்தனர். சுவாரஸ் வானொலியில் 'கான்டாக்ட்' என்று கூச்சலிட்டார், பின்னர் 'கானா டோனி' என்று சங்கேத மொழியில் கூறினார். அதாவது சேபர் உங்கள் வலதுபுறத்தில் 4000 அடி உயரத்தில் இருக்கிறது என்று தெரிவித்தார். ஆனால் அப்போதும் கணபதிக்கு சேபர் தென்படவில்லை. பின்னர் சுவாரஸ் வானொலியில், 'ஏர் க்ராஃப்ட் 8, இரண்டு மணி, ஒரு மணியை நோக்கி நகர்கிறது, 3 கிலோமீட்டர் முன்னால்" என்று தகவலளித்தார்.

இதற்கிடையில், மாஸ்ஸி சேபரைப் பார்த்து விட்டார். அவர் 800 கஜம் தூரத்தில் இருந்து சேபரை நோக்கி முதல் குண்டை வீசினார்.

150 கஜ தூரத்திலிருந்து சேபரைத் தாக்கினார் லசாரஸ்

தாக்குதலில் ஈடுபட்ட 4 நேட் விமானங்களில் ஒன்றை இயக்கியவரும் தற்போது மலேசியாவில் வசித்து வருபவருமான ஃப்ளையிங் ஆஃபீசர் லாசரஸ், அந்தப் போர்ச் சூழலை, நேற்று நடந்ததைப் போல, இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்.

இந்தியாவிடம் போர் கைதியாக சிக்கியவர் பாகிஸ்தான் விமானப்படையின் தலைமை தளபதி ஆனது எப்படி?

பட மூலாதாரம், HarperCollins

"அப்போது என் பார்வை மூன்றாவது சேபரில் பட்டது. அதனைப் பின் தொடர்ந்து என் விமானத்தை இயக்கினேன். 150 கஜம் தூரத்தில் இருந்து நான் அதை நோக்கிச் சுட்டேன். இது ஒரு சிறிய முயற்சிதான். 12 சுற்றுகள் தான் சுட்டிருப்பேன். அதற்குள் சேபர் தீப்பற்றியது. நான் வானொலி மூலம், 'ஐ காட் ஹிம், ஐ காட் ஹிம்' என்று தகவலளித்தேன். எனது நேட் விமானத்தின் பாதையில் தான் சேபர் வெடித்தது. வெடிப்பு எனக்கு மிக அருகாமையில் நடந்தது. சேபர் சிதைவின் பகுதிகள் என் நேட்டைத் தாக்கி அதன் 'மூக்கு கூம்புகள்' மற்றும் 'ட்ராப் டாங்க்ஸில்' ஒட்டிக்கொண்டன. "

மறுபுறம், மாஸ்ஸி தனது இரண்டாவது தாக்குதலை நிகழ்த்திய போது, ​​அவரது பீரங்கி செயலிழந்தது. ஆனால் அவரது மூன்றாவது தாக்குதல் சேபரின் 'போர்ட் விங்கில்' தாக்கியது. அதிலிருந்து புகை வெளியேறத் தொடங்கியது. விமானம் வீழ்த்தப்பட்டதற்கான சங்கேதக் குறியீடான 'மர்டர், மர்டர்' என்று வானொலி மூலம் தகவலளித்தார் மாஸ்ஸி.

டான் லாசரஸ்

பட மூலாதாரம், Don Lazarus

படக்குறிப்பு, டான் லாசரஸ்

பாகிஸ்தானிய விமானியைத் தாக்குதலிலிருந்து காத்த பனாக்

இதற்கிடையில், இந்தக் காட்சியைத் தரையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த கேப்டன் பனாக், இரண்டு சேபர் ஜெட் விமானங்கள் கீழே விழுந்து கொண்டிருப்பதையும் அவற்றில் இருந்து இரண்டு பாராசூட்டுகள் திறக்கப்படுவதையும் அவை தங்கள் வீரர்களை நோக்கி வருவதையும் பார்க்கிறார்.

"எங்கள் வீரர்கள் தங்கள் பதுங்கு குழிகளில் இருந்து வெளியே வந்து விழுந்து கொண்டிருக்கும் பாராசூட்டை நோக்கி ஓடினார்கள். போர்ச் சூழலில், எங்கள் வீரர்கள் பாகிஸ்தான் விமானிக்குத் தீங்கு விளைவிக்கக் கூடும் என்று நான் உணர்ந்தேன். நான் என் ஜீப்பை ஓட்டிக் கொண்டு போனேன். பின்னர் ஜீப்பை நிறுத்திவிட்டு, அந்த வழியில் வேகமாக ஓடினேன். நான் 50 கஜம் தொலைவில் இருந்தபோது, ​​எங்கள் வீரர்கள் விமானியை இறக்கிவிட்டு, அவரை துப்பாக்கியால் தாக்கியதைக் கண்டேன். நான் கூச்சலிட்டு அவர்களை நிறுத்தச் சொன்னேன். நான் அவருக்கு முன்னால் நின்று, எனது வீரர்களிடமிருந்து அவரைக் காப்பாற்றினேன்," என்று அவர் நினைவு கூர்கிறார்.

பாகிஸ்தான் சேபர் ஜெட் விமானங்களை இந்திய விமானப்படை தாக்கும் காட்சி

பட மூலாதாரம், Bharatrakshak.com

படக்குறிப்பு, பாகிஸ்தான் சேபர் ஜெட் விமானங்களை இந்திய விமானப்படை தாக்கும் காட்சி

பணப்பையில் மனைவியின் புகைப்படம்

அணிவகுத்து, அந்த விமானி எங்கள் படாலியன் தலைமையிடத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

"நான் அந்த விமானியின் நெற்றியில் பட்ட காயத்துக்கு மருந்திட்டு, அவருக்குத் தேநீர் வழங்கினேன். விமானியின் பெயர் ஃப்ளைட் லெப்டினன்ட் பர்வேஸ் மெஹந்தி குரேஷி. அவர் உயரமான வசீகரமான தோற்றம் கொண்டிருந்தார். அவர் 6 அடிக்கு மேல் இருந்திருக்க வேண்டும். அவர் தாக்கப்பட்டதால் சிறிது அச்சம் கொண்டிருந்தார். ஆனால் பின்னர் அவர் மிகவும் ஊக்கமுடன் காணப்பட்டார். டாக்காவை தளமாகக் கொண்ட பாகிஸ்தான் விமானப்படையின் 14 வது படைப்பிரிவின் படைத் தளபதியாக இருந்த இவருக்கு 'பாகிஸ்தான் விமானப்படை அகாடமியின் ஸ்வார்ட் ஆஃப் ஆனர்' அதாவது, சிறந்த விமானப் படை வீரர் என்ற பட்டம் வழங்கப்பட்டிருந்தது." என்று பனாக் கூறுகிறார்.

"நான் அவரது பணப்பையைத் தேடினேன், அதில் அவரது மனைவியின் படம் இருந்தது. அந்தப் படத்தை அவருக்குத் திருப்பிக் கொடுத்தேன். மேலும் அவரிடம் ஒரு கைக்கடிகாரம், 9 எம் எம் கைத்துப்பாக்கி, 20 சுற்று தோட்டாக்கள் மற்றும் ஓர் 'உயிர்காக்கும் கருவி' இருந்தது. நீங்கள் இப்போது போர்க் கைதியாக இருக்கிறீர்கள், நீங்கள் ஜெனீவா உடன்படிக்கையின்படி சிகிச்சை பெறுவீர்கள் என்று நான் அவரிடம் சொன்னேன். அவர் எங்கள் படைப்பிரிவு தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ​​அவர் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை, ஆனால் அவரது கண்களில் நான் அவரது நன்றியைத் தெளிவாகப் பார்த்தேன்."

இந்தச் சம்பவம் நடந்த அடுத்த நாள், பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் யாஹ்யா கான் பாகிஸ்தானில் அவசர நிலையை அறிவித்தார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, நவம்பர் 25 அன்று, "பத்து நாட்களுக்குள் எங்கள் படைகள் இந்தியாவுடன் போரிடும்" என்று ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

தம் தம் விமான தளத்தில் விமானிகளுக்கு அமோக வரவேற்பு

இந்திய விமானிகளை வரவேற்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜக்ஜீவன் ராம்

பட மூலாதாரம், Bharatrakshak.com

படக்குறிப்பு, இந்திய விமானிகளை வரவேற்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜக்ஜீவன் ராம்

இந்த முழு விமானப் போரும் இரண்டு அல்லது இரண்டரை நிமிடங்களில் முடிந்தது. இந்திய நேட் விமானங்கள் தம் தம் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, ​​அவர்களை வரவேற்க முழு விமான தளமும் அங்கு கூடியது.

"எங்கள் ஃபார்மேஷனின் கால் சைன் காக்டெய்ல் என்பதாகும். அவர் 'காக்டெய்ல் 1?' என்று கேட்டார். அதற்கு, 'மர்டர், மர்டர்' என்று பதில் சொன்னார், அதாவது ஒரு விமானம் வீழ்த்தப்பட்டது என்று பொருள். காக்டெய்ல் -2 'நெகடிவ்' என்றார். காக்டெய்ல் -3, 'மர்டர் மர்டர்' என்றும், நானும் 'மர்டர், மர்டர்' என்றும் சொன்னோம். நாங்கள் தரையிறங்குவதற்கு முன்பே இந்த தகவல்கள் அவர்களைச் சென்றடைந்தன," என்று லசாரஸ் நினைவு கூர்ந்தார்.

