வேலூரில் லஞ்சம் வாங்க வாடகைக்கு வீடு எடுத்த அதிகாரி - கோடிக்கணக்கில் ரொக்கம், தங்க நகைகள் பறிமுதல்

லஞ்சம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

வேலூர்‌ மண்டல இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில் சுமார் ரூ. 3.25 கோடி ரொக்கம், மூன்றரை கிலோ தங்கம்‌, ஆறரை கிலோ வெள்ளி நகைகள் மற்றும் பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டம் காட்பாடியில், மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் திருவள்ளுவர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பன்னீர்செல்வம் (வயது 51) என்பவர் வேலூர் மண்டல இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றி வருகிறார். மாசு கட்டுப்பாட்டு அலுவலகம் அருகே காந்தி நகரில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கி வந்த இவர், அந்த வீட்டை அலுவலக பணிக்காக பயன்படுத்தியாக கூறப்படுகிறது. இவரது கட்டுப்பாட்டில் ஒருங்கிணைந்த வேலூர்‌ மாவட்டம், கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, திருவண்ணாமலை, தர்மபுரி மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள் இருக்கின்றன.

இந்த மாவட்டங்களில் புதிதாக திறக்கப்படும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகளில் அனுமதி வழங்குவது, அவற்றைப் புதுப்பித்தல் மற்றும் பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் வழங்கி வருகின்றார். குறிப்பாக, இது போன்ற நிறுவனங்களில் நீர் மற்றும் காற்று மாசு படாமல் இருக்கும் வகையில் நடைபெறுகிறதா என முறையாக வழிமுறைகளைப் பின்பற்றுவது குறித்தும், விதியை மீறுபவர்களைக் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் இவரது பணியாக இருக்கிறது.

இதனிடையே மாதம்தோறும் இவரது மண்டல கட்டுப்பாட்டிற்குக் கீழ் வரும் மாவட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் துறை ரீதியாக ஆய்வுக் கூட்டம் நடத்தி வந்துள்ளார். அப்போது அவர்கள் கொண்டுவரும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க முறைகேடாக லட்சம் பெறுவதாக அவர்மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகளை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கண்காணித்தனர்.

லஞ்சம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி அன்று காட்பாடியில் உள்ள அலுவலகத்தில் மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவதாகவும், அதில் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க லஞ்சம் பெற இருப்பதாக தகவல் கிடைத்தது. பின்னர் கூட்டம் நடக்கும் அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்புத் துறை செல்வதற்குள் அங்கு ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்து, காந்தி நகரில் உள்ள அவரது வீட்டிற்குப் பன்னீர்செல்வம் சென்று விட்டார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், அவரது வீட்டிற்குச் சென்று முதல் கட்டமாகச் சோதனை நடத்தினார்கள். அப்போது ரூபாய் 33.73 லட்சம் ரொக்க பணம் மற்றும் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்‌ மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் பன்னீர்செல்வத்திற்குச் சொந்தமான வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்த சோதனையில், முறைகேடாக அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் கோடிக்கணக்கான ரொக்க பணம் மற்றும் நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. வீடு முழுவதும் நடைபெற்ற சோதனையில், ரூபாய் 3,25,20,000 கோடி ரொக்கப் பணமும், மூன்றரை கிலோ தங்க நகைகளும், ஆறரை கிலோ வெள்ளி நகை மற்றும் பொருட்கள் இருந்துள்ளது. மேலும் பல கோடி மதிப்பிலான நில பத்திரங்கள், வங்கி ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அவரிடம் துறை ரீதியாக விசாரணை மேற்கொண்ட வேளையில், பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகைகள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்க, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியை பிபிசி தொடர்பு கொண்டது. அப்போது அவர்கள், "வேலூர் மண்டல மாசுபாடு வாரியத்தின், இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் எம்.பன்னீர்செல்வம் தொழிற்சாலைகளுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு மாவட்ட ரீதியாக இடைத்தரகர்கள் மூலமாக லஞ்சம் பெறுவதாக புகார்கள் வந்தன. அவர் வேலூர் காந்தி நகரில் உள்ள வாடகை வீட்டில் அதிகாரப்பூர்வமற்ற அலுவலகத்தை நடத்தி வந்துள்ளார். இதன் அடிப்படையில் முதலில் அவரது அலுவலகமாகச் செயல்பட்டு வந்த வாடகை வீட்டில் சோதனை செய்தபோது ரூ. 33.73 லட்சம் ரொக்கம் அவரது வீடு மற்றும் வாகனத்தில் இருந்து கடந்த 13ஆம் தேதி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலர் கொடுத்த புகாரில் அடிப்படையில், அவர்மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தோம்," என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

"வழக்கு பதிவு செய்த பிறகு ராணிப்பேட்டையில் உள்ள அவரது சொந்த வீட்டில் சோதனை செய்தோம். அப்போது, ரூ. 3,25,20,000 ரொக்கம், மூன்றரை கிலோ தங்க நகைகள், ஆறரை கிலோ வெள்ளி நகைகள் மற்றும் 60 முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன," என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவரது வங்கி விவரங்கள், லாக்கர் குறித்து ஆய்வு செய்யப்படும். அதே சூழலில், மேற்கொண்டு இந்த குற்றச் சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: