சாதிக் கொடுமை: கடலூரில் தரையில் அமர வைக்கப்பட்ட தலித் பெண் ஊராட்சி தலைவர் - ஊராட்சி செயலர் கைது

தரையில் அமரவைக்கப்பட்ட தலித் ஊராட்சி தலைவர்
    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கடலூர் மாவட்டத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் சாதி அடிப்படையில் இழிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில் இது தொடர்பாக ஊராட்சி செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வார்டு உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள துணைத் தலைவர் இன்னும் தலைமறைவாக இருக்கிறார்.

இதுகுறித்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் லாமேக் , "கடலூர் மாவட்டம் புவனகிரி தெற்குத் திட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைத்து அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர் சிந்துஜா கைது செய்யப்பட்டார். அவர் மீது பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடி இனத்தவர் மீதான வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகன்ராஜ் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை தேடும் பணியில் காவல் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்," எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஊராட்சி துணைத் தலைவருடன் இணைந்து ஊராட்சி தலைவரை சாதிய ரீதியாகத் தொடர்ந்து அவமதித்த செயல்களுக்குத் துணையாக இருந்த 6வது வார்டு‌ உறுப்பினர் சுகுமார் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர் மீது பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடி இனத்தவர் வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 3(1)(r), 3(1)(m) மற்றும் 294b, 506(2) உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

என்ன நடந்தது?

அனைவரும் நாற்காலிகளில் அமர்ந்துள்ளபோது தலித் பெண் ஊராட்சி தலைவர் மட்டும் தரையில் அமர்ந்துள்ள படம் வெளியாகியது.

ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரான தம்மை, துணைத் தலைவர் தரையில் அமர வைத்து சாதிக் கொடுமைக்கு உள்ளாக்குவதாக ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி ஒன்றியத்தில் தெற்கு திட்டை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.‌ இவர்களில் சுமார் 100 குடும்பத்தினர் ஆதிதிராவிடர் சமுதாயத்தினரும், 500க்கு மேற்பட்ட இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்த குடும்பத்தினரும் இருக்கின்றனர்.

தெற்குத் திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தலித் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி சரவணகுமார் தெற்குத் திட்டை கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஓர் உறுப்பினர் உள்பட இந்த ஊராட்சி மன்றத்தில் மொத்தம் ஆறு‌ உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

ஆதிதிராவிடர் சமுதாயத்தைத் சேர்ந்த தெற்குத் திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி மற்றும் வார்டு உறுப்பினர் சுகந்தி இருவரையும் ஊராட்சி மன்ற ஆலோசனைக் கூட்டத்தின்‌ போது, அதே பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் துணை தலைவர் மோகன்ராஜ் தரையில் அமர வைப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் துணைத் தலைவர் ஜனவரி மாதம் நடைபெற்ற குடியரசு தினத்தன்று ஊராட்சி மன்றத் தலைவரைத் தேசியக் கொடி ஏற்ற அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

தற்போது ஆலோசனைக் கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பிறர் நாற்காலிகளில் அமர்ந்துள்ள சூழலில், ஊராட்சி மன்றத் தலைவர் மட்டும் தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தரையில் அமரவைக்கப்பட்ட தலித் ஊராட்சி தலைவர்

ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காக ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் இருவரையும் இதுபோன்று புறக்கணிப்பதாக இருவரும் குற்றச்சாட்டுகின்றனர்.

'கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டது'

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி சரவணகுமாரை பிபிசி சந்தித்து பேசியது.

"தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை நான் சங்கடங்களையே சந்தித்து வருகிறேன். கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று ஊராட்சி தலைவர் ‌என்ற அடிப்படையில் தேசிய கொடி ஏற்ற சென்றபோது, என்னைக் கொடி ஏற்ற அனுமதிக்கவில்லை. எனது தந்தை தான் இங்கே கொடி ஏற்றுவார்‌ எனக்கூறி எனக்கு அனுமதி மறுத்துவிட்டார் துணைத் தலைவர் மோகன்ராஜ்," என்கிறார் அவர்.

"பின்னர் ஊராட்சி மன்ற கூட்டத்திற்குத் துணைத் தலைவர் மோகன்ராஜ் அனைத்து ஏற்பாடுகளையும் செய்வார். ஆனால் கூட்டத்திற்குச் செல்லும்போது, அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நாற்காலிகளில் அவரும் மற்ற உறுப்பினர்களும் அமர்ந்திருப்பார்கள். எனக்கு நாற்காலி இல்லை என்பதைக் காரணம் காட்டி என்னையும், மற்றொரு ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினரான சுகந்தி என்பவரையும் தரையில் அமரச் சொல்வார்.