"நாங்கள் அங்கு தரையிறங்கியபோது, ​​எங்கள் விமானத்தை மக்கள் சூழ்ந்திருந்தனர். பொதுவாக பைலட் படிக்கட்டுகள் வழியாக இறங்குவார். நாட் விமானம் மிகவும் சிறியது. வழக்கமாக நாங்கள் அதிலிருந்து கீழே குதித்து விடுவோம். ஆனால் அன்று நாங்கள் இறங்கவே வழியில்லை. எங்கள் தோழர்கள் எங்களைத் தோள்களில் அமர்த்திக் கீழே இறக்கினர்."

இதற்குப் பிறகு, அந்த விமானிகள் அனைவருக்கும் ஹீரோக்களாக மாறினர். அவர்கள் எங்கு சென்றாலும் மக்கள் அவர்களைச் சூழ்ந்தனர். இந்திய விமானப்படை தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் பிசி லால் விசேஷப் பயணமாக கொல்கத்தா சென்று இந்த விமான வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

"உண்மையான போர் தொடங்குவதற்கு முன்பே நாங்கள் விமானப் போரில் வென்றோம்," என்றார் அவர்.

சில நாட்களுக்குப் பிறகு, பாதுகாப்பு அமைச்சர் ஜக்ஜீவன் ராம் மற்றும் கிழக்கு விமானப்படை கட்டளைத் தலைவர் ஏர் மார்ஷல் தேவான் ஆகியோரும் இந்த நான்கு விமானிகளையும், விமானக் கட்டுப்பாட்டாளர் கே.பி.பாக்ச்சி மற்றும் அவரது கட்டளை அதிகாரி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்க தம் தம் விமான தளத்துக்கு வந்தனர்.

அவர், இவர்கள் அனைவருக்கும் பூ மாலை அணிவித்து ஒரு நாட் விமானத்தில் ஏறி அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.

பாகிஸ்தானிய விமானப்படைத் தலைவரானார் பர்வேஸ் குரேஷி மெஹந்தி

இந்தியாவிடம் போர் கைதியாக சிக்கியவர் பாகிஸ்தான் விமானப்படையின் தலைமை தளபதி ஆனது எப்படி?

பட மூலாதாரம், Pakistan Air Force

இந்த போரில் பங்கேற்ற விமானிகளான மாஸ்ஸி, கணபதி மற்றும் லாசரஸ் மற்றும் விமான கட்டுப்பாட்டு அதிகாரி பாக்ச்சி ஆகியோர் வீர் சக்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

ஃப்ளைட் லெப்டினன்ட் பர்வேஸ் குரேஷி மெஹந்தி குவாலியரில் ஒன்றரை ஆண்டுகள் போர்க் கைதியாக இருந்தார்.

1997ஆம் ஆண்டில், பர்வேஸ் குரேஷி பாகிஸ்தான் விமானப்படையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அவர் இந்தப் பதவியை மூன்று ஆண்டுகள் வகித்தார். அடல் பிஹாரி வாஜ்பேயி 1999ல் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தபோது, ​​பிரதமர் நவாஸ் ஷெரீப் அவரை வாஜ்பேயிக்கு அறிமுகப்படுத்தினார்.

கார்கில் போர் விவகாரம் தொடர்பாக அப்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் பர்வேஸ் முஷாரப்புடன் அவருக்கு கருத்து வேறுபாடு இருந்ததாகவும், கார்கில் போரில் பாகிஸ்தான் விமானப்படையைச் சேர்க்க மறுத்துவிட்டதாகவும் பின்னர் தெரிவிக்கப்பட்டது.

ஏர் மார்ஷல் மெஹந்தியின் காக்பிட் இருக்கை, அவரது பாராசூட் மற்றும் சேபர் விமானத்தின் பகுதிகள் இன்னும் 4 சீக்கிய தலைமையகத்தில் நினைவுச் சின்னமாக வைக்கப்பட்டுள்ளன.

மெஹந்தி, 1971 போருக்கு முன்னர் போர்க் கைதியாக இருந்தார். 4 சீக்கியப் படையைச் சேர்ந்த கேப்டன் எச்.எஸ். பனாக் அவரைப் போர்க்கைதியாக்கினார்.

கேப்டன் பனாக், இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக ஓய்வு பெற்றார். இதற்கு முன்னர் அவர் வடக்கு மற்றும் மத்திய கட்டளைகளின் தலைமைத் தளபதியாகவும் இருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: