மருத்துவக் கழிவுகளை எப்படி அப்புறப்படுத்த வேண்டும்? - கடலூர் ஆற்றங்கரையில் மனித கால்

Surgeons in operating theatre

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிக்கும் படம்
    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கடலூர் மாவட்டம் கெடிலம் ஆற்றின் கரையோரம் மனித கால் வெட்டப்பட்டுக் கிடந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

மனித உடல் பாகம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு வந்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அங்கிருந்த மனித உடல் பாகமானது யாரேனும் கொலை செய்து கால் பாகத்தை தூக்கி எறிந்து விட்டார்களா என முதல் கட்டமாக விசாரணை நடத்தினர்.

பின்னர் துண்டாகக் கண்டறியப்பட்ட மனித கால் பாதத்தில் கட்டுத் துணிகள் சுற்றப்பட்டிருந்ததைக் கண்டு காவல் துறையினர் அருகே இருந்த தனியார் மருத்துவமனை அலட்சியமாக இருக்கலாம் என்ற நோக்கில் விசாரணை நடத்தினர்.

அருகே இருந்த மருத்துவமனையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபருக்கு அண்மையில் கால் அகற்றப்பட்டது காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து கடலூர் மாவட்டம் புதுநகர் காவல் ஆய்வாளர் உதய குமார் கூறுகையில், "மருத்துவ நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக அகற்றப்பட்ட நோயாளியின் இடது கால் பாகத்தை‌ முறையாக அப்புறப்படுத்தாமல், வெளியே வீசியுள்ளனரா என்று விசாரணை மேற்கொண்டு வருகிறோம், " என்றார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

ஆனால் மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றது. மருத்துவ மற்றும் உயிர் மருத்துவ கழிவுகளை மருத்துவமனையிலிருந்து தினந்தோறும் உயிர் மருத்துவ கழிவு மேலாண்மை மையத்தினர் சரியாக கொண்டு சென்று விடுவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீது நோய்த் தொற்று பரவும்படி அலட்சியமாகச் செயல்பட்டதாக இந்தியத் தண்டனைச் சட்டம் 270ன்இ கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

அண்மைக் காலங்களாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா மற்றும் பல்நோக்கு சிகிச்சை செய்யும் அரசு‌ மற்றும் தனியார் மருத்துவமனைகள் அருகே மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது தொடர் குற்றச்சாட்டாக உள்ளது.

மருத்துவர்
படக்குறிப்பு, மருத்துவர் முத்துகுமரன்

மருத்து கழிவுகள் மற்றும் உயிர் மருத்துவ கழிவுகளை எவ்வாறு கையாள வேண்டும்?

இதன் வழிமுறைகள் குறித்து மருத்துவர் முத்துகுமரன் கூறுகையில், "ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ உள்ள மருத்துவமனைகளில் தினந்தோறும் உயிர் மருத்துவ கழிவு மேலாண்மை மையம் (Bio Medical waste management system) மூலமாக மருத்துவக் கழிவுகளை அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அதன் மூலமாகத் தினம்தோறும் மருத்துவ கழிவுகளை மருத்துவமனைகளிலிருந்து பெறப்படுகிறது.

குறிப்பாக, மருத்துவ உபயோக உபகரணங்களான ஊசி, பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பொருட்கள், மருத்துவ உபயோக துணிகள், காலாவதியான மாத்திரைகள், மனித உடல் கழிவுகள் என ஒவ்வொன்றாகத் தனித் தனியாகப் பிரித்துக் கையாளும் முறை உள்ளது. அதனடிப்படையில் உயிர் மருத்துவ கழிவு மேலாண்மை மையம் மூலமாக அந்தந்த மருத்துவமனையில் தினந்தோறும்‌ மருத்துவக் கழிவுகளைப் பெற்று அவர்கள் அதனை முறையாக அப்புறப்படுத்துகின்றனர்,"என்கிறார் அவர்.

உலகளாவிய அளவில் இந்த முறையைத்தான் மருத்துவமனைகள் ‌பின்பற்றி வருவதாகக் கூறுகிறார் மருத்துவர் முத்துகுமரன்.

"எந்த ஒரு மருத்துவமனைகளிலும், அங்கிருக்கும் மருத்துவக் கழிவுகளை வெளியே போடக்கூடாது. அது சட்டப்படி குற்றமாகும், முறையாக மருத்துவ கழிவுகளைத் தனித் தனியாகப் பிரித்து உயிர் மருத்துவ கழிவு மேலாண்மை மையத்திடம் ஒப்படைக்க வேண்டியது அந்தந்த மருத்துவமனையின்‌ கடமையாகும். இந்திய‌ மருத்துவ நிறுவன சட்டம் (Clinical Establishment act) விதிப்படி, இந்த வழி முறைகளை முறையாகப் பின்பற்றினால் மட்டுமே மருத்துவமனை இயக்குவதற்கான அனுமதி வழிக்கப்படும்," எனத் தெரிவித்துள்ளார் மருத்துவர் முத்துகுமரன்.

பிபிசி

சுற்றுச்சூழல் ஆர்வலர் கண்ணன் கூறுகையில், "இதுபோன்ற ‌மருத்துவமனைகளில் சிகிச்சையின் போது அகற்றப்படும் மனித உடல் உறுப்புகள் மற்றும் இதர மருத்துவக் கழிவுகளைப் பாதுகாப்பான‌ முறையில் கொண்டு சென்று இன்சினரேஷன் (Incineration - கழிவுப்பொருட்களில் உள்ள கரிமப் பொருட்களை எரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கழிவு சுத்திகரிப்பு செயல்முறை) மூலம் அதனை எரித்து விடுகின்றனர். பொதுவாகவே நோய்த் தொற்று விளைவிக்கக் கூடிய இதுபோன்ற ‌மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்தும் முறை இவ்வாறுதான் நடைபெறுகிறது," என்கிறார்.

பொதுவாகவே மருத்துவ உபகரண பொருட்களான‌ ஊசி, பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பொருட்களை மறுசுழற்சி செய்கின்றனர். ஆனால், மனித உடல் சம்பந்தப்பட்ட உயிர்‌ மருத்துவ கழிவுகளை முறையாகப் பிரித்து, இன்சினரேஷன் செய்யப்பட‌ வேண்டும். அவ்வாறு முறைப்படி செய்யத் தவறினால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார் கண்ணன்.

"இதுபோன்ற உயிர்‌ மருத்துவ கழிவுகள்‌ எவ்வாறு அப்புறப்படுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ கழகம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. இது மட்டுமல்லாது மருத்துவ உபகரணங்கள் மற்றும் காலாவதியான மருந்துக்களை எவ்வாறு அப்புறப்படுத்த வேண்டும் என்று வழிமுறைகளும் வழங்கியுள்ளது," என தெரிவிக்கிறார் ‌கண்ணன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: