ஹாத்ரஸ் சம்பவம்: கொலைவெறி தாக்குதல், நள்ளிரவில் தகனம், முகத்தைக்கூட பார்க்காமல் தவித்த குடும்பம்

தங்களுடைய இழப்பில் இருந்து இன்னும் மீள முடியாத 19 வயதுப் பெண்ணின் குடும்பத்தினர்.

பட மூலாதாரம், ABHISHEK MATHUR/BBC

படக்குறிப்பு, தங்களுடைய இழப்பில் இருந்து இன்னும் மீள முடியாத 19 வயதுப் பெண்ணின் குடும்பத்தினர்.
    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி நியூஸ், ஹாத்ரஸில் இருந்து

செப்டம்பர் மாதத்தின் இறுதி நாளில், 19 வயது தலித் (முன்பு தீண்டத்தகாதவர்கள் என குறிப்பிடப்பட்டவர்கள்) பெண்ணின் உடலை அதிகாரிகள் கட்டாயமாக தகனம் செய்தார்கள் என்ற மனதை உலுக்கும் செய்தியுடன் இந்தியாவில் விடியல் ஏற்பட்டது. அந்தப் பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. முந்தைய நாள் அவர் மரணம் அடைந்த நிலையில், அவருடைய உடல் இப்படி தகனம் செய்யப்பட்டது.

இந்தச் செய்தி, உலக அளவில் கோபத்தை உருவாக்கியது. மேல்சாதி ஆண்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட இளம்பெண், இரண்டு வார காலம் உயிருக்குப் போராடி, மரணம் அடைந்த நிலையில், மரணத்திலும் இழிவுபடுத்தப் பட்டிருக்கிறார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தச் சம்பவம் நடந்த, உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்ட காவல் துறையினர், அவ்வாறு உடலை எரிப்பதற்கு அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்திருந்தனர் என்று கூறுகின்றனர்.

ஆனால், அதிகாலை 2.30 மணிக்கு அந்தப் பெண்ணின் உடலுக்கு எரியூட்டப்பட்ட சமயத்தில் அந்தக் கிராமத்தில் இருந்த செய்தியாளர்களும், அந்தப் பெண்ணின் குடும்பத்தினரும், பிபிசிக்கு அளித்த பேட்டியில், காவல் துறையினரின் தகவலை மறுத்துள்ளனர்.

செப்டம்பர் 29 ஆம் தேதி இரவு உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்காக, ஹாத்ரஸ் மாவட்டம் புல்கர்கி கிராமத்துக்கு நான் சென்றேன்.

அரசின் அதிகார பலத்திற்கும், உரிமைகள் மறுக்கப்பட்ட குடிமக்களுக்கும் இடையில் சமன்நிலையற்ற போராட்டத்தின் கதையாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதில் அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை. துயரத்தை மறக்க முயற்சிக்கும் அந்தக் குடும்பத்தினர் பற்றி அதிகாரிகள் கொஞ்சமும் கவலைப்படவில்லை.

உடல் எங்கே போனது?

``என் சகோதரி செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) காலை 6.55 மணிக்கு டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் மரணம் அடைந்தார். உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி காலை 9 மணிக்கு அவர்கள் சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கினார்கள்'' என்று இறந்தவரின் தம்பி தெரிவித்தார்.

``அப்போது தான் உடலை நாங்கள் கடைசியாகப் பார்த்தோம்'' என்றார் அவர். வீட்டில் வெறும் தரையில் அமர்ந்து, சுவரில் சாய்ந்தபடி நம்மிடம் அவர் பேசினார். மருத்துவமனை பகுதியில் அரசியல்வாதிகளும், செய்தியாளர்களும் நிறைய பேர் வந்து, இரங்கலைத் தெரிவித்துக் கொண்டனர்.

அலிகார் நகரில் உள்ள மருத்துவமனையில் இருந்து அந்தப் பெண்ணை டெல்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவருடைய சகோதரனும், தந்தையும் வேறு இரு ஆண் உறவினர்களும் உடன் சென்றிருந்தனர். அந்தப் பெண் தாக்கப்பட்ட செப்டம்பர் 14ல் இருந்து அலிகார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அந்தப் பெண் இறந்து சில மணி நேரம் கழித்து, உடலை எப்போது பெற்றுக் கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்வதற்காக, அவர்கள் தடயவியல் துறைக்குச் சென்று விசாரித்தனர். காவல் துறையினரும், அதிகாரிகளும் அப்பது முரண்பட்ட பதில்களை அளித்துள்ளனர்.