இதுவரை ‌நடைபெற்ற மூன்று கூட்டங்களில் இதே போன்று எங்கள் இருவரையும் தரையில் அமர வைத்தே மோகன்ராஜ் தலைமையில் கூட்டத்தை நடத்தியுள்ளார். தலைவர் என்ற முறையில் எதாவது கேட்டால், உனக்கு ஏதும் தெரியாது என்று கூறி ஒவ்வொரு முறையும் வாயடைத்து விடுவார். மக்கள்‌ நன்மைக்காக ஒவ்வொரு முறையும் அனுசரித்து வந்தேன்," என்று தெரிவிக்கிறார்.

இதேபோன்று அனைத்து நிகழ்வுகளிலும் தொடர்ந்து அவர்‌ புறக்கணிக்கப்பட்டு வந்த காரணத்தினால் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கூட பங்கேற்கவில்லை என்று கூறுகிறார் ராஜேஸ்வரி

"இதனிடையே, எங்கள் பகுதியில் குடிநீர் தேக்க நிலையம் சுத்தமில்லாத காரணத்தினால் தொடர்ந்து அதைப் பராமரித்து வந்த நபரிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து நான் மற்றும் துணைத் தலைவர் மோகன்ராஜ் இருவரும் இணைந்து வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் நான்கு மாதங்களுக்கு முன்பு அந்த குடிநீர் தேக்க நிலையத்தை மூடி னோம். கடந்த இரு‌ தினங்களுக்கு முன்பு பூட்டப்பட்டிருந்த குடிநீர் தேக்க நிலையத்தின்‌ பூட்டை மோகன்ராஜ் உடைத்து அதன் மீண்டும் பழைய நபரிடமே பொறுப்பை ஒப்படைத்தார். அப்போது, இதனைத் தடுத்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். இதுதொடர்பாக யாரிடம் புகார் தெரிவித்தாலும், மாவட்ட ஆட்சியரையே சந்தித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று மோகன்ராஜ் கூறினார்," என்று தெரிவித்துள்ளார் ராஜேஸ்வரி.

"துணைத் தலைவருக்கு அனைத்து உறுப்பினர்களும் அவர்களுக்குச் சாதகமாக இருப்பதால் எங்களால் எதிர்த்துச் செயல்படவும் முடியவில்லை. மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற நோக்கில் இதற்கு முன்புவரை எவ்வளவு அழுத்தத்தைச் சந்தித்தாலும், பொறுமையுடன் அனைத்தையும்‌ தாங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் தற்போது எல்லை மீறிச் செயல்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதன் காரணமாகவே எது நடந்தாலும் பரவாயில்லை நடப்பதைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற துணிச்சலில் தற்போது இதைச் சொல்கிறேன்," எனத் தெரிவித்துள்ளார் ராஜேஸ்வரி சரவணகுமார்.

மேலும், வார்டு‌ உறுப்பினர் சுகந்தி தமிழரசன் கூறுகையில், "சக மனிதர்களுக்கு கொடுக்கிற மரியாதையைக் கூட எங்களுக்குக் கொடுக்கவில்லை. நாங்கள் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இதுபோன்று புறக்கணிக்கப்பட்டு‌ வருகிறோம். அதனால் தான்‌ எங்கள் இருவரையும் ஊராட்சி கூட்டத்தின்போது அனைவர்‌‌ முன்னிலையில் தரையில் அமர வைத்தார். எதுவும் வெளியில் சொல்லிக்கொள்ள முடியாமல் வேதனைப்படுகிறோம்," என்கிறார் அவர்.

இதனிடையே இந்த குற்றச்சாட்டிற்கு உள்ளான ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகன்ராஜ் கருத்தை பிபிசி அறிய முற்பட்டபோது, அவர் கூறுகையில், "அவர்கள் கூறியது அனைத்துமே தவறான குற்றச்சாட்டு, நாங்கள் எதுவுமே இதுவரை அவர்களிடத்தில் அதுபோன்று கூறியதில்லை. நான் மற்றும் மற்ற வார்டு உறுப்பினர்கள் யாருமே தவறான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. இதுவரை தேசியக்கொடி ஏற்ற வேண்டாம்‌ என அவர்களிடம் சொல்லவில்லை. சுதந்திர தினத்தன்று அவர்கள் கொடி ஏற்ற வரவில்லை.

அவர்களை எப்போதுமே நாங்கள் தரையில் அமருமாறு கூறியதில்லை. அவர்களாகவே நான் தரையில் அமர்ந்து கொள்கிறேன் என்பார்கள். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பிரச்சனையை அன்று கொண்டு வராமல், மூன்று‌ மாதங்களுக்கு பிறகு தற்போது இதைப்பற்றிப் பேசுவது அவர்கள் உள் நோக்கத்துடன் செயல்படுகிறார்," என எனத் தெரிவித்துள்ளார் மோகன்ராஜ்.

மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் ராஜேஸ்வரியை சந்தித்து நடந்தவற்றை கேட்டறிந்தனர்.
படக்குறிப்பு, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் ராஜேஸ்வரியை சந்தித்து நடந்தவற்றை கேட்டறிந்தனர்.

மாவட்ட நிர்வாகம் தரப்பில் இதுகுறித்து விளக்கமளித்த அதிகாரி, "இது போன்ற பிரச்சனை இந்த பஞ்சாயத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊராட்சி மன்றத் தலைவர் தரையில் அமர்ந்தபடி இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியது. தற்போது இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் சம்மந்தப்பட்டவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் புகார் அளிக்கப்பட்டுள்ளது," எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் கூறுகையில், "இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் இருவர் மீது வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டத்தின் 3(1) (r) மற்றும் 3(1)(m) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது," எனத் தெரிவித்துள்ளார்.

sc st atrocities act

குறிப்பாக, பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினத்தவர் மீதான வன்கொடுமை தடுப்பு 2015 சட்டத்தின்படி, 3(1) (r) பிரிவானது, பொதுமக்களின் பார்வை படும்படி பட்டியல் பிரிவில் அல்லாதவர்கள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினரை அவமானப் படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே சீண்டுதல் மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கையில் ஈடுபடுவது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் 3(1) (m) பிரிவானது ஊராட்சி மன்றத் தலைவர்களைப் பணி செய்யவிடாமல் தடுப்பது. இவை இரண்டு சட்டத்திற்கும் தண்டனை காலம் 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரைச் சவக்குழி தோண்ட வைத்தனர். அந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவரைச் சுதந்திர தினத்தன்று கொடியேற்ற விடாமல் தடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியது. தொடர்ந்து இதுபோன்று தலித் சமுதாயத்திற்கு எதிராக நடைபெற்ற சம்பவங்கள் தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது.

இந்தியா சாதிய வன்கொடுமை சம்பவங்களைக் கண்காணித்து அவர்களுக்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் நீதிக்கான சாட்சியம் அமைப்பின் செயல் இயக்குநர் இ.பாண்டியன் கூறுகையில், " ஊராட்சி தலைவர்களை பொறுத்தமட்டில், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் இதுபோன்று இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒதுக்கப்படும் பகுதிகளில் வயதானவர்கள், படிப்பறிவு அற்றவர்கள் உள்ளிட்டவர்களைத் தலைவராக முன்னிறுத்தி அவர்களுக்குச் சாதகமாகச் செயல்படும் வகையில் கைப்பாவையாகச் செயல்படச் செய்கின்றனர். இதையடுத்து பொது ஜனநாயகத்தில் அவர்களுடைய கடமையைச் செய்ய முற்படும் போது, இதுபோன்ற தடங்கல்கள் இருந்துகொண்டே இருக்கும். தொடர்ந்து அவர்கள் சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட அனைத்திலும் அவர்களைச் செயலிழக்கச் செய்கின்றனர்.

இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு முறையும் நடந்த சம்பவத்திற்கு மட்டுமே தீர்வு காண சட்டங்கள் மூலம் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இதைத் தனித் தனி வழக்குகளாக அரசு பார்க்காமல், ஒட்டுமொத்த அடிப்படை ஜனநாயகத்திற்கான பிரச்சனையாகப் பார்க்கக்கூடிய நிலை ஏற்படாத வரை இதுபோன்ற தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்," என்கிறார் அவர்.

பாண்டியன்.
படக்குறிப்பு, பாண்டியன்.

"குறிப்பாக இதற்கு முன்பு நடைபெற்ற சம்பவங்களில் தொடர்ந்து அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கூட, அந்த சம்பவத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரின் பாதுகாப்பு எந்த நிலையில் இருக்கிறது தெரியாது. இதுபோன்று பாதிப்பிலிருந்து தவிர்க்க மாவட்ட நிர்வாகம் சார்பாகத் தமிழகம் முழுவதும் பொதுக் கருத்துக் கேட்கும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். குறைந்த பட்சம் ஆண்டிற்கு இரண்டு முறை இது போன்ற கூட்டம் மூலம் மாவட்ட ஆட்சியர் ஒவ்வொருவர் குறைகளை நேரடியாக அறிந்துகொள்ள முடியும். இதன்மூலம் அவர்கள் துணையாக இருக்கும் வகையில் பிரத்தியேகமாக உதவியாளரை நியமிப்பது மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கும், ஊராட்சி தலைவருக்கும் வெளிப்படையான உறவு ஏற்படும்," என்று கூறுகிறார் பாண்டியன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: