’இந்திய - சீன எல்லை பிரச்சனை மிகவும் குழப்பமானது’ - இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

பட மூலாதாரம், Getty Images
கிழக்கு லடாக்கில் உள்ள மெய்யான கட்டுப்பாட்டு கோட்டில் அமைதி நிலைகுலைந்து போயுள்ளதாகவும், இந்திய - சீன உறவுகளில் இது தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான உறவு மோசமாகி வருகிறது. இமயமலை பகுதியில், தங்களின் சர்ச்சைக்குரிய எல்லையில் இரு பெருநாடுகளும் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றன.
இரு நாடுகளும் அங்கு சுமார் 50,000 துருப்புகளை நிலைநிறுத்தியுள்ள நிலையில்தான் அமைச்சர் ஜெயசங்கர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்திய - சீன எல்லை பிரச்சனை மிகவும் குழப்பமான மற்றும் கடினமான விவகாரம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 3 தசாப்தங்களாக இரு நாடுகளுக்கு இடையே நிலவிவரும் உறவு குறித்து The India way என்று தான் எழுதியுள்ள புத்தகம் குறித்த ஆன்லைன் நிகழ்வு ஒன்றில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர், 1980களின் பிற்பாதியில் இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவு வர்த்தகம், சுற்றுலா போன்ற முயற்சிகளால் சற்று சீராக்கப்பட்டதாக தெரிவித்தார்.
"இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சனை என்பது மிகவும் குழப்பம் மிகுந்த ஒரு விவகாரம். பல ஆண்டுகளாக பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. ஆனால், இப்போது எல்லையில் அமைதி சீர்குலைந்துள்ளது. இது கட்டாயம் இந்தியா, சீனா இடையே உள்ள உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போது நாம் அதை தான் பார்க்கிறோம் என்றார் ஜெய்சங்கர்.
உலகில் முக்கிய இடத்தை பிடிக்க சீனாவும் இந்தியாவும் விரும்புகின்றன. ஆனால், இருநாடுகளும் தங்களுக்கான சமநிலையை எவ்வாறு அடையப்போகின்றன என்பதுதான் இங்கு மிகப்பெரிய கேள்வி என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
இதுகுறித்துதான் தனது புத்தகத்தில் எழுதியுள்ளதாக கூறிய அமைச்சர் ஜெயசங்கர், கிழக்கு லடாக் பதற்றம் தொடங்கும் முன்னரே இந்த புத்தகத்தை எழுதி முடித்துவிட்டதாக குறிப்பிட்டார்.
45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு இருநாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கு அதிகமாகவே உள்ளது.
1975ஆம் ஆண்டுக்கு பிறகு இருநாட்டுக்கும் இடையே நடைபெற்ற மோசமான மோதலாக கருதப்படுகிறது. அப்போதிலிருந்து இருநாட்டு உறவும் மோசமடைந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
சமீபத்திய உரசலுக்கு என்ன காரணம்?
சமீப ஆண்டுகளில், மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத் தளவாடங்கள் ஆகியவற்றின் போக்குவரத்தைத் துரிதப்படுத்த, எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்றன.

பட மூலாதாரம், Getty Images
இது அமைதியைக் குலைக்கும் முயற்சி என்று ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம், கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவங்களும் மோதிக்கொண்டன.
அப்போது இந்திய மற்றும் சீன ராணுவங்கள் இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டனர். சீன ராணுவத்தினர் இறந்தார்களா என்பது குறித்து தகவல் எதையும் சீனா வெளியிடவில்லை.
எனினும் சீன ராணுவ தரப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டது என்று சீனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. ஆனால் அதில் காயமடைந்தவர்கள் அல்லது இறந்தவர்களின் எண்ணிக்கை தெரிவிக்கப்படவில்லை.
இந்தியாவின் எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்திருந்தாலும், இந்திய எல்லைக்குள் சில கிலோமீட்டர் தூரம் நுழைந்த சீன படையினர், பல்லாயிரம் சதுர கிலோமீட்டர் இந்திய நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக பாதுகாப்புத் துறை மற்றும் உளவுத் துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதைத்தொடர்ந்து, இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே அவ்வப்போது மோதல் போக்கு நிலவி வந்தாலும், ராணுவ மட்டத்திலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனினும், எல்லை விவகாரத்தில் இறுதியான நிலைப்பாடு இதுவரை எட்டப்படவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