``உடலை ஏற்கெனவே கொடுத்துவிட்டோம் என ஒருவர் கூறினார். டெல்லி அருகே உத்தர பிரதேச மாநில எல்லையில் நொய்டாவுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு விட்டது என இன்னொருவர் தெரிவித்தார். உடல் ஹாத்ரஸ் கொண்டு செல்லப்பட்டுவிட்டது என வேறொருவர் குறிப்பிட்டார்.''

``எங்கள் அனுமதி இல்லாமல் உடலை எப்படி நீங்கள் எடுத்துச் செல்லலாம் என்று அவர்களிடம் நான் கேட்டேன்'' என்று அவருடைய சகோதரர் கூறினார்.

குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும் என்று இறந்த பெண்ணின் உறவுப் பெண்மணி தெரிவித்தார்.
படக்குறிப்பு, குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும் என்று இறந்த பெண்ணின் உறவுப் பெண்மணி தெரிவித்தார்.

உறவினர்கள் அங்கே விரைந்து சென்று, மருத்துவமனைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். உடலை தங்களிடம் தர வேண்டும் என்று அவர்கள் கோரினர். இந்து சாதிய ஆதிக்கத்தில் அடிமட்டத்தில் இருக்கும் தலித் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பீம் ஆர்மியைச் சேர்ந்தவர்கள் இவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கினர்.

கிராமத்தில் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் ஏற்கெனவே சோகத்தில் இருந்தனர்.

``காலையில் அவர்கள் அழைத்து, அவள் இறந்துவிட்டதாகக் கூறினர்'' என்று அந்தப் பெண்ணின் அண்ணி தெரிவித்தார். ``செல்போனில் அவர்கள் அழுதனர். இங்கும் எல்லோரும் அழுது கொண்டிருந்தோம்.''

``உடலை எப்போது வீட்டுக்குக் கொண்டு வருவீர்கள் என்று நாங்கள் கேட்டோம்'' என்று அவர் குறிப்பிட்டார்.

கிராமத்துக்குப் பயணம்

இரவு 9.30 மணி அளவில் கருப்பு வேன் ஒன்றில் தன்னையும், தந்தையையும் காவல் துறையினர் வலுக்கட்டாயமாக ஏற்றிக் கொண்டு 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்துக்கு அழைத்துச் சென்றதாக அந்தப் பெண்ணின் சகோதரர் தெரிவித்தார்.

``செல்லும் வழியில் எங்களுடைய வேனை நிறுத்தினார்கள். மூத்த காவல் துறை அதிகாரிகளும், வேறு அதிகாரிகளும் எங்களுடன் பேசுவதற்கு வந்தனர். ஹாத்ரஸ் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் பிரவீண்குமார் லக்ஸ்கரும் அதில் இருந்தார். எங்களை நேரடியாக மயானத்துக்கு அழைத்துச் செல்வார்கள் என்று அவர் எங்களிடம் கூறினார்'' என்று அவர் தெரிவித்தார்.

உடல் எங்கே இருக்கிறது என்றோ அல்லது உடலை எடுத்துக் கொண்டு ஆம்புலன்ஸ் எப்போது புறப்பட்டது என்றோ தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அவர் கூறினார். பிரேத பரிசோதனை பிற்பகல் 1 மணிக்கு முடிந்தது என்று கடந்த வாரம் பிபிசி ஹிந்தி சேவை செய்தியாளர் தில்நவாஸ் பாஷாவிடம், ஹாத்ரஸ் காவல் கண்காணிப்பாளர் விக்ரந்தர் விர் கூறியுள்ளார்.

அந்தக் கிராமத்திலும், இறந்த பெண்ணின் வீட்டுக்கு வெளியிலும் நூற்றுக்கணக்கான காவல் துறையினர் காவலில் ஈடுபட்டுள்ளனர்.

பட மூலாதாரம், ABHISHEK MATHUR/BBC

படக்குறிப்பு, அந்தக் கிராமத்திலும், இறந்த பெண்ணின் வீட்டுக்கு வெளியிலும் நூற்றுக்கணக்கான காவல் துறையினர் காவலில் ஈடுபட்டுள்ளனர்.

``ஆனால் சில காரணங்களால் அவருடைய உடலை உடனடியாகக் கொண்டு செல்ல முடியவில்லை. அந்தக் கிராமத்துக்கு உடல் சென்று சேருவதற்கு இரவு நேரமாகிவிட்டது. இறந்தவரின் தந்தையும், சகோதரரும் உடலுடன் பயணம் செய்தனர்'' என்று காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

``பணியில் அலட்சியம் மற்றும் கவனக் குறைவான மேற்பார்வை'' காரணங்களுக்காக திரு. விர் கடந்த வாரம் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இறுதிச் சடங்குகளுக்கு ஆயத்தம்

உடல் வந்து சேருவதற்காக குடும்பத்தினர் காத்திருந்த சமயத்தில், இரவிலேயே இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை காவல் துறையினரும், நிர்வாக அதிகாரிகளும் தொடங்கிவிட்டனர்.

``ஒரு ஜெனரேட்டர் கொண்டு வந்து, மின் விளக்குகளை கட்டினர். கட்டைகளும், எரிப்பதற்கான பொருளும் கொண்டு வரப்பட்டன'' என்று அந்தப் பெண்ணின் அண்ணி தெரிவித்தார்.

அந்தக் குடும்பத்தினரின் வீட்டுக்குச் செல்ல முடியாதபடி தடுப்புக் கட்டைகள் கட்டப்பட்டிருந்தன என்று அந்தப் பகுதி செய்தியாளர்கள் தெரிவித்தனர். இறுதிச் சடங்கு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறிய வயலுக்குச் செல்லும் மண் சாலையிலும் தடுப்புக் கட்டைகளைக் கட்டியிருந்தனர்.

ஏறத்தாழ நள்ளிரவு நேரத்தில், உடலை எடுத்துக் கொண்டு ஒரு வெள்ளை நிற ஆம்புலன்ஸ் கிராமத்தில் நுழைந்தது.

தங்களுடைய சம்மதம் இல்லாமலே, நள்ளிரவில் உடலை தகனம் செய்ய அதிகாரிகள் ஏற்பாடுகளைச் செய்தனர் என்று அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், ABHISHEK MATHUR / BBC

படக்குறிப்பு, தங்களுடைய சம்மதம் இல்லாமலே, நள்ளிரவில் உடலை தகனம் செய்ய அதிகாரிகள் ஏற்பாடுகளைச் செய்தனர் என்று அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

``ஆம்புலன்ஸ் வாகனத்தில் டிரைவரும், ஆண் காவலர் ஒருவரும், பெண் காவலர் ஒருவரும் இருந்தனர். குடும்ப உறுப்பினர்கள் யாரும் அதில் இல்லை'' என்று இறந்த பெண்ணின் அத்தை தெரிவித்தார்.

``சுமார் ஒரு மணி நேரம் அங்கே நிறுத்தி இருந்தனர். முகத்தையாவது பார்க்க அனுமதியுங்கள் என்று அவர்களிடம் நாங்கள் கேட்டோம்'' என்று கண்ணீர் வடிய அவர் என்னிடம் கூறினார்.

அந்தப் பெண்ணின் சகோதரர் மற்றும் தந்தையை ஏற்றி வந்த வேன் சுமார் 1 மணிக்கு வந்து சேர்ந்ததும், நேராக உடலை எரிக்கவிருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

உடலுக்கு உரிமை கோரும் முயற்சி

``இந்துக்கள் இரவில் உடலை தகனம் செய்ய மாட்டார்கள். இறுதிச் சடங்குகள் செய்யாமல், எங்கள் குடும்பத்தினர் இல்லாமல் தகனம் செய்யக் கூடாது என்று அவர்களிடம் நான் கூறினேன். நாங்கள் வீட்டுக்குச் சென்றபோது, உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் ஏற்கெனவே கிராமத்துக்கு வந்துவிட்டதாகக் கூறினர்'' என்று அவருடைய சகோதரர் தெரிவித்தார்.

அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற அதிகாரிகள், உடலை ஏற்றியிருந்த சிதைக்கு தீ மூட்ட வருமாறு அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

``உடலை எங்களிடம் கொடுத்துவிடுங்கள். இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டும் என்று கெஞ்சி அதிகாரிகளின் கால்களில் பெண்கள் விழுந்து கதறினார்கள். ஆனால் அவர்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை'' என்று அவர் தெரிவித்தார்.

இறந்த பெண்ணின் உடலை பெறுவதற்காக, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் எடுத்த முயற்சிகளைக் காட்டும் வீடியோக்கள் செய்தி டிவிகளிலும், சமூக ஊடகங்களிலும் பரவின.

மகளை இழந்த அந்தத் தாயை, இறந்த பெண்ணின் அண்ணி ஆறுதல் சொல்லி தேற்றுகிறார்.
படக்குறிப்பு, மகளை இழந்த அந்தத் தாயை, இறந்த பெண்ணின் அண்ணி ஆறுதல் சொல்லி தேற்றுகிறார்.

காரின் பானட் மீது தலையை வைத்து அவருடைய தாயார் அழுது கொண்டிருக்கும் ஒரு வீடியோ உள்ளது. இன்னொரு வீடியோவில் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு எதிரே சாலையில் அமர்ந்து, மார்பில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைக்கிறார்.

கடைசியாக ஒரு முறை உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்று, இறுதிச் சடங்குகள் செய்வதற்காக எங்களிடம் கொடுங்கள் என்று அதிகாரிகளிடம் அவர் திரும்பத் திரும்ப கெஞ்சுவதை வீடியோவில் காண முடிகிறது.

``அவளுடைய கைகள் மற்றும் கால்களில் மஞ்சளும் சந்தனமும் பூசி, புதிய ஆடைகள் அணிவித்து, பூக்கள் வைக்க விரும்பினோம். அவளால் அதைப் பார்க்க முடியாது. ஆனால் சடங்குகளைச் செய்வதன் மூலம் அவளுக்கு முறையாக விடைகொடுக்க விரும்பினோம்'' என்று கண்ணீரை அடக்கிக் கொண்டு நம்மிடம் பேசிய அந்தப் பெண்ணின் அண்ணி தெரிவித்தார்.

தன்னுடைய முழங்கைகளில் ஏற்பட்டிருந்த சிராய்ப்புக் காயங்களை அவர் என்னிடம் காட்டினார். ``எங்களை தள்ளிவிட்டு உடலை எடுத்துக் கொண்டு சென்று விட்டார்கள். எங்களில் பல பேர் வயலில் விழுந்துவிட்டோம்'' என்று அவர் கூறினார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சிதைக்கு தீ மூட்டினர்

குடும்பத்தினர் ஒப்புக்கொள்ள மறுத்தாலும், 19 வயதுப் பெண்ணின் உடலை அந்த இரவிலேயே தீயிட்டு எரித்துவிட்டனர்.

``எங்களைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று சிதைக்கு தீ மூட்டும்படி செய்துவிடக் கூடாது என்பதற்காக வீட்டில் புகுந்து தாளிட்டுக் கொண்டோம்'' என்று அந்தப் பெண்ணின் சகோதரர் கூறினார். ``வெளியில் என்ன நடக்கிறது என்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாமல் இருந்தது'' என்றார் அவர்.

சுமார் 2.30 மணி அளவில் உடலுக்கு தீ வைக்கப்பட்டதாக, உடல் எரிக்கப்பட்ட இடத்தில் இருந்து சற்று தொலைவில் இருந்த உள்ளூர் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

கிராம மக்களும், செய்தியாளர்களும் அருகில் செல்ல முடியாதவாறு காவல் துறையினர் கைகளை கோர்த்துக் கொண்டு மனிதசங்கிலி போல நின்றிருந்தனர்.

``காவல் துறையினர் ஏன் அந்த உடலுக்குத் தீயிட வேண்டும்? அது கேட்பாரற்ற உடலா?'' என்று அவருடைய தாயார் கேட்கிறார். ``என் வயிற்றில் 9 மாதங்கள் அவளை நான் சுமந்திருக்கிறேன். கடைசியாக ஒரு முறை அவளுடைய முகத்தைப் பார்க்க எனக்கு உரிமை கிடையாதா? அழுவதற்குக் கூட எனக்கு உரிமை இல்லையா? எனக்கு வலி இருக்காதா?'' என்று அடுக்கடுக்காக அவர் கேள்விகள் கேட்கிறார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உருவ பொம்மையை போராட்டக்காரர்கள் எரித்தனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உருவ பொம்மையை போராட்டக்காரர்கள் எரித்தனர்.

அவசர அவசரமாக உடல் எரிக்கப்பட்ட சம்பவம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. ``அப்பட்டமான மனித உரிமை மீறல்'' , ``சட்ட விரோதமானது'' ``நெறியற்றது'' என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இதைக் கண்டித்து இந்தியா முழுக்க போராட்டங்கள் நடந்தன. அமெரிக்காவில் பல நகரங்களில் இந்தியர்கள் இதற்காகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். ``இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராகப் பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது வருத்தத்தையும், கவலையையும் தருகிறது'' என்று ஐ.நா.வும் கூட கூறியுள்ளது.

``அசாதாரணமான சூழ்நிலைகள் காரணமாகவும், சட்டவிரோத சம்பவங்களின் தொடர்ச்சியாகவும்'' இரவில் உடலை எரித்ததாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் உத்தர பிரதேச அரசு கூறியுள்ளது.

மாநிலத்தில் சாதி மற்றும் மத கலவரங்களைத் தூண்டுவதற்கும், இந்தியாவில் மிகவும் சர்ச்சைக்குரிய வலதுசாரி அரசியல்வாதிகளில் ஒருவரான முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கவும் ``சர்வதேச சதி'' நடப்பதாகவும் அரசு கூறியுள்ளது. உடல் எரியூட்டப்பட்ட போது, அந்தப் பெண்ணின் குடும்பத்தினரும் இருந்தனர் என்றும், ``வன்முறைகளைத் தவிர்க்க, உடல் தகனத்தின் போது வருவதற்கு சம்மதித்தனர்'' என்றும் அரசு கூறியுள்ளது.

முன்னதாகவும் கூட, சிதை எரியும்போது 3 ஆண்கள் கட்டைகளை எடுத்துப் போடுவதைப் போன்ற ஒரு வீடியோவை ஹாத்ரஸ் காவல் துறையினர் வெளியிட்டனர்.

ஆனால், அதில் இருப்பவர்கள் தூரத்து உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்கள் என்றும், ஆனால் அவர்களை குடும்பத்தில் நெருக்கமானவர்கள் என்பது போல காட்ட காவல் துறையினர் முயற்சிப்பதாகவும், பிபிசியிடம் அந்தக் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சாம்பல் குவியல்

அதன்பிறகு 3 நாட்கள் கழிந்த நிலையில், பாலியல் வன்முறை எதிர்ப்பு இயக்கவாதி யோகிதா பாயனா அந்தக் குடும்பத்தினரை சந்தித்து, உடல் எரிக்கப்பட்ட இடத்துக்குச் செல்ல சம்மதிக்க வைத்தார். அங்கிருந்து சாம்பலை சேகரித்தனர்.

``அது ஒருவேளை என் சகோதரியின் உடலாக இருந்தால், தெரு நாய்கள் அதை அசிங்கப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக அவற்றை நான் சேகரிக்கிறேன்'' என்று ஒரு செய்திச் சேனலிடம் அவர் கூறினார். ``வாழ்ந்த காலத்தில் அவள் நிறைய கொடுமைகளை அனுபவித்தாள். சாவுக்குப் பிறகும் அப்படி நடக்கக் கூடாது என விரும்புகிறேன்'' என்று அவர் குறிப்பிட்டார்.

இறந்த அந்த இளம்பெண்ணின் சாம்பல் குவியல் மட்டுமே மிஞ்சியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இறந்த அந்த இளம்பெண்ணின் சாம்பல் குவியல் மட்டுமே மிஞ்சியுள்ளது.

புல்கர்கி கிராமத்தில் உடல் எரிக்கப்பட்ட ஒரு வாரம் கழித்து, எரிக்கப்பட்ட சிறிய வயல் பகுதியை நான் பார்த்தேன்.

லேசான புன்னகை மற்றும் கருமையான நீண்ட கூந்தல் கொண்ட அந்த டீன் ஏஜ் பெண்ணின் உடலில் மிஞ்சியது செவ்வக வடிவில் குவிந்திருந்த சாம்பல் மட்டுமே.

நீதி கிடைக்கும் என்று அவருடைய குடும்பத்தினர் நம்பியுள்ளனர்.

``அவர்களைத் தூக்கில் போட வேண்டும்'' என்று இறந்த பெண்ணின் அண்ணி கூறினார். ``அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன். 24 மணி நேரமும் அவள் என்னுடன் தான் இருப்பாள். என் மனதைவிட்டு அவளுடைய முகம் இன்னும் அகலவே இல்லை'' என்று அவர் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: